பொதுவாக வலது கை வீரர்களைவிட இடது கை வீரர்கள் அதிக நுட்பம் மற்றும் சிறந்த செயல்முறை கொண்ட வீரர்களாக இருப்பர். அது பந்துவீச்சு என்றாலும் சரி அல்லது பேட்டிங் என்றாலும் சரி அவர்கள் வலது கை வீரர்களைவிட சற்று மேலேயே இருப்பர். எடுத்துகாட்டாக ஒரு வலது கை பந்துவீச்சாளரின் பொதுவான டெலிவரி, வலது கை டெலிவரி (Right Arm Delivery) இந்த வகை பந்துகளைக் கொண்டு ஒரு இடது கை மட்டைவீச்சாளரை LBW மூலம் அவுட் செய்வது என்பது கடினம். ஒன்று அந்தப் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியில் பட்டுவிடும் அப்படி இல்லை என்றால் அந்தப் பந்து ஸ்டம்பை தாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் இதுவே ஒரு இடது கை பந்துவீச்சாளர் வலது கை மட்டை வீச்சாளர்களுக்கு எமனாக அமைவர். அவர்கள் பந்தை அவர்களிடமிருந்து விலகி மற்றும் உள்நோக்கி வரவும் செய்வர்.
குறிப்பு:
இதில் வரும் மட்டை மற்றும் பந்துவீச்சாளர்கள் அவர்களுடைய தனி திறமையில் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பர். ஆல்ரவுண்டர் எனும்பொழுது இரண்டுமே இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பார்.
1.கிரீஸ் கெயில் (Chris Gayle)
இவரைக் குறைந்த ஓவர் போட்டிகளின் அரக்கன் என்றே சொல்லலாம். கிரீஸ் கெயில் உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடிய வீரர் ஆவார். உலகதரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை இவர் அடித்து நொறுக்கும் விதம் இவரை இந்த 20 ஓவர் போட்டியின் அரசனாக வைத்து இருக்கிறது. கெயில் என்றாலே பயம்.
கெயில் மொத்தம் 52 இன்னிங்ஸில் 1600 ரன்கள் அடித்து உள்ளார்.அவரது சராசரி 33.48. அது மட்டுமின்றி இவர் இரண்டு செஞ்சுரியும் அடித்துள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் செஞ்சுரி அடித்தா முதல் வீரரும் இவர்தான். 20 ஓவர் போட்டி என்றாலேயே அவருக்குத் தனி குஷிதான். இந்த வடிவ போட்டியின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர் என்றால் அது கெயில்தான்.
2. டேவிட் வார்னர் (David Warner)
இப்பொழுது உள்ள சூழ்நிலை இவருக்குச் சாதகமாக இல்லை என்றாலும் இவர் 20 ஓவர் போட்டியின் இன்னொரு அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர் ஆவார். ஆஸ்திரேலியா அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் களம்கானும் வீரர் இவர். தனது அணிக்கு அசுரவேக தொடக்கம் தருவதில் வல்லவர்.
இவர் இதுவரை 70 சர்வதேச போட்டிகளில் களம்கண்டு சுமார் 1792 ரன்கள் குவித்து உள்ளார். இவரது சராசரி 26.75 மற்றும் இவரது ஸ்டிரைக் ரேட் 140.11 ஆகும். இவர் கெயில் உடன் நமது அணியில் இணைந்தால் எதிரணி பந்துவீச்சாளர்கள் நிலைமை அவ்வுளவுதான். வார்னர் – பாக்கெட் சைஸ் டைனமோ.
3. சுரேஷ் ரெய்னா (Suresh Raina)
உங்களுக்கே இவரைப் பற்றித் தெரிந்திருக்கும். ஆம் இவர்தான் நமது இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா. இவர் ஒருநாள் போட்டிகளில் சற்று சரிவு கண்டாலும் 20 ஓவர் போட்டிகளில் இவர்தான் ராஜா. இவரின் தாக்கத்தை ஐபில் போட்டிகளில் பார்த்து இருப்பீர்கள்.
சுரேஷ் ரெய்னா இதுவரை 66 இன்னிங்ஸில் 1600 ரன்கள் அடித்து உள்ளார். இவர் 30+ சராசரி மற்றும் 134 S/R வைத்து உள்ளார். இந்தியாவின் நம்பகமான 20 ஓவர் போட்டியாளர் ரெய்னா. 20 ஓவர் போட்டிகளில் இந்தியா சார்பாக முதல் நூறு அடித்த இந்திய வீரர் ரெய்னா. அதை உலககோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளாசினார்.
4. இயோன் மோர்கன் (Eoin Morgan(C))
நமது இடது கை வீரர்களை வழி நடத்த மோர்கன் எனும் விடாமுயற்சி கொண்ட ஒரு தலைவனைத் தவிர வேறு யாராலும் முடியாது. சிறுவடிவிலான போட்டிகளில் மோர்கன் ஒரு மேட்ச் வின்னர் ஆகவே திகழ்கிறார். நான்காவதாகக் களம் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்துவதில் வல்லவர். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.
இவர் 73 இன்னிங்ஸில் 1723 ரன்கள் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் குவித்து உள்ளார். இவரது சராசரி 28.72 மற்றும் இவரது S/R 131.53 ஆகும். நமது அணியின் நான்காவது வீரருக்குப் பொருத்தமான வீரர். இவரே நமது இடது கை வீரர்கள் அணியின் கேப்டன்.