ஐசிசி உலகக்கோப்பை 2019 : தங்கள் கடைசி உலகக்கோப்பையை விளையாட போகும் டாப் 10 வீரர்கள்.   

தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கின் தூணாக விளங்கிவரும் ஆம்லா
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கின் தூணாக விளங்கிவரும் ஆம்லா

2019 உலகக்கோப்பைக்கான வருடம், இதில் உலகின் தலைசிறந்த அணிகள் கோப்பைக்காக போட்டியிட போவது நாம் அறிந்ததே. வழக்கமாக உலகக்கோப்பை முடிந்தவுடன் சில வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து பிரியாவிடை பெறுவார்கள். அதேபோல் இம்முறையும் சிறந்த வீரர்கள் சிலர் கடைசி முறையாக உலகக்கோப்பையை வெல்லும் அணியில் இடம்பெறவேண்டும் என முயற்சித்து வருகின்றனர்.

விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற அதிர்ஷ்டவசமான வீரர்கள் தங்கள் பங்கேற்ற முதல் உலககோப்பையிலேயே கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தனர். ஆனால் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஆறு உலகக்கோப்பையில் பங்கேற்று தான் விளையாடிய கடைசி உலகக்கோப்பை தொடரை வென்றதனுடன் கிரிக்கெட்டில் இருந்து பிரியாவிடை பெற்றார்.

மேலும் சவுரவ் கங்குலி, வீவீஎஸ் லட்சுமண், ராகுல் டிராவிட் போன்ற சிறந்த வீரர்கள் உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெறவே இல்லை. இவர்களை போன்ற சிறந்த வீரர்களுக்கு உலகக்கோப்பையை வெள்ளாதது பெரிய வருத்தம் தான்.

அதே போல் இவ்வருடம் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை தொடர் நிறைவுபெறும் போது சிறந்த வீரர்கள் சிலர் ஓய்வு பெற இருக்கின்றனர், அதில் டாப் 10 வீரர்களை பற்றி விரிவாக காண்போம்.

#10. ஹாசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா) - வயது - 35

ஒருநாள் போட்டிகளில் - போட்டிகள் - 174, இன்னிங்ஸ் - 171, ரன்கள் - 7910, சதம் - 27, அரைசதம் - 37

ஆம்லா கடந்த 15 வருடங்களாக தென்னாபிரிக்காவின் பேட்டிங்கிற்கு தூணாக விளங்கி வருகின்றார். 2004-ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆம்லா, ஒருநாள் போட்டிகளில் 2008-ல் தான் அறிமுகமானார். அவரை தென் ஆப்பிரிக்கா நிர்வாகம் ஓர் சிறந்த டெஸ்ட் வீரராக தான் நினைத்துகொண்டு இருந்தது.

கிப்ஸ், க்ரீம் ஸ்மித், ஏ பி டி வில்லியர்ஸ் போன்ற சிறந்த பேட்டிங் வரிசை கொண்டிருந்த தென்னாபிரிக்கா அணிக்கு, ஆம்லாவை போல் ஓர் நிலையான பேட்ஸ்மேன் மூன்றாம் இடத்தில் விளையாடவேண்டிய கட்டாயமாக இருந்தது. 2008-ல் அறிமுகமானதிலிருந்து ஆம்லா அவரது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதோடு அணைத்து விதமான போட்டிகளிலும் ஆம்லா இடம்பெற்று வருகிறார்.

ஒருநாள் போட்டிகளில் 12 வருடமாக விளையாடி வரும் ஆம்லா கடந்த 5 வருடத்தில் சராசரியாக 800 ரன்களை குவித்து வருகின்றார். இவரது ஸ்டரைக் ரேட் 89, பல சிறந்த வீரர்களை விட அதிகமாகவே இருக்கிறது.

