#1 டிரென்ட் போல்ட்
டிரென்ட் போல்ட் தற்போது உலக கிரிக்கெட்டில் அதிகம் மதிப்பிடப்படாத ஒரு வேகப்பந்து வீச்சாளர். இவர் 81 ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகில் அதிவேகமாக 150 ஓடிஐ விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையை தன் வசம் வைத்துள்ளார்.
நியூசிலாந்து ஆடுகளம் டிரென்ட் போல்ட் போன்ற சில வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் நன்றாகவே ஒத்துழைப்பை அளிக்கிறது. இவரது அதிரடி பந்துவீச்சின் மூலம் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி விடுவார். இந்திய அணி இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடுமையாக தடுமாறுவார்கள் என்ற வரலாறு உண்டு.
கடந்த காலங்களில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, ஷீகார் தவான், விராட் கோலி ஆகியோர் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் கடுமையாக சொதப்பியுள்ளனர்.
இந்திய டாப் 3 பேட்ஸ்மேன்களில் டிரென்ட் போல்டிற்கு எதிரான பந்துவீச்சில் ஷீகார் தவான் மோசமான சாதனையை வைத்துள்ளார். இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் 5 முறை தவான் தனது விக்கெட்டை இழந்துள்ளார் ஆனால் தவான் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 வாரங்களுக்கு உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அதனால் டிரென்ட் போல்டின் முன்னணி இலக்காக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதாகவே இருக்கும். ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வில் 23 முறை இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளார். இதில் 3 முறை டக்-அவுட் ஆகியுள்ளார்.
டிரென்ட் போல்டின் அனல் பறக்கும் பந்துவீச்சு டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் சிறப்பாக எடுபட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த சில நாட்களாக நாட்டிங்காமில் மழை பெய்து வருகிறது. எனவே மீதமுள்ள வாரங்களில் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலை நீடித்தால் கண்டிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக டிரென்ட் போல்ட் தனது பந்துவீச்சு மூலம் கடும் நெருக்கடியை அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
டிரென்ட் போல்ட் இந்தியாவிற்கு எதிராக 12 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான சாதனையை இந்தியாவிற்கு எதிராக வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 33 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 4 விக்கெட்டுகளை டிரென்ட் போல்ட் வீழ்த்தினார். இதனால் இந்தியா 179 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.