பென் ஸ்டோக்ஸின் 5 சிறந்த இன்னிங்சஸ்கள்
இந்த ஆண்டு ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் தோல்வியை நோக்கி சென்ற இங்கிலாந்து அணியை மீட்டு தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார். 135 ரன்களை பென் ஸ்டோக்ஸ் எடுத்ததால் 362 என்னும் இலக்கை விரட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. கடைசி விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் ஜோடி 76 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தது.
இந்த இன்னிங்ஸ் மூலம் பென் ஸ்டோக்ஸ் தன்னை உலகின் சிறந்த ஆல்-ரவுண்டராக மீண்டும் நிரூபித்தார். இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில், பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த சம்பவம் காரணமாக ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார், பென் ஸ்டோக்ஸ். 2016ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஓவரில் 19 ரன்களை தடுக்க இயலாமல் 4 சிக்சர்கள் விட்டுக்கொடுத்தார், பென் ஸ்டோக்ஸ். ஆதலால், இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இடம் தோற்றது.
இருப்பினும், பென் ஸ்டோக்ஸ் விளையாடிய 5 சிறந்த இன்னிங்ஸ்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
#5. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 120 ரன்கள், டிசம்பர் 2013, பெர்த்:
2013/2014ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்தது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியிடம் 5-0 என தொடரை முழுமையாக இழந்தது. அந்த தொடரில் இங்கிலாந்துக்கு நடந்த ஒரு சிறந்த விஷயம் என்றால் அது பென் ஸ்டோக்ஸின் சிறந்த ஆட்டம் மட்டுமே. அந்த தொடரில் தான் முதல் முறையாக பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார்.
அந்த தொடரின் மூன்றாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 504 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இருப்பினும், பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 120 ரன்கள் எடுத்து தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார், இதுவே மொத்த தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் அடித்த ஒரே சதம் ஆகும்.
#4. நியூசிலாந்துக்கு எதிராக 101 ரன்கள், மே 2015, லார்ட்ஸ்:
பெர்தில் ஆடிய சிறந்த இன்னிங்சிற்கு பிறகு பென் ஸ்டோக்ஸ் பெரிதாக பிரகாசிக்கவில்லை. 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார், பென் ஸ்டோக்ஸ். பயிற்சியாளர் பாலின் அறிவுரைப்படி ஆறாவதாக களம் காண தொடங்கினார், ஸ்டோக்ஸ். அதற்கு பின், மீண்டும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் இன்னிங்சில் 92 ரன்களை எடுத்தார், ஸ்டோக்ஸ்.
இரண்டாவது இன்னிங்சில் வெறும் 85 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதுவே லார்ட்ஸ் மைதானத்தில் வேகமாக அடிக்கப்பட்ட சதம் ஆகும். இதில் 15 பவுண்டரிகள் 3 சிக்சர்களும் அடங்கும். நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். கேன் வில்லியம்சன் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார், பென் ஸ்டோக்ஸ்.