ஐந்தாவது முறையாக ஐரோப்பா லீக் கோப்பையை வென்றது செல்சீ

கோப்பையுடன் செல்சீ அணி
கோப்பையுடன் செல்சீ அணி

அற்புதமான இரண்டு கோல்கள் அடித்ததோடு மற்றொரு கோல் அடிக்க உதவி புரிந்த ஈடன் ஹசார்டின் சிறப்பான ஆட்டத்தால் ஆர்செனல் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது செல்சீ. இரு அணிகளும் தங்களின் சொந்த மைதானத்திலிருந்து 2500கிமீ தள்ளியுள்ள அசெர்பஜான் நாட்டில் விளையாடியதால், போட்டி நடந்த ஒலிம்பிக் அரங்கம் பாதியளவே நிரம்பியிருந்தது.

இந்த வெற்றி செல்சீ பயிற்சியாளர் மவுரிசியோ சாரிக்கு முதல் கோப்பையை பெற்று தந்துள்ளதோடு அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கிற்கு ஆர்செனல் அணி செல்ல முடியாததையும் உறுதி செய்துள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதி எந்த கோலும் இல்லாமல் சுவாரஸ்யமற்று காணப்பட்டன. ஆனால் இரண்டாம் பதியில் கோல் மழை பொழிய தொடங்கியது. முன்னாள் ஆர்செனல் ஸ்டரைக்கரான ஒலிவர் ஜிராட் தலையால் முட்டி செல்சீ அணிக்கான முதல் கோலை அடித்தார். சரியாக 11 நிமிடங்கள் கழித்து, ஹசார்ட் க்ராஸ் செய்த பந்தை அற்புதமாக கோலாக்கினார் பெட்ரோ. தனது இறுதிப் போட்டியை விளையாடி வரும் ஆர்செனல் கோல் கீப்பர் செக் (இந்தப் போட்டியோடு ஓய்வு பெறுகிறார்), கோல் சென்றதை பார்த்து திகைத்து நின்றார். இந்த கோலின் மூலம் 2-0 என்று முன்னிலை பெற்றது செல்சீ.

ஆர்செனல் அணியின் மோசமான தடுப்பாட்டத்தால் செல்சீ தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டது. ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஜிராடை ஆர்செனல் வீரர் மைட்லாண்ட் நைல்ஸ் ஃபவுல் செய்த காரணத்தினால், செல்சீ அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதை கச்சிதமாக கோலாக்கி 3-0 என்று முன்னிலை பெற வைத்தார் ஹசார்ட்.

இதனால் செல்சீ அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என்று நினைத்த போது, மாற்று வீரராக களமிறங்கிய அலெக்ஸ் இவோபி ஆர்செனல் அணிக்கு சற்று நம்பிக்கை அளித்தார். இவரது அற்புத ஆட்டத்தால் முதல் கோலை பதிவு செய்தது ஆர்செனல். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களிலேயே மற்றுமொரு கோலை அடித்து 4-1 என்று செல்சீ அணியை முன்னிலை பெற வைத்தார் ஈடன் ஹசார்ட்.

ஈடன் ஹசார்ட்
ஈடன் ஹசார்ட்

அதன்பிறகு ஆர்செனல் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. முடிவில் ஐந்தாவது முறையாக ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது செல்சீ. இதற்கு முன் 2013-ம் ஆண்டு கோப்பை வென்றிருந்தது செல்சீ அணி. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த பயிற்சியாளர் சாரி, தனது சந்தோஷத்தை வீரர்களோடு சேர்ந்து மைதானத்தில் கொண்டாடினார். தனது முதல் சீசனை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், செல்சீ அணியின் பயிற்சியாளராக இவர் நீடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால் ஹசார்ட் செல்சீ அணியை விட்டு செல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. விரைவில் இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடப் போகிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் போட்டியை பார்ப்பதற்காக ரயிலிலும், விமானத்திலும் மற்றும் டேக்ஸியிலும் வந்திருந்த செல்சீ அணியின் ரசிகர்கள், தங்கள் அணிக்காக கடந்த ஏழு வருடங்களாக்க விளையாடி வந்த ஹசார்டின் கடைசிப் போட்டியை கண்டு களித்தனர். இனிமேல் ஹசார்டின் இடத்தை யார் நிரப்ப போகிறார்கள்?

ஜிராடையும் நாம் பாராட்டியாக வேண்டும். ஏனென்றால் இவரது முதல் கோல் தான் ஆர்செனல் அணியின் அடித்தளத்தை நொருக்கியது. பயிற்சியாளர் சாரி தனது முதல் சீசனை மகிழ்ச்சியோடு முடித்துள்ள நிலையில், ஆர்செனல் பயிற்சியாளர் எமிரி ஆட்டம் முழுவதும் கவலையோடு காணப்பட்டார். ஆர்செனல் அணியை எப்படியாவது சம்பியன்ஸ் லீக் கோப்பைக்கு தகுதி பெற வைத்துவிடலாம் என்ற இவரது நம்பிக்கை சில நொடிகளில் சுக்கு நூறானது.

Edited by Fambeat Tamil