இதுவரை இரண்டு உலகக்கோப்பையில் 2011,2015 பங்கேற்று உள்ள ஆம்லா இரண்டு தொடரிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

#9. ஷோயிப் மாலிக் (பாகிஸ்தான்) - வயது - 37

ஷோயிப் மாலிக் - உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில்
ஷோயிப் மாலிக் - உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில்

போட்டிகள் - 279, இன்னிங்ஸ் - 250, ரன்கள் - 7379, சதம் - 7, அரைசதம் - 50, விக்கெட்டுகள் - 156

தற்போது விளையாடி கொண்டிருக்கும் வீரர்களிளேயே மூத்தவர் மாலிக், ஒருநாள் போட்டிகளில் 1999-ம் வருடத்தில் அறிமுகமானார். ஸ்பின்னராக அறிமுகமான மாலிக் முதல் 4 வருடத்தில் தனது பௌலிங் திறமைக்காகவே அணியில் இடம்பெற்றிருந்தார். சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவர் ஒருநாள் போட்டிகளில் 150+ விக்கெட்டுகள் எடுத்தது. இது ஓர் வழக்கமான பௌலருக்கே சிறந்த சாதனை ஆகும்.

மாலிக் 2003-ல் ஓர் வழக்கமான பேட்ஸ்மேனாக உருவெடுத்தார், அதைத்தொடர்ந்து அடுத்த ஆறு வருடத்தில் 600 ரன்கள் முறையே குவித்து வந்தார். இவரது பயணத்தில் சந்தேகத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இவர் 2003, 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களில் மாலிக் அணியில் இடம் பெறவில்லை. 2007-ல் நடைபெற்ற உலகக்கோப்பையில் மட்டுமே அவர் இடம்பெற்றார். அதிலும் பாகிஸ்தான் அணி விரைவில் தொடரை விட்டு வெளியேறியது.

மாலிக் அவரது கடைசி உலகக்கோப்பையில் தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வார் என நம்பலாம்.

#8. மஷ்ரபி மொர்டாசா (வங்கதேசம்) - வயது - 35

மஷ்ரபி மொர்டாசா - வங்கேச அணியின் கேப்டன்
மஷ்ரபி மொர்டாசா - வங்கேச அணியின் கேப்டன்

போட்டிகள் -205 , விக்கெட்டுகள் -259, ரன்கள் -1752

வங்கதேச அணியின் கேப்டனான மொர்டாசா தனது கடைசி கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடி வருகிறார். 2001-ல் அறிமுகமான இவர் உடல்தகுதி சரியில்லாத காரணத்தினால் அணியில் சிலசமயம் இடம்பெற்றும், சிலசமயங்களில் இடம்பெறாமலும் இருந்து வந்தார். இருந்தும் இவர் ஒவ்வொரு முறை காயங்களில் இருந்து தைரியமாக மீண்டுவந்தார்.

அனால் இவரது பௌலிங் வேகம் ஒவ்வொரு காயத்திற்கு பின்பு படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது. தற்போது இவர் இன்னிங்ஸின் துவக்கத்திலேயே 7 முதல் 8 ஓவர்கள் வரை முடித்துக்கொள்கிறார்.

இந்திய அணியின் ரசிகர்கள் இவரை எளிதில் மறக்க மாட்டார்கள், 2007 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இவரது சிறப்பான பௌலிங்கால் இந்தியா அணி தடுமாறியது. இவர் அந்த போட்டியில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் தோல்வியுற்றதன் மூலம் இந்திய அணி தொடரிலிருந்தே வெளியேறியது. காயத்தில் இருந்து மீண்டு வந்த இவர் 2018-ல் 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வங்கதேச அணியின் கேப்டனான இவர் பலமுறை தைரியமாக பெரிய அணியை எதிர்கொண்டு விளையாடி உள்ளார், அதில் சில போட்டிகளில் வென்றும் அசத்தியுள்ளார். முக்கியமாக 2018-ன் ஆசிய கோப்பை தொடரில் இறுதிபோட்டி வரை தனது அணியை வழிநடத்தினார். பெரிய அணிகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் உலகக்கோப்பை வரை ஒத்துழைக்க இவரது உடல்நிலையை வற்புறுத்திவருகிறார் மொர்டாசா, இதுவே இவர் பங்கேற்கும் கடைசி தொடராக இருக்கும் என நம்பலாம்.

