துல்லியமான யார்க்கர்கள்.!! பறக்கும் ஸ்டம்ப்புகள்.!! - நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு தன் இருப்பை தெரியப்படுத்திய 'மிட்செல் ஸ்டார்க்'.

Australia Won easily against Derby.
Australia Won easily against Derby.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடைபெறும் பாரம்பரிய டெஸ்ட் தொடரான 'ஆஷஸ்' போட்டி தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியை ஆஸ்திரேலியா அணி வெல்ல, இரண்டாவது போட்டி மழையால் டிரா ஆனது. 3-வது போட்டியில் 'பென் ஸ்டோக்ஸ்' தனது அசாத்திய இன்னிங்சால் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி 'மான்செஸ்டர்' மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னோட்டமாக ஆஸ்திரேலிய அணி 'டெர்பிஷயர்' அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெர்பி அணிக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 'மைக்கேல் நேசர்' ஆரம்பத்திலேயே குடைச்சல் கொடுத்தார். பின்னர் சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த டெர்பி அணிக்கு கடும் தொல்லையாய் அமைந்தார் ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 'மிட்செல் ஸ்டார்க்'.

ஆட்டத்தின் 47-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஸ்டார்க். முடிவில் இந்திய அணி 52.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சிறப்பாக தாக்கு பிடித்து விளையாடிய 'லியூஸ் டூ பிளோய்' 86 ரன்கள் சேர்த்தார். ஆஸி அணியில் அதிகபட்சமாக ஸ்டார்க் மற்றும் நேசர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க நிலை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை அளித்தனர். மார்கஸ் ஹாரிஸ் 64, உஸ்மான் கவாஜா 72, மிட்செல் மார்ஷ் 74 என அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தில் தலையில் காயமடைந்து வெளியேறிய 'ஸ்டீவ் ஸ்மித்' இந்த போட்டியில் களம் கண்டு 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Starc is in Red Hot form now.
Starc is in Red Hot form now.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 92 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் டெர்பி அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் அவர்களுக்கு கடும் தொல்லையாய் அமைந்தார் ஸ்டார்க்.

ஸ்டார்க்கின் துல்லியமான யார்க்கர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் டெர்பி அணி பேட்ஸ்மேன்கள் வேகமாக நடையை கட்டினர். முதல் இன்னிங்சை போலவே இதிலும் சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடிய 'லியூஸ் டூ பிளோய்' 37 ரன்கள் சேர்த்தார். முடிவில் டெர்பி அணி 36.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டித்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த ஆஸி வேகப்பந்து வீச்சாளர் 'மிட்செல் ஸ்டார்க்' இந்த ஆஷஸ் தொடரில் கடந்த 3 போட்டிகளிலும் இடம்பெறவில்லை. தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய 2 பேரின் இடம் உறுதியாகி விட்டது.

3-வது வேகப்பந்து வீச்சாளரின் இடம் இன்னும் முழுமை பெறவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் பீட்டர் சிடில் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக செயல்படவில்லை. எனவே தற்போதைய நிலையில் சூப்பர் ஃபார்மில் இருக்கும் ஸ்டார்க் 4-வது போட்டியில் விளையாட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

ஸ்டார்க்கின் வருகையை அந்நாட்டு ரசிகர்களும் பெரிதாக எதிர்பார்க்கின்றனர். ஸ்டார்க்கின் துல்லியமான பவுன்சர்கள் மற்றும் யார்க்கர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.