சச்சினின் ஓரு ஓவர் அற்புதம்

Enter caption

இந்த "டை" ஆன மேட்ச் பாக்கறதுக்கு ஒரு தனி தில்லு வேணும் தான். இந்தியா இரண்டாவது பவுலிங் போட்டு குறைஞ்ச ஸ்கோரை டிஃபென்ட் பண்ணி டை செஞ்ச மேட்ச் ஒன்னு இருக்கு. அது வெஸ்ட் இண்டிஸ் கூட. வெஸ்ட் இண்டீஸ் தனது ஜாம்பாவான்களை ஒவ்வொருவராக ரிடையர்மென்டில் இழந்து சறுக்கலை நோக்கி இறங்கி கொண்டிருந்த காலகட்டம். இந்த பக்கம் இந்தியாவில் இளைஞர் படை ஆதிக்கம் தொடங்கி அப்போது தான் புது ரத்தம் பாய ஆரம்பித்திருந்தது.

அப்போதைய வெ.இ அணியில் லாரா மற்ற அணிகளுக்கெதிராக விளாசி கொண்டிருப்பார். இந்தியாவிடம் அதிகம் பிரகாசித்ததில்லை. இந்தியா என்றாலே சலங்கை கட்டி கொண்டு ஆட தொடங்கும் வெ.இசின் இரண்டு முக்கிய வீரர்கள் ரிச்சி ரிச்சர்ட்சனும் கார்ல் ஹுப்பரும். நான் இங்கு சொல்ல வரும் மேட்ச் 1991ல் ஆஸ்திரேலியாவில் நடந்த பென்சன் & ஹெட்ஜஸ் முத்தரப்பு தொடரின் ஒரு போட்டி..இந்திய அணி அதற்கு முன்பாக 1987ல் சுற்றுபயணம் செய்திருந்த ஆஸ்திரேலிய தொடரில் வர்ல்ட் சீரிஸ் மேட்சுகளில் ரவிசாஸ்திரி பௌலிங் பேட்டிங் இரண்டிலும் சாகசங்கள் நிகழ்ச்சி தொடர் நாயகன் விருதாக கார் எல்லாம் வென்றிருந்தார்.

Enter caption

சரி. குறிப்பிட்ட இந்த போட்டிக்கு வருவோம். சச்சின் அறிமுகமாகி விட்ட பின்பும் அப்போதைய இந்திய அணியில் அதிரடி என்றால் ஓபனர் ஸ்ரீகாந்தை தான் நம்புவோம். ஸ்ரீகாந்த் முதலிலேயே அவுட்டாகி பேட்டை மேலே தூக்கி போட்டு பிடித்த படி வெளியேறி விட தொடர்ந்து மஞ்ச்ரேக்கரும் செகேண்ட் டவுன் சச்சினும் சொற்ப ரன்களிலேயே பின்தொடர கேப்டன் அசாரும் சீக்கிரமே நடையை கட்டினார். அம்ரே மட்டுமே கொஞ்ச நேரம் தாக்குபிடித்தார். இந்த பக்கம் ரவிசாஸ்திரி தனது பிரபல பாணியான அரை க்ரவுண்டுக்கு இறங்கி வந்து டொக் வைத்து விட்டு செல்லும் வித்தையை சிறப்பாக காட்டி க்ரீசில் தொங்கி கொண்டிருந்தார். கபில் வந்து அடிப்பார், பிரபாகர் வந்து அடிப்பார் ,கிரண் மோர் வந்து அடிப்பார் என நம்பிய எங்களது இந்திய விசுவாசம் டெயில் எண்டர்கள் சுப்ரதோ பானர்ஜி, ஸ்ரீநாத் வரை நீண்டு பார்த்தும் பலன் மட்டும் இல்லை. ஒரு பக்கம் முன்னாள் மேன் ஆப் த சீரிஸ் சாஸ்திரி மட்டும் 30 சில்லறை ரன்களை எடுத்திருந்தார். அதற்கு 110 பால்களை வேறு கபளீகரம் செய்திருந்தார். இந்தியா மொத்தமாக 126க்கு ஆல் அவுட் ஆகி விட்டிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸ்ஸை பார்க்கும் ஆசையே அத்து தான் போயிருந்தது. இருந்தும் கபிலின் முதல் பந்தில் டெஸ்மான்ட் ஹெயின்ஸ் கோல்டன் டக் அடிக்க ஒரு நப்பாசை எழுந்தது. இருந்தும் முக்கிய வில்லன்கள் ரிச்சர்ட்சனையும் ஹுப்பரையும் நினைத்தால் பகீரென்று தான் இருந்தது. அவர்களின் விக்கெட்டிற்காக நாங்கள் செய்த பிரார்த்தனைகள் பலித்ததோ என்னமோ அவர்களிருவரும் அன்றைய மேட்சில் அதிக நேரம் நீடிக்க வில்லை. பின் வந்த லாராவும் "இந்தியா மேட்சா.. அப்போ நா போறேன்" என உடனே பெவிலியன் திரும்பி விட்டார். 76 ரன்களுக்கு உள்ளாகவே 8 விக்கெட்கள் விழுந்து விட ஆசையாக நிமிர்ந்து உட்கார்ந்தோம். அசாருதின் தனது முக்கிய நான்கு பேஸ் பவுலர்களையும் அவர்களது முழுமையான ஓவர்களையும் போட செய்து விக்கெட்டுகளை வீழ்த்தும் முனைப்பில் கவனம் செலுத்தி இருந்தார்.

