கிரிக்கெட் வரலாற்றில் அபூர்வம் : ஒரே T-20 போட்டியில் 134 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அரிய சாதனை படைத்த இந்திய வீரர்.

K Gowtham.
K Gowtham.

T-20 கிரிக்கெட்டை பொறுத்த வரையில் ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிப்பதும், ஒரு பந்து வீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதும் ஒரு சிறந்த சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு அரிய விஷயங்களையும் ஒரு வீரர் ஒரே போட்டியில் செய்தால் அது நிச்சயம் மிகப்பெரிய நம்ப முடியாத ஒரு சாதனைதான். அப்படிப்பட்ட ஒரு சாதனையை நேற்று நிகழ்த்தினார் 'கிருஷ்ணப்பா கௌதம்'.

கர்நாடகாவின் உள்ளூர் T-20 கிரிக்கெட் தொடரான 'கர்நாடகா பிரீமியர் லீக்' (KPL) தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தான் இந்த அரிய சாதனையை கௌதம் நிகழ்த்தினார்.

'பெல்லாரி டஸ்கர்ஸ்' மற்றும் 'சிவமோகா லயன்ஸ்' ஆகிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று பெங்களூர் நகரத்தில் நடை பெற்றது. இதில் டாஸ் வென்ற டஸ்கர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க விக்கெட்டை விரைவில் இழந்தாலும் 3-ஆம் நிலை வீரராக களமிறங்கிய ஆல்-ரவுண்டர் 'கிருஷ்ணப்பா கௌதம்' பட்டையை கிளப்பினார்.

சிவமோகா லயன்ஸ் அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டி அடித்து மளமளவென ரன்கள் சேர்த்தார். மழை காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் கௌதம் சிக்சர் மழை பொழிந்தார். ஷரத் பந்துவீச்சை சிக்ஸர் விளாசி தனது சதத்தை 39 பந்துகளில் எட்டி அசத்தினார் கௌதம். 'கர்நாடகா பிரீமியர் லீக்' (KPL) தொடரில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதம் இதுவாகும்.

சதம் அடித்த பிறகும் தனது ரன் வேட்டையை நிறுத்தாத கௌதமின் அதிரடியை இறுதிவரையில் லயன்ஸ் அணி பந்துவீச்சாளர்களால் நிறுத்த முடியவில்லை. முடிவில் கௌதம் 56 பந்துகளில் 134 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 13 மெகா சிக்ஸர்கள் அடங்கும். மேலும் 'கர்நாடகா பிரீமியர் லீக்' (KPL) தொடரில் ஒரு வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் இது பதிவானது.

K Gowtham - Scored a Ton & a 8-fer in T-20.
K Gowtham - Scored a Ton & a 8-fer in T-20.

கௌதமின் அதிரடியால் பெல்லாரி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. மிகக் கடின இலக்கை நோக்கி தனது இன்னிங்சை தொடங்கிய சிவமோகா லயன்ஸ் அணிக்கு மீண்டும் கௌதம் எமனாக வருவார் என அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்னிங்சின் 2-வது ஓவரிலயே விக்கெட்டை வீழ்த்தி தனது பந்துவீச்சை தொடங்கினார் கௌதம். இந்த ஒரு ஓவருக்கு பிறகு கௌதமின் பந்து வீச்சை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்காததால் லயன்ஸ் அணி 11 ஓவர்களில் 102-2 என நல்ல நிலையில் இருந்தது. ஆனால் 12-வது ஓவரில் மீண்டும் பந்து வீச வந்த கௌதம் அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லயன்ஸ் அணிக்கு செக் வைத்தார்.

அவரது எஞ்சிய இரண்டு ஓவர்களில் மேலும் 4 விக்கட்டுகளை கௌதம் வீழ்த்த முடிவில் சிவமோகா லயன்ஸ் அணி 16.3 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 70 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. சுழற்பந்து வீச்சில் மிரட்டிய கௌதம் 4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார் (4-0-15-8).

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் மிரட்டிய கௌதம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். T-20 போட்டியில் மிகச் சிறந்த தனிநபர் பந்துவீச்சு இதுவாகும். ஆனால் இந்த KPL தொடர் அங்கீகரிக்கப்படாத ஒரு T-20 போட்டி தொடராக இருப்பதால் கௌதமின் இந்த சிறப்பான செயல்பாடுகள் சாதனையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது வேதனையான விஷயமாகும்.

Edited by Fambeat Tamil