கோப்பா அமெரிக்கா தொடரில் கலக்க காத்திருக்கும் 3 இளம் வீரர்கள்

லோ செல்சோ
லோ செல்சோ

கோப்பா அமெரிக்கா தொடர் கோலகலமாக தொடங்கி பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. 12 நாடுகளும் கோப்பையை வெல்ல கடுமையாக உழைத்து வருகின்றன. பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தாலும், சில இளம் வீரர்கள் இந்த தொடரில் தங்களது திறமையை நிரூபிக்க காத்திருக்கிறார்கள்.

கோப்பா அமெரிக்கா தொடரில் கலக்க காத்திருக்கும் மூன்று இளம் வீரர்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

3. லோ செல்சோ – அர்ஜெண்டினா

கடந்த சீசனில் பிஎஸ்ஜி அணியிலிருந்து லோன் மூலமாக ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடச் சென்ற லோ செல்சோ, தனது சிறப்பான ஆட்டத்தால் அந்த அணியின் நிரந்தர வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த வருட சீசனில் 16 கோல்களும் ஆறு முறை சக வீரர்கள் கோல் அடிக்கவும் உதவி புரிந்துள்ளார். இவரது ஃபார்ம் நிச்சயம் கோப்பா அமெரிக்கா தொடரில் அர்ஜெண்டினா அணிக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

நிகாரகுவா அணியுடனான நட்புறவு போட்டியில் இவருக்கும் மெஸ்ஸிக்கும் களத்தில் இருந்த பிணைப்பு காண்பதற்கே அருமையாக இருந்தது. இவர்கள் இருவரும் அந்தப் போட்டியில் தான் முதல் முறையாக இணைந்த விளையாடினாலும், பல ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து விளையாடியது போல் இருந்தது. செல்சோவின் பங்களிப்பு எந்தளவிற்கு அர்ஜெண்டினாவிற்கு உதவியாக இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

2. ரோட்ரிகோ பெண்டன்குர் – உருகுவே

ரோட்ரிகோ பெண்டன்குர்
ரோட்ரிகோ பெண்டன்குர்

உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? சென்ற உலக கோப்பையில் மைதானத்தின் நடுவில் இருந்து தன் வயதையும் மீறி ஒரு அற்புதமான கோலை அடித்தார் ரோட்ரிகோ. இதே ஃபார்மோடு ஜூவெண்டஸ் அணிக்கு விளையாடச் சென்ற இந்த மிட் ஃபீல்டர் தனது இருப்பை அங்கேயும் நிரூபித்துள்ளார். தற்போது உருகுவே அணியின் முக்கிய வீரராக திகழும் ரோட்ரிகோ, கோப்பா அமெரிக்கா தொடரில் முதல் முறையாக பங்கேற்க உள்ளார்.

பந்தை லாவகமாகவும் அமைதியாகவும் கடத்திச் செல்லும் இவர் தடுப்பாட்ட வீரர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதோடு எதிரணி வீரர்களின் கால்களில் சிக்காதவாறு பந்தை பாஸ் செய்வதிலும் வல்லவர். போர்ட்சுகல் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவிற்கு பந்தை கிடைக்க விடாமல் இவர் ஏமாற்றியதை அவ்வுளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது. இவரது திறமையான ஆட்டம் உருகுவே அனியை நிச்சியம் வெற்றி பெறச் செய்யும்.

1. டேவிட் நெரெஸ் – பிரேசில்

டேவிட் நெரெஸ்
டேவிட் நெரெஸ்

கோப்பா அமெரிக்கா தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் ஏற்பட்டதால், கோப்பை வெலும் வாய்ப்பு பிரேசில் கையை விட்டுச் சென்றுள்ளதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் பயிற்சியாளர் டைட்டீ இதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தனர்.

கேப்ரியல் ஜீசஸ் மற்றும் ரிச்சர்லிசனை தவிர்த்து மற்றொரு இளம் பிரேசில் வீரர் நமது எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறார். ஆம், அவர் தான் டேவிட் நெரெஸ். 22 வயதாகும் நெரெஸ் தற்போது டச்சு கிளப்பான அஜக்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். இந்த சீசனில் 20 போட்டிகளே விளையாடியிருந்தாலும், எட்டு கோல்களையும் 11 முறை சக வீரர்கள் கோல் அடிக்கவும் உதவி புரிந்துள்ளார்.

பந்தை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்வதிலும் நீண்ட தூரம் பாஸ் செய்வதிலும் திறமை மிக்கவர். இவரது டிரிபிள் பார்ப்பதற்கே அவ்வுளவு அழகாக இருக்கும். அஜ்க்ஸ் அணியில் சிறப்பாக விளையாடியதால், பல ஐரோப்பா அணிகள் இவரை ஒப்பந்தம் செய்ய தயாராக இருகின்றன. இந்த முறை கோப்பா அமெரிக்கா தொடரில் இவரை பிரேசிலின் துருப்புச் சீட்டாக பயிற்சியாளர் டைட்டீ பயன்படுத்த வாய்ப்புள்ளது.