ரிஷப் பண்ட்டின் ரசிகர் மன்றத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் : ட்விட்டரில் குவிகிறது பாராட்டு மழை (#DCvsSRH) 

Rishabh Pant - Image Courtesy (BCCI/IPLT20.com)
Rishabh Pant - Image Courtesy (BCCI/IPLT20.com)

12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பிளே ஆப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல் தகுதி சுற்றில் சென்னை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. நேற்று நடந்த எலிமினிட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது.


மேட்ச் விவரம்:

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி ஐதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்திலும் விருத்திமான் சாகாவும் களமிறங்கினர். சாகா சொற்ப ரன்களில் அவுட்டாக, கப்தில் 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டேவும் கேனே வில்லியம்சனும் நிதானமாக ஆடினர். இருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் அவுட்டாகினர். முதல் ஆறு ஓவர்களில் 54 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அடுத்த 9 ஓவர்களில் 50 ரன்களையே குவித்தது. அதனால் 150 ரன்களை தாண்டுமா என்ற நிலை இருந்தது. இறுதிகட்ட ஓவர்களில் விஜய் சங்கர் மற்றும் முகமது நபி ஆகியோரது உதவியால் அந்த அணி 162 என்ற நல்ல ஸ்கோரை எடுத்தது.

அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணிக்கு தவானும் பிரித்வி ஷாவும் நல்ல துவக்கத்தை அளித்தனர். இந்த ஜோடியை தீபக் ஹூடா பிரித்தார். தவான் 17 ரன்களில் அவுட்டாக, அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் (8) மற்றும் அரைசதம் அடித்த பிரித்வி ஷாவும் (56) கலீல் அகமதின் ஒரே ஓவரில் அவுட்டாகினர். இதனால் டெல்லி அணி சற்று தடுமாறியது. 15வது ஓவரை வீசிய ரஷித் கான் காலின் முன்ரோ மற்றும் அக்சர் படேல் ஆகியோரை வெளியேற்றி மற்றுமொரு டபுள் செக் வைத்தார். அந்த ஓவரும் மெய்டனாகியது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது கிரீசில் ரிஷப் பண்ட்டும் ஷெர்ஃபேன் ரூதர்போர்டும் இருந்தனர். டெல்லி அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 42 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரை பசில் தம்பிக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தார் வில்லியம்சன். அருமையாக பந்துவீசிய கலீல் அகமதுக்கு இரண்டு ஓவர்கள் மிச்சமிருந்தும் அவர் தம்பிக்கு வாய்ப்பளித்தார் வில்லியம்சன். பசில் தம்பியின் ஒரே ஓவரில் டெல்லி அணி 22 ரன்களை அள்ளியது. ரிஷப் பண்ட் தனி ஆளாக டெல்லி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 21 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார், அதில் 5 சிக்சரும் 2 பவுண்டரியும் அடங்கும். ரிஷப் பண்ட் 19வது ஓவரில் அவுட்டானார். அவர் அவுட்டானாலும் கீமோ பால் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

ட்விட்டரில் பாராட்டு மழை :

ரிஷப் பண்ட்டின் அபார ஆட்டத்தால் அவரை சமூக வலைத்தளங்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆகியோர் அவரை வாழ்த்து மழையில் நனைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அவரை உலககோப்பை அணியில் சேர்க்காமல் இந்திய அணி மிகப்பெரிய தவறிழைத்து விட்டதாகவும் சாடியுள்ளனர். மைக்கேல் வாகன், சஞ்சய் மஞ்ச்ரேகர், ஆகாஷ் சோப்ரா சினிமா நடிகர் சித்தார்த் ஆகியோர் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

Quick Links