ட்விஸ்டு கர்ட்லி அம்ப்ரோஸ் வடிவத்தில் வந்து சேர்ந்தது. கபிலின் பந்தில் சிக்சரை பறக்க விட்ட நெட்டைக்காலர் பனிரென்டு ரன்களை அடித்து வழிகாட்ட கூட ஆடிய கம்மின்ஸ் 20 ரன்களை தொட ஸ்கோர் 110ஐ க்ராஸ் செய்து மறுபடி வெற்றியை த்ராட்டிலில் விட்டது. நல்ல வேளையாக சாஸ்திரி அடித்த டைரக்ட் த்ரோவில் ரன்அவுட் ஆகி 17 ரன்களுக்கு வெளியேறினார் அம்ப்ரோஸ். இதற்கு பின்னரும் கம்மின்ஸ் தனது வெற்றிக்கான முயற்சியை விட்டுவிடவில்லை. கடைசியாக களமிறங்கிய பாட்ரிக் பாட்டர்சன் கூட ஒரு பவுண்டரி விளாசி வைத்தார் என பார்த்து கொள்ளுங்கள். நாற்பது ஓவர்களின் முடிவில் வெ.இ ஸ்கோர் 122/9.

Enter caption

இந்தியாவின் ரியல் "ஏழரை" அப்போது தான் ஆரம்பித்தது. எஸ். விக்கெட்டுகள் வீழ்த்தும் முனைப்பில் முக்கிய பவுலர்கள் நான்கு பேரின் முழு பத்து ஓவர்களையும் எக்ஸ்ஹாஸ்ட் செய்து விட்டிருந்தார் அசாருதின். நாற்பத்தி ஒன்றாம் ஓவரில் வெ.இ வெற்றிக்கு ஐந்து ரன்களும் இந்தியாவிற்கு அந்த ஒற்றை விக்கெட்டும் என பரஸ்பர தேவைகள் இருந்தது. அந்த முக்கிய ஓவரை சாஸ்திரி கையில் கொடுப்பதா இல்லை ஸ்ரீகாந்த்தை விட்டு போட விடுவதா என நடுமைதான மீட்டிங் நீண்ட நேரம் நடைபெற்றதை தொலைக்காட்சியிலேயே காண முடிந்தது. இறுதியாக சச்சினை அழைத்து அவரது கையில் பந்தை திணித்த அசாரை கமேண்டர்களே கேலியாக தான் பேச துவங்கியிருந்தனர்.

சச்சின் மீடியம் பேசர் தான் எனினும் ஒரு தேர்ந்த ஸ்பின்னரை போல் அவரால் லெக் & ஆஃப் இரு திசைகளிலும் சுழற்ற முடிந்திருந்தது. முதல் பந்தை எதிர்கொண்ட கம்மின்ஸ் ஒரு ரன்னை எடுத்து மறுமுனைக்கு சென்று விட அடுத்த பந்தை ஷார்ட் மிட் ஆன் திசையில் தட்டி விட்ட பாட்டர்சன் மூன்று ரன்களை ஓடி கடந்தார். பேட்டிங் முனைக்கு கம்மின்ஸ் வந்து விட்ட நிலையில் ஸ்கோர் சமன் ஆனது. ஏற்கனவே 24 ரன்களை அடித்து ஆக்டிவ்வாக ஆடி கொண்டிருந்த கம்மின்ஸ் எஞ்சிய ஒரு ரன்னை எளிதாக எடுத்து விடுவார் என இந்திய ரசிகர்களே நம்ப துவங்கி விட்டோம். அப்போது நிகழ்ந்தது அந்த அற்புதம். சச்சின் தனது ஓவரின் கடைசி பந்தாக போட்ட அந்த அவுட் ஸ்விங்கர் கம்மின்சின் பேட்டில் எட்ஜாகி ஸ்லிப்பில் காத்து கொண்டிருந்த அசாரின் கைகளின் தஞ்சம் புகுந்தது. ஸ்கோர் சமன் என்கிற நிவையிலேயே வெ.இ அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட மேட்ச் "டை' ஆனது.

Enter caption

நான் லைவ் பார்த்த முதல் "டை" மேட்ச் அது. சர்வதேச அளவிலும் கூட அப்போதைக்கு நான்காவது என நினைக்கிறேன். அதனாலேயே நினைவில் தங்கி விட்ட மேட்ச் இது.

Quick Links

Edited by Pritam Sharma