பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி

Tamil thalivas vs Bengal warriors
Tamil thalivas vs Bengal warriors

ப்ரோ கபடி 7-வது சீசனின் ஆட்டம் 64ல் கடந்த இரு போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ள தமிழ் தலைவாஸ் அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் தோற்ற பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுமே தங்களது கடந்த போட்டிகளில் தோல்வியை தழுவியதால் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தங்களது இடத்தை முன்னேற்றும் நோக்கில் களமிறங்கினர்.

ஆரம்ப 7:

தமிழ் தலைவாஸ்: அஜய் தாகூர் (கேப்டன்), ராகுல் சௌத்ரி, சபீர் பாபு, அஜீட், மோஹீத் சில்லர், மன்ஜீத் சில்லர், ரன் சிங்

பெங்கால் வாரியர்ஸ்: மனீந்தர் சிங் (கேப்டன்), கே பிரபஞ்சன், நவீன் நர்வால், பல்தேவ் சிங், ரின்கு நர்வால், ஜீவா குமார், இஸ்மாய்ல் நபிபக்ஷ்

டெல்லியில் உள்ள தியாகராசர் ஆடுகளத்தில் நடந்த இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் எவ்வாறு தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்பது பற்றி பின்வருமாறு பார்ப்போம்:

அர்ஜீனா விருது வென்ற அஜய் தாகூர் முதலில் ரெய்ட் சென்று புள்ளிகள் ஏதும் எடுக்காமல் திரும்பினார். ராகுல் சௌத்ரி செய்த தவறினால் பிரபஞ்சன் ஒரு புள்ளி வென்று பெங்கால் வாரியர்ஸ் தனது கணக்கைத் தொடங்கியது.

ஆரம்பத்தில் பெங்கால் வாரியர்ஸ் கேப்டன் மணீந்தர் சிங்-ற்கு ஆட்டம் மோசமாக இருந்தது. இருப்பினும் பிரபஞ்சன் அணியை சரிவில் விடாமல் தடுத்து சில முக்கிய புள்ளிகளை பெற்றார்.‌

ஆர்மப நிமிடங்களில் பெங்கால் வாரியர்ஸ் வென்ற 7 புள்ளிகளில் பிரபஞ்சன் மட்டுமே 6 புள்ளிகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத விதமாக 12வது நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் ஆல்-அவுட் ஆனது. இதனால் 5 புள்ளிகளில் பெங்கால் வாரியர்ஸ் முன்னிலை வகித்தது. அந்த சமயத்தில் அஜய் தாகூர் ரெய்ட் சென்று 2 புள்ளிகளை இலாபகரமாக எடுத்து வந்தார்‌.

தமிழ் தலைவாஸ் அணிக்காக தனி ஒருவராக போராடி புள்ளிகளை வென்று வந்தார் அஜய் தாகூர். அத்துடன் 2019 ப்ரோ கபடி சீசனில் தனது 50 வது ரெய்ட் புள்ளிகளையும் கடந்தார். எதிர்பாராத விதமாக ராகுல் சௌத்ரி முதல் 20 நிமிடங்களில் ஒரு புள்ளியை கூட எடுக்காமல் மிகவும் கடுமையாக தடுமாறினார்.

முதல் பாதி ஆட்டத்தில் 15-14 என பெங்கால் வாரியர்ஸ் பக்கம் ஆட்டம் இருந்தது. அடுத்த 20 நிமிடங்களின் ஆரம்பத்திலே சுகேஷீனால் மன்ஜீத் சில்லர் வெளியேற்றப்பட்டார். பெங்கால் வாரியர்ஸ் 25வது நிமிடத்தில் இருந்த ஒரு மேல்முறையீட்டை செய்தது. ஆனால் அதுவும் தவறாக அமைந்தது.

எதிரணியின் புள்ளி வித்தியாசத்தை குறைக்க தமிழ் தலைவாஸின் அஜீட் சிறப்பாக விளையாடினார். அதன்பின் ஆனந்த் 3 புள்ளிகளை வென்று சூப்பர் ரெய்டாக மாற்றினார்.

தமிழ் தலைவாஸ் 35வது நிமிடத்தில் மீண்டுமொருமுறை ஆல்-அவுட் ஆகி மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. பிரபஞ்சன் சூப்பர் 10 புள்ளிகளை பெற்று பெங்கால் வாரியர்ஸை 8 புள்ளிகளில் முன்னிலை பெறச் செய்தார். அஜய் தாகூரும் தனது இந்த சீசனில் முதல் சூப்பர் 10ஐ எடுத்தார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் அஜய் தாகூர் அவுட் ஆக்கப் பட்டார்‌. ரின்கு நர்வால் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக 5 புள்ளிகளை வெற்றார். தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்கால் வாரியர்ஸ் 35-26 என வெற்றி பெற்றது. சிறப்பான ரெய்ட் மற்றும் டிபென்ஸின் மூலம் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது. அஜய் தாகூரின் சூப்பர் 10 தமிழ் தலைவாஸிற்கு பயன்படவில்லை.

Quick Links

Edited by Fambeat Tamil