#7. டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா) - வயது - 35

ஸ்டெய்ன் - தென் ஆப்பிரிக்காவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்
ஸ்டெய்ன் - தென் ஆப்பிரிக்காவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்

போட்டிகள் - 124, விக்கெட்டுகள் - 195

டேல் ஸ்டெய்ன் விளையாடிய கடைசி உலகக்கோப்பை போட்டி தனக்கும் தனது அணிக்கும் தோல்வியை பெற்றுத்தந்தது. அரையிறுதி போட்டியில் கடைசி ஒவரில் நியூஸிலாந்து அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டெய்ன் பந்துவீசினார். கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நியூஸிலாந்தின் கிராண்ட் எலியட் ஸ்டெய்ன் வீசிய பந்தில் நியூஸிலாந்திற்கு வெற்றியை பெற்று தந்தார். இதன் மூலம் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்கா அணி வெளியேறியது.

அந்நிகழ்வு ஸ்டெய்னின் மனதில் இன்றும் நினைவில் இருக்கும். அடுத்து அவருக்கு ஏற்பட்ட காயத்தோடு அவரது பயணம் முடிந்தது என பலரும் நினைத்தனர். அனால் அதில் இருந்து மீண்டு தென் அப்பிரிக்காவிற்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி ஷான் பொல்லாக்கின் 421 டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தென் அப்பிரிக்காவிற்கு அதிக விக்கெட்டுகளை பெற்றுத்தந்த பெருமையையும் அடைந்தார் ஸ்டெய்ன். அதேபோல் வரும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று தனது அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

#6. ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா) - வயது - 35

மார்ஷ் - ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத நிலையில் அணிக்கு அதிக பங்களித்து வருகின்றார்
மார்ஷ் - ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத நிலையில் அணிக்கு அதிக பங்களித்து வருகின்றார்

போட்டிகள் – 63, இன்னிங்ஸ் – 62, ரன்கள் – 2536, சதங்கள் – 7, அரைசதங்கள் - 13

முதல்தர போட்டிகளில் 10,000 ரன்களை குவித்த ஷான் மார்ஷ், ஆஸ்திரேலியா அணியில் அதை தொடர முடியவில்லை. ஐபிஎல் முதலாம் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணி நிர்வாகிகளை கவர்ந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் 616 ரன்களை குவித்தார். இவரது சராசரி 68, ஸ்ட்ரைக் ரேட் 140 ஆக இருந்தது. அதன் மூலமாக ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றார் மார்ஷ்.

முதல்வரிசை பேட்ஸ்மேனாக விளையாடி கொண்டிருந்த மார்ஷ், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், மைக் ஹஸ்ஸி போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு நடுவரிசையில் விளையாட துவங்கினார். இவர் தான் விளையாடிய முதல் 10 ஒருநாள் போட்டிகளில் 5 அரைசதங்களை பதிவு செய்தார். இவரது முதல் சதமானது இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தார், அதன்மூலம் அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றியும் பெற்றது.

முதல் மூன்று வருடத்தில் 29 போட்டிகளில் விளையாடிய மார்ஷ் அடுத்த 6 வருடங்களாய் இவரின் உடல்தகுதி மற்றும் பேட்டிங் திறன் குறைந்த காரணத்தினால் வெறும் 24 போட்டிகளிலே விளையாடினார்.

2018-ல் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத நிலையில் மார்ஷ் பொறுப்புடன் விளையாடி 7 போட்டிகளில் 416 ரன்கள் குவித்தார். சராசரி 59, ஸ்ட்ரைக் ரேட் 109 இதில் 3 சதங்களும் அடங்கும்.

2008-ல் அறிமுகமான மார்ஷ் இதுவரை உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையில் நிச்சயம் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்துவார் என நம்பலாம். அதை தொடர்ந்தும் விளையாட வாய்ப்புள்ள மார்ஷ் அடுத்த உலகக்கோப்பை வரை தொடர்வது சந்தேகம் தான்.

#5. லசித் மலிங்கா ( இலங்கை ) - வயது - 35

மலிங்கா - இலங்கை அணியின் கேப்டன்
மலிங்கா - இலங்கை அணியின் கேப்டன்

போட்டிகள் – 213, விக்கெட்டுகள் – 318

யார்க்கர் பந்துகள் மூலம் பேட்ஸ்மேன்களை தினறடிக்கும் வல்லமை பெற்றவர் மலிங்கா. 2004-ல் இருந்து இலங்கை அணியில் இடம்பெற்று வருகிறார். உலகக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்படக்கூடிய மலிங்கா, முதலில் பங்கேற்ற 2007 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு 2011 உலகக்கோப்பை தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு தொடரிலும் இலங்கை அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு முக்கிய காரணமாய் இருந்தார் மலிங்கா.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். கடைசியாக இலங்கை அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மலிங்கா தற்போது இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலும் இருக்கிறார்.

