கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த டாப் 5 பேட்டிங் இன்னிங்ஸ்கள்

Ajay V
Jason Gillespie
Jason Gillespie

கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் சிறிதும் எதிர்பாராமல் நடந்த பல விஷயங்கள் உண்டு. உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் கத்துக்குட்டிகள் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்த பொழுது பலரும் வியப்பில் ஆழ்ந்தனர். அது போல் தன் கரியர் முழுதும் சுமாராக ஆடிய வீரர் திடீரென அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் பொழுது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்‌. அதிலும் ஒரு சில வீரர்கள் அணிக்குள் வரும் பொழுது மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும் ஆனால் சரியாக ஆடாததால் ரசிகர்கள் நம்பிக்கை இழந்திருப்பர். உதாரணத்துக்கு இலங்கையின் மார்வன் அட்டபட்டுவை எடுத்துக் கொள்ளலாம். அவர் தன் அணிக்கு ஆடிய முதல் 3 போட்டிகளில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். பின் முதல் தர போட்டியில் நன்றாக ஆடியதால் அணியில் மீண்டும் இடம் பெற்று அபாரமாக ஆடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அவ்வாறு மொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்த டாப் 5 இன்னிங்ஸ் இதோ,

#5 ஜேசன் கில்லஸ்பீ 201* ( எதிரணி வங்கதேசம் , 2006)

தன் சொந்த மண்ணில் முதல் இன்னிங்சில் 427 ரன்கள் எடுத்தும் முதல் டெஸ்டை இழந்தது வங்கதேசம். இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 197 ரன்களுக்கு சுருண்டது. முதல் நாள் இறுதியில் ஹைடன் அவுட்டான பிறகு நைட் வாட்ச்மேனாக களமிறங்கினார் கில்லஸ்பீ. இரண்டாம் நாள் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது‌. 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஆனால், கில்லஸ்பீ சற்றும் தளராமல் ஒரு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனைப் போல் ஆடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடர்ந்து ஆடிய கில்லஸ்பீ அவரே எதிர்பாராத விதமாக 201* ரன்கள் அடித்தார். வங்கதேச அணி பவுலர்கள் பாண்டிங், ஹைடன் சதம் அடித்திருந்தால் கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், சராசரி வெறும் 10 உள்ள ஒரு பவுலர் இரட்டைச் சதம் அடித்தது அவர்களால் என்றும் ஜீரணிக்க முடியாது‌.

#4 கபில்தேவ் 175* ( எதிரணி ஜிம்பாப்வே, உலக கோப்பை 1983)

Kapil Dev
Kapil Dev

இந்திய கேப்டன்கள் ஆடிய மிகச் சிறப்பான இன்னிங்சுகளில் இதுவும் ஒன்று. அது இந்தியாவுக்கு ஒரு மிக முக்கியமான போட்டி. தோற்றால் தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் இருந்தது. இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவுட்டாக 17 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தத்தலித்தது இந்தியா அணி. அப்பொழுது களமிறங்கிய கபில்தேவ், ரோஜர் பின்னியுடன் இணைந்தார். இருவரும் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். கபில்தேவ் ஒருநாள் அரங்கில் தன் முதல் சதத்தை பதிவு செய்தார். அதற்கு பின் ஜிம்பாப்வே பவுலர்கள் வீசிய பந்துகளை அரங்கின் நாலாப்புறமும் பறக்க விட்டார். இந்திய இன்னிங்சின் முடிவில் 175 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். இப்போட்டி ஒளிபரப்பாகவில்லை என்றாலும் அக்காலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகராக இருந்த யாராலும் இந்த இன்னிங்சை மறக்க முடியாது.

#3 மிஸ்பா உல் ஹக் 101* ( எதிரணி ஆஸ்திரேலியா, 2014)

Misbah-Ul-Haq
Misbah-Ul-Haq

மிஸ்பாவின் இயல்பான ஆட்டம் நல்ல பந்துகளை லீவ் செய்து பொறுமையாக ரன்கள் சேர்ப்பது. அவரிடம் இருந்து இப்படி ஒரு இன்னிங்சை யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் இன்னிங்சில் 309 ரன்கள் முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சில் விரைவாக ரன்கள் குவிக்கும் நோக்கில் களமிறங்கியது. மிஸ்பா தானே இறங்கி அதிரடியாக ஆட முடிவெடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் பந்தை வெளுத்து வாங்கிய அவர் ஸ்மித் பவுலிங்கில் மட்டும் 38 ரன்கள் குவித்தார். அதில் 4 இமாலய சிக்சர்களும் அடங்கும். பின் ஸ்டார்க் மற்றும் சிடிலின் பந்துகளையும் சிதறடித்தார். வெறும் 56 ரன்களில் சதமடித்து ரிச்சர்ட்ஸின் உலக சாதனையை சமன் செய்தார்.

#2 யுசுப் பதான் 123* ( எதிரணி நியூசிலாந்து, 2010)

Yusuf Pathan
Yusuf Pathan

இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 314 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. 6-ஆம் இடத்தில் களமிறங்கிய பதான் ரோஹித்துடன் இணைந்தார். இருவரும் விரைவாக ரன்கள் சேர்த்தனர். ரோஹித் அவுட் ஆகிய பொழுது வெற்றிக்கு 17 ஓவரில் 128 ரன்கள் தேவைப்பட்டது. அதற்கு பின் பதான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கைல் மில்ஸ் வீசிய 43-ஆவது ஒவரில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி தனது சதத்தை பதிவு செய்தார். பதான் தொடர்ந்து அபாரமாக ஆட இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

#1 நாதன் ஆஸ்லே 222 ( எதிரணி இங்கிலாந்து, 2002 )

Nathan Astle
Nathan Astle

ஒரு பேட்ஸ்மேனாக ஆஸ்லேவின் திறமையை குறைத்து மதிப்பிடவே முடியாது என்றாலும் இப்போட்டியில் அவர் ஆடிய ருத்ர தாண்டவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நான்காம் இன்னிங்சில் 550 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய நியுசிலாந்து அணி 112 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி கொண்டிருந்தது. இந்நிலையில் களமிறங்கிய ஆஸ்லே தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். அப்பொழுது வரை இங்கிலாந்து அணி பிரமாதமாக பவுவிங் செய்து கொண்டிருந்தது. ஆனால், ஆஸ்லேவின் அதிரடியில் இங்கிலாந்து பவுலர்கள் நிலைக்குலைந்தனர். 28 பவுண்டரி மற்றும் 11 சிக்சர்கள் விளாசிய ஆஸ்லே வெறும் 153 பந்துகளில் இரட்டை சதமடித்தார். இது அப்போது உலக சாதனையாக இருந்த கில்கிறிஸ்ட் ( 212 பந்துகள்) எடுத்துக் கொண்டதை விட 59 பந்துகள் குறைவாகவே ஆஸ்லே எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்து - டுஷர் அகர்வால்

மொழியாக்கம் - அஜய்

Quick Links