உலக கோப்பையின் முதல் ஹாட்ரிக்; கவாஸ்கரின் முதல் சதம் – மறக்க முடியாத உலக கோப்பை போட்டி

Chetan Sharma
Chetan Sharma

உலக கோப்பையில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது யார் தெரியுமா? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் தெரியுமா? சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். அவர் வேறு யாருமல்ல, இந்திய வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா தான் அது. தான் ஹாட்ரிக் விக்கெட் எடுப்போம் என்று சேத்தம் ஷர்மா கூட அன்று நினைத்திருக்க மாட்டார். அந்தப் போட்டியை நேரில் பார்த்தவர்களும் பின்னாளில் கேள்விப்பட்டவர்களும் கூட இதை ஆச்சரியத்துடனே பார்க்கிறார்கள்.

1987-ம் ஆண்டு இந்திய துணை கண்டத்தில் முதல் முறையாக உலக கோப்பை நடைபெற்றது. நடப்பு சாம்பியனாக கலந்து கொண்ட இந்தியா, ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்று அரையிறுதி இடத்தை உறுதி செய்திருந்தது. ஆனால் அங்கு ஒரு சிக்கல் இருந்தது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்காவிட்டால், அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்த்து பாகிஸ்தானில் வைத்தே விளையாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் இந்தியா. இது நடக்க கூடாது என்றால், நியூசிலாந்து அணியை அதிக வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அப்போது தான் இந்தியாவில் வைத்து இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளலாம்.

எதிர்பார்த்தது போல நியூசிலாந்தை அதிக வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது. இந்த உலக கோப்பை இந்தியாவிற்கு ஏமாற்றம் அளித்தாலும், இந்தப் போட்டியில் இரண்டு மறக்க முடியாத விஷயங்கள் நடந்தேறின. ஒன்று, சேத்தன் ஷர்மா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது. மற்றொன்று, சுனில் கவாஸ்கரின் முதல் சதம்.

டாஸை வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் பிடிக்க முடிவு செய்தது. 41 ஓவர் முடிவில் 182 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற நல்ல நிலையில் இருந்தது நியூசிலாந்து. இந்த சமயத்தில் மனோஜ் பிராபகருக்கு பதிலாக சேத்தன் ஷர்மாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் கபில்தேவ். அதற்கு முன் ஐந்து ஓவர்கள் பந்து வீசியிருந்த ஷர்மா எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை என்றாலும் அவர் தான் அணியின் சிறந்த டெத் ஓவர் பவுலர்.

ஒரு வருடத்திற்கு முன்பு, ஆஸ்ட்ரல் - ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், ஷர்மா வீசிய ஐம்பதாவது ஓவரின் கடைசி பந்தை சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார் ஜாவேத் மியாண்டட். இதனால் இந்திய ரசிகர்களின் கண்களுக்கு நீண்ட நாட்களாக வில்லனாக தெரிந்தார் சேத்தன் ஷர்மா.

Sunil Gavaskar
Sunil Gavaskar

ஆனால் அக்டோபர் 31, 1987-ம் ஆண்டு நடைபெற்ற போட்டி சேத்தன் ஷர்மவின் பெயரை வரலாற்றில் பதிய வைத்தது. போட்டியின் 42-வது ஓவரையும் தன் ஆறாவது ஓவரையும் வீச வந்தார் ஷர்மா. எதிர்முனையில் நியூசிலாந்தின் கென் ரூதர்ஃபோர்ட் 53 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் அடித்து களத்தில் நின்று கொண்டிருந்தார். ஓவரின் முதல் மூன்று பந்துகளில் எந்த ரன்னும் போகவில்லை. நான்காவது பந்து மிடில் ஸ்டம்பை தகர்த்தது. க்ராஸ் பேட் ஆட விரும்பிய ரூதர்ஃபோர்டின் பேட்டிற்கும் பேடிற்கும் இடையே சென்று பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து நியூசிலாந்து கீப்பர் ஐயன் ஸ்மித் வந்தார். அடுத்த பால் யார்க்கர். ஸ்டம்பை பறி கொடுத்தார் ஸ்மித். இரண்டு பந்தில் இரண்டு விக்கெட். ஹாட்ரிக் விக்கெட் எடுப்பாரா என அரங்கமே எதிர்பார்த்திருந்தது.

கடைசி பந்தை வீசுவதற்கு முன் நீண்ட நேரம் கபில்தேவிடம் கலந்தாலோசித்தார் ஷர்மா. அடுத்த பேட்ஸ்மேன் ஈவன் ஷாட்ஃபீல்ட் சற்று நடுக்கத்துடன் களத்திற்கு வந்தார். அன்று ஷர்மாவிற்கு நல்ல நாள் போல. நாக்பூர் பிட்சும் அவருக்கு உதவியது. வேகமாக வீசிய கடைசி பந்து பேட்ஸ்மேனின் லெக் ஸ்டம்பை தகர்த்தது. மூன்று பந்தில் மூன்று விக்கெட். மூன்றுமே போல்ட். இது தான் ஓரு நாள் கிரிக்கெட்டில் மூன்றாவது ஹாட்ரிக் மற்றும் உலக கோப்பையின் முதல் ஹாட்ரிக் என்ற பெருமையை பெற்றது.

முடிவில் நியூசிலாந்து அணி ஒன்பது விக்கெட் இழந்து 221 ரன்கள் அடித்தது. புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடிக்க வேண்டுமென்றால், இந்த ஸ்கோரை 42.2 ஓவரில் இந்திய அணி அடித்தாக வேண்டும். ஆனால் இந்திய அணியோ 32.1 ஓவர்களில் ஒரு விக்கெடை மட்டும் இழந்து வெற்றி வாகை சூடியது. 1975 உலக கோப்பையில் 174 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அனைவரின் விமர்சனத்திற்கும் உள்ளான கவாஸ்கர், இந்தப் போட்டியில் 85 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவரோடு ஸ்ரீகாந்தும் 58 பந்துகளில் 75 ரன் அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தனர்.

Quick Links