உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற மே மாதம் இங்கிலாந்து மண்ணில் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இம்முறை கோப்பையை தட்டிச்செல்லும் என்றும் பல கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடரில் எப்போதும் சிறப்பாகவே விளையாடும். இரண்டு முறை கோப்பை வென்றுள்ள இந்திய அணி, 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் முதல் முறையாக வென்றது. இரண்டாவது முறையாக தோனியின் தலைமையில் 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் சாதித்தது.
1996 மற்றும் 2003ம் ஆண்டு கோப்பையின் அருகே சென்று இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்தியாவை பொறுத்த வரை உலகக்கோப்பையில் பல சாதனைகளை முறியடித்தும், நிறைவேற்றியும் உள்ளது. அப்படி அரங்கேறிய 4 முக்கியமான பதிவுகளை இத்தொகுப்பில் காணலாம்.
#1 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள்
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர போட்டியாளரான சச்சின் டெண்டுல்கர் இதுவரை 44 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 2278 ரன்கள் எடுத்து, உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். முதல் முதலாக 1992ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய சச்சின், 2011ம் ஆண்டு கோப்பையை வென்று தனது நீண்ட கனவை பூர்திசெய்தார். 1996 மற்றும் 2003ம் ஆண்டுகள் இவருக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. 1996ல் 500 ரன்களுக்கு மேல் எடுத்தும், 2003ம் ஆண்டு 650 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த தனிநபர் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இந்த இரண்டு ஆண்டும் இந்திய அணி சிறப்பாக விளையாடியும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2011ம் ஆண்டும் ஓரளவுக்கு சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இவரை தவிர எந்த வீரரும் உலகக்கோப்பையில் 2000 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை. இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 42 இன்னிங்சில் 1743 ரன்கள் எடுத்துள்ளார்.இந்திய வீரர்கள் பொறுத்தவரை சச்சினுக்கு அடுத்த படியாக சவுரவ் கங்குலி 1000 ரன்களை கடந்துள்ளார்.
#2 அதிக 3 வது மற்றும் 9 வது விக்கெட் பார்ட்னெர்ஷிப்
கிரிக்கெட்டில் இரண்டு வீரர்கள் சேர்ந்து கூட்டணி அமைப்பது மிக முக்கியம். அப்படிப்பட்ட கூட்டணிகள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இதன் முக்கியம் பல ரசிகர்களுக்கு புரிந்திருக்கும். இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. அப்போது களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், சரியான அடித்தளம் அமைத்து 140/8 என்ற நிலைக்கு கொண்டுசென்றார்.
கிர்மானியும் கபில்தேவும் சேர்ந்து 9வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்ததே உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை 9வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். கபில்தேவ் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். அதேபோல் 3வது விக்கெட்டுக்கு டிராவிட் மற்றும் சச்சின் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் கென்யா அணிக்கு எதிராக 237 ரன்கள் சேர்த்தனர். இதற்கு முந்தய போட்டி நடைபெற்றபோது சச்சினின் தந்தை இறுதி சடங்கிற்காக சச்சின் சொந்த ஊருக்கு சென்று காரியம் முடித்திவிட்டு அடுத்த போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.