2019 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா vs நியூசிலாந்து, கடந்தகால நேருக்கு நேர் மற்றும் நட்சத்திர வீரர்கள்

Virat kholi vs Kane Williamson
Virat kholi vs Kane Williamson

இந்திய அணி 2019 உலகக் கோப்பையின் தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை கெனிங்டன் ஓவல் மைதானத்தில் மே 25 அன்று எதிர்கொள்ள உள்ளது.

நேருக்கு நேர்: இதுவரை 106 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 55 வெற்றிகளும், நியூசிலாந்து அணி 45 வெற்றிகளும் பெற்றுள்ளது. ஒரு போட்டி சமமாகவும், மற்ற 5 போட்டிகள் முடிவில்லாமலும் இருந்துள்ளது.

நேரலை: இந்தியா- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் & ஹாட்ஸ்டார், நியூசிலாந்து- ஸ்கை ஸ்போர்ட்ஸ் நியூசிலாந்து & ஸ்கை கோ பாஸ்

இந்தியா:

இந்திய அணி 2019 உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் முண்ணனி அணியாக திகழ்கிறது. இருப்பினும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் முன்பாக அணியை சரியாக மேம்படுத்த இந்த இரு பயிற்சி ஆட்டங்கள் உதவியாக இருக்கும். இந்திய அணி சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-2 என தோல்வியை தழுவியது. எனவே விராட் கோலி அனைத்து வீரர்களையும் பயிற்சி ஆட்டத்தில் சரியாக சோதனை செய்வார் எனத் தெரிகிறது.

நட்சத்திர வீரர்கள்

விராட் கோலி, ஷீகார் தவான், ரோகித் சர்மா, எம்.எஸ்.தோனி ஆகியோர் பேட்டிங்கில் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இந்திய அணி நிர்வாகம் முதல் ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்யும். பௌலிங்கில் முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா சிறப்பான வேகப்பந்து வீச்சை மேற்கொள்வார்கள்

சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ள வீரர்கள்

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் அணி நிர்வாகம் அதிக கவனம் செலுத்தும். தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், விஜய் சங்கர், கே.எல்.ராகுல் ஆகியோர் இந்திய அணியின் நம்பர்-4 மற்றும் நம்பர்-5 பேட்டிங் வரிசைக்கு அதிகம் போட்டி போடுகின்றனர். அத்துடன் பயிற்சி ஆட்டத்தில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் எவ்வாறு பந்துவீச்சை மேற்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்கள் ஆடும் XI-ல் இடம்பெறுவர்.

இந்திய உலகக்கோப்பை அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷீகார் தவான், விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால்.

நியூசிலாந்து

2015 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி 2019 உலகக் கோப்பையில் தான் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தனது வெற்றி பயணத்தை தொடங்க வேண்டும் என்னும் நோக்கில் களமிறங்க உள்ளது. 2019ல் நியூசிலாந்து அணி வெளிநாட்டு மண்ணில் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. எனவே இந்த இரு பயிற்சி ஆட்டத்தினை நியூசிலாந்து சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது அணியை கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள்

மார்டின் கப்தில், கானே வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் நியூசிலாந்து அணியின் வலிமையான பேட்ஸ்மேன்கள் ஆவர். இவர்கள் ஒரு சிறந்த அனுபவ பேட்ஸ்மேன்கள். இவர்களின் ஆட்டத்திறனை பொறுத்தே நியூசிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவு உள்ளது. பௌலிங்கை பொறுத்தவரை மிட்செல் சான்ட்னர், டிம் சௌதி, டிரென்ட் போல்ட் ஆகியோர் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ள வீரர்கள்

டாம் லேதம் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காத காரணத்தால் டாம் பிளன்டல் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார். டாம் பிளன்டல் தனக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என நம்பப்படுகிறது. காலின் முன்ரோ மற்றும் ஹன்றி நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க பேட்டிங் இடத்திற்கு போட்டி போடுகின்றனர். ஸ்சோதி, மேட் ஹான்றி, லாக்கி பெர்குசன் ஆகியோரும் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அதிகம் கவனிக்கப்படுவர்.

நியூசிலாந்து உலகக் கோப்பை அணி:

கானே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், மார்டின் கப்தில், காலின் முன்ரோ, ஹன்றி நிக்கோல்ஸ், டாம் பிளன்டல், காலின் டி கிரான்ட் ஹாம், டிரென்ட் போல்ட், ஸ்சோதி, டிம் சௌதி, டாம் லேதம், ஜேம்ஸ் நிஷம், லாக்கி பெர்குசன், மிட்செல் சான்ட்னர், மேட் ஹான்றி.

Quick Links