வருகின்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியில் நல்வழியில் நடத்துவார் என நம்பலாம்.

#4. பாப் டு பிளெசீ (தென் ஆப்பிரிக்கா) - வயது - 34

அதிக சுமைகளை தாங்கி வரும் டு ப்ளெசீ
அதிக சுமைகளை தாங்கி வரும் டு ப்ளெசீ

போட்டிகள் – 129, இன்னிங்ஸ் – 123, ரன்கள் – 4848, சதங்கள் – 10, அரைசதங்கள் – 31

டு பிளெசீ ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக 2011-ம் ஆண்டு களமிறங்கினார். அவரது முதல் போட்டியில் 60 ரன்கள் குவித்திருந்தும், முதல் மூன்று வருடங்களில் அவரது ஒருநாள் போட்டிகளின் சராசரி 30 ஆக தான் இருந்தது. அதன் பிறகு 2014-ல் ஜிம்பாப்வேவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். இத்தொடரின் இறுதி போட்டியிலும் 96 ரன்களை குவித்திருந்தார் டு பிளெசீ. அதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தொடரையும் வென்றது.

2014-ல் இருந்து தொடர்ந்து டு பிளெசீயின் சராசரி 50 ஆக இருந்துவருகிறது. டி வில்லியர்ஸ் மற்றும் டேவிட் மில்லருடன் சேர்ந்து இவர் தென்னாபிரிக்கா அணியின் நடுவரிசை பேட்டிங்கின் முதுகெலும்பாய் இருந்து வந்தார். தற்போது டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்ற நிலையில் டு பிளெசீ மீது பொறுப்புகள் அதிகம் குவிந்துள்ளது.

இவ்வுலககோப்பைக்கு பிறகும் விளையாட இருக்கும் டு பிளெசீ உடல் தகுதி காரணத்தினால் அவதி பட்டு வருகிறார். 2017-ம் ஆண்டில் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்தார். அடுத்த உலகக்கோப்பை தொடர் வரை தொடர்வாரா என்பது சந்தேகம் தான்.

#3. ரோஸ் டெய்லர் (நியூஸிலாந்து) - வயது - 34

ரோஸ் டெய்லர் - ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்கு அதிக ரன்களை குவித்தவர்
ரோஸ் டெய்லர் - ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்கு அதிக ரன்களை குவித்தவர்

போட்டிகள் – 218, இன்னிங்ஸ் – 203, ரன்கள் – 8026, சதங்கள் – 20 அரைசதங்கள் – 47

ரோஸ் டெய்லர் நியூஸிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த பெருமையை பெற்றவர், சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ஸ்டீபன் பிளெமிங்கின் சாதனையை (8006 ரன்கள்) முறியடித்தார் டெய்லர். 2006 ஆம் ஆண்டு மேற்கு இந்தியா தீவுகள் அணிக்கு எதிரே அறிமுகமானார் டெய்லர். அதிலிருந்தே தனது அணிக்கு கணிசமாக ரன்களை குவித்து வருகின்றார். பேட்டிங்கில் நான்காம் இடத்தை பலவருடங்களாக இவர் தக்கவைத்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரது அணியின் பேட்டிங் இவரது செயல்திறனை சுற்றியே அமையும், எதிரணிக்கு டெய்லரின் விக்கெட்டை வீழ்த்த மிக கடுமையான முறையில் முயற்ச்சிக்கும், இவரது விக்கெட்டை அவ்வளவு எளிதில் யாராலும் வீழ்த்திவிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது விக்கெட்டை வீழ்த்தும் வரை எதிர் அணிகளுக்கு கடும் நெருக்கடி தான். அதை தவறினால் டெய்லர் அவர்களிடமிருந்து வெற்றியை பரித்துவிடுவார்.

