உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பர்-4 பேட்டிங்கிற்கு கே.எல்.ராகுல் சரியாக இருப்பார் என்பதற்கான காரணங்கள்

KL Rahul
KL Rahul

இந்திய அணியின் நீண்ட கால பிரச்சினையாக நம்பர் 4 பேட்டிங் இருந்து வந்தது. யுவராஜ் சிங்-ற்குப் பிறகு நம்பர் 4 பேட்ஸ்மேன் என யாரும் நிரந்தரமாக இந்திய அணியில் இருந்ததது இல்லை‌. 2015 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு 12 பேட்ஸ்மேன்களை நம்பர் 4 பேட்டிங்கிற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து பார்த்து விட்டது. ஆனால் எந்த பலனும் இல்லை.

சமீப காலத்தில் அம்பாத்தி ராயுடு நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறங்கி வந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் ராயுடுவின் ஆட்டம் சீராக இல்லாத காரணத்தால் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார். நம்பர் 4 பேட்டிங்கில் ராயுடுவின் பேட்டிங் சராசரி 41.67 ஆகும். இது உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரராகளான தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல், விஜய் சங்கர் ஆகியோரது பேட்டிங் சராசரியை விட அதிகம்.

ராயுடு உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத காரணத்தால் அணியில் உள்ள வீரர்களை நம்பர் 4 இடத்தில் முயற்சித்து பார்த்தனர். இந்த சிக்கலிற்கு தீர்வாக இறுதியில் கே.எல்‌.ராகுல் அமைந்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ராகுல் சதம் விளாசியதன் மூலம் உலகக் கோப்பை போட்டியிலும் நம்பர் 4 பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் வலம் வர வாய்ப்புள்ளது.

கே.எல்.ராகுல் டெஸ்ட தொடர்களில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர். கடந்த இங்கிலாந்து தொடரில் வேகப்பந்து வீச்சிற்கும் மற்றும் ஸ்விங் பந்துவீச்சிற்கும் சாதகமான மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை கையாண்டு சதம் விளாசினார் கே.எல்.ராகுல்.

KL Rahul and Dhoni
KL Rahul and Dhoni

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் கே.எல்.ராகுல் மாற்று தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்று இருப்பார். ஷீகார் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்வதால் கே.எல்.ராகுலுக்கு குறைவான வாய்ப்புகளே கிடைத்து வந்தது. விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் இருக்கும் போது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுலை நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறக்கியது. இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது விக்கெட்டுகளை ஆரம்பத்திலே இழந்ததால் கே.எல்.ராகுலுக்கு தன்னை நம்பர் 4 பேட்ஸ்மேனாக நிரூபிக்க சிறப்பான வாய்ப்பு கிடைத்தது.

நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் டிரென்ட் போல்ட்-டின் சிறப்பான பந்துவீச்சால் கே.எல்.ராகுலால் நீண்ட நேரம் நிலைத்து விளையாட முடியவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் அவரது சிறப்பான மற்றும் அதிரடியான பேட்டிங்கை வெளிபடுத்தினார். வங்கதேசத்தின் சிறப்பான பந்துவீச்சில் கே.எல்.ராகுல் நிலைத்து நின்று 108 ரன்களை விளாசி தன்னை நம்பர் 4 பேட்டிங்கில் சிறப்பான வீரராக நிரூபித்து காட்டினார். இந்திய அணி 22 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருக்கும் போது கே.எல்.ராகுல் மற்றும் மகேந்திர சிங் தோனி நிலைத்து நின்று 50 ஓவர்கள் முடிவில் 359 ரன்களை குவித்தது.

ஆட்டத்தின் தன்மை மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு நிலைத்து ஆடி ரன்களை உயர்த்தினார் கே.எல்.ராகுல். இவர் இந்திய அணியின் நம்பர்-4 பேட்டிங்கிற்கு சிறந்த வீரர். பயிற்சி ஆட்டத்தில் ராகுல் சதம் விளாசியதற்காக மட்டும் இதனை கூறவில்லை, இவர் இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இங்கிலாந்து மைதானத்தில் ராகுலுக்கு சிறந்த அனுபவம் உள்ளது. இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச சதங்களை ராகுல் விளாசியுள்ளார்.

KL Rahul
KL Rahul

இத்தகைய பேட்டிங்கை ராகுல் வெளிபடுத்தும் போது ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஸ்விங் பந்துவீச்சிற்கு சாதகமான மைதானத்தில் ராகுல் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தும் திறமை உடையவர் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து மைதானம் அதிகமாக மாறும் திறமை கொண்டதால் தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழக்க அதிக வாய்ப்புள்ளது. ராகுல் இங்கிலாந்து ஆடுகள தன்மையை சரியாக கையாளும் திறமை உடையவராக திகழ்கிறார்.

பயிற்சி ஆட்டத்தில் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் ராகுலின் ஆட்டத்தைக் கண்ட விராட் கோலியும் உலகக் கோப்பை போட்டிகளில் ராகுலை நம்பர்-4 ல் களமிறக்க திட்டமிடுவார்‌.

பயிற்சி ஆட்டத்தின் முடிவில் விராட் கோலி கூறியதாவது,

கே எல்.ராகுல் நம்பர் 4 பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணியின் வலிமை பெருகியுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் சரியான ஆட்டத்திறனை வெளிபடுத்தி இந்திய அணியின் ரன்களை உயர்தினார் கே.எல்.ராகுல்".

உலகக் கோப்பை என்பது ஒரு நீண்ட தொடராகும். எனவே ராகுல் அனைத்து போட்டிகளிலும் நம்பர் 4 பேட்டிங்கில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இவர் தனது ஆட்டத்தை சீராக வெளிப்படுத்தும் பட்சத்தில் விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆடும் XI-லிருந்து வெளியேற்றப்படுவர்.

வங்க தேசத்திற்கு எதிர்க கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் பெரும் பிரச்சனை நீக்கியுள்ளது. இந்திய அணி தனது முதல் தகுதிச் சுற்றில் ஜீன் 5 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது.

Quick Links