அப்படித்தானே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவரது விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் 181 ரன்களை குவித்தார் டெய்லர், இதில் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் தோல்வியுற்றது.

இவரும் டு பிளெசீ போல் உலககோப்பைக்கு பின்பும் தொடர்ந்து விளையாடுவார். ஆனால் இதுவே அவரது கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கும்.

#2. கிறிஸ் கெய்ல் (மேற்கு இந்திய தீவுகள்) - வயது - 39

ஓய்வுபெற போவதாக அறிவித்த கெய்ல்
ஓய்வுபெற போவதாக அறிவித்த கெய்ல்

போட்டிகள் – 286, இன்னிங்ஸ் – 281, ரன்கள் – 9912, சதங்கள் – 24, அரைசதங்கள் – 50 விக்கெட்டுகள் - 165

ஏற்கனவே தான் உலககோப்பைக்கு பின் ஓய்வு பெற போவதாக அறிவித்திருக்கிறார் கெய்ல். "யூனிவெர்ஸ் பாஸ்" என அழைக்கப்படும் கெய்ல் அதிரடி ஆட்டக்காரர் ஆவார். உலகக்கோப்பை தொடருக்கு பின் தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்து இருக்கிறார் கெய்ல்.

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 35 பந்துகளில் வெறும் 11 ரன்கள் எடுத்து பொறுமையுடன் விளையாடி வந்த கெய்ல் திடிரென விஸ்வரூபம் எடுத்து தனது 24ஆம் சதத்தை 100 பந்துகளில் பதிவு செய்தார். இவர் தற்போதும் ஓர் அதிரடி வீரராக தான் விளையாடி கொண்டிருக்கிறார்.

மேற்கு இந்திய தீவுகள் அணி டி20 கோப்பையை இருமுறை வென்ற போதிலும் கெய்ல் அணியின் முக்கிய அங்கமாய் திகழ்ந்தார். தற்போது ஒருநாள் உலககோப்பையையும் வென்று ஓய்வு பெறுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

#1. எம் எஸ் தோனி (இந்தியா) - வயது - 37

இன்றளவிலும் முழு உடல்தகுதியுடன் செயல்படும் தோனி
இன்றளவிலும் முழு உடல்தகுதியுடன் செயல்படும் தோனி

போட்டிகள் – 338, இன்னிங்ஸ் – 286, ரன்கள் – 10,415, சதங்கள் – 10, அரைசதங்கள் – 70, கேட்சுகள் - 311, ஸ்டம்பிங் – 119

இப்பட்டியலில் தோனி தனித்து இருக்கிறார் அதற்கு காரணம் அவர் இன்றளவிலும் முழு உடல்தகுதியுடன் இருப்பது மட்டுமல்லாமல். இந்த பட்டியலில் இவர் மட்டும் தான் உலகக்கோப்பையை வென்றிருக்கிறார். ஓர் நடுநிலை கிரிக்கெட் ரசிகர் மற்ற 9 வீரர்கள் ஒருமுறை கோப்பையை வெல்லவேண்டும் என நினைப்பார்கள். அனால் இந்திய அணியின் ரசிகர்கள் தோனி ஓய்வுபெறுவர்தற்குள் இன்னொருமுறை உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றே நினைப்பார்கள்.

தோனி இந்திய அணிக்கு ஓர் பேட்ஸ்மேனாகவும், தலைவராகவும், விக்கெட் கீப்பராகவும் அதிகளவில் பங்களித்து இருக்கிறார். இவரது ஆலோசனை இன்றளவிலும் இந்தியா அணிக்கு வெற்றியை தேடி தந்து வருகிறது. இளம் வீரர்களுக்கு சிறந்த உத்வேகத்தை அளித்தும் வருகிறார் தோனி.

கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் அணியில் இல்லாததை எப்படி ரசிகர்கள் இளந்தார்களோ, அதேபோல் தோனி இல்லாத அணியையும் ரசிகர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்தியா அணியின் ரசிகர்கள் தங்களது முன்னாள் கேப்டன் 2011 உலகக்கோப்பையை பெற்றுத்தந்ததை போல இம்முறையும் பெற்று தருவார் என்ற ஆவலுடன் இருக்கின்றனர்.