டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சனாக இருக்கலாம் , ஆனால் வேகத்தைப் பொறுத்த வரை அவரை மிஞ்ச பல பவுலர்கள் உண்டு. பேட்ஸ்மேனை சுவிங் மற்றும் சீம் பவுலிங்கால் மிரட்டிய பவுலர்கள் பலர் உள்ளனர், ஆனால் வெறும் வேகத்தை மட்டுமே பயன்படுத்தி அச்சுறுத்தியவர்கள் சிலரே. பல கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழும் கேள்வி, கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக வேகத்துடன் பந்துவீசிய பவுலர் யார்? என்பது தான். அந்த கேள்விக்கு விடை தரும் விதமாக , கிரிக்கெட் வரலாற்றின் டாப் 10 வேகப்பந்துவீச்சாளர்கள் ( வேகத்தின் அடிப்படையில் மட்டும் ) இதோ,
#10 ஷேன் பாண்ட் ( Shane Bond ):
வேகமான பந்து : 156.4 kmph
மிகவும் திறமையான பவுலரான பாண்ட் , நியூசிலாந்தின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர். சிறு வயதிலேயே தன் அணிக்காக விளையாடத் தேர்வுச் செய்யப்பட்டார். ஆனால் தோள்பட்டை காயத்தினால் மிகவும் அவதிப்பட்டார். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 87 மற்றும் ஒரு நாள் போட்டியில் 147 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரது கரியரின் வேகமான பந்தை(156.4) 2003 உலக கோப்பையில் பதிவு செய்தார்.
#9 முகமது சமி ( Mohammad Sami ):
வேகமான பந்து : 156.4 kmph
பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் அக்தருக்கு பிறகு அதிவேகத்துடன் பந்து வீசியது முகமது சமி தான். இவரிடம் வேகம் இருந்தாலும் ரன்களை வாரி வழங்கும் பழக்கம் இருந்ததால் , சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட நாள் நிலைக்க முடியவில்லை. தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 85 மற்றும் ஒரு நாள் போட்டியில் 121 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரது கரியரின் வேகமான பந்தை(156.4) 2003-இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பதிவு செய்தார்.
#8 மிட்சல் ஜான்சன் ( Mitchell Johnson ):
வேகமான பந்து : 156.8 kmph
இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள பல ஆஸ்திரேலிய பவுலர்களில் ஜான்சனும் ஒருவர். இவரின் பல பாராட்டதக்க பவுலிங் ஸ்பெல்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 313 மற்றும் ஒரு நாள் போட்டியில் 239 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரது கரியரின் வேகமான பந்தை(156.8) 2013-இல் இங்கிலாந்துக்கு எதிராக பதிவு செய்தார்.
#7 ஃபிடல் எட்வர்ட்ஸ் ( Fidel Edwards ):
வேகமான பந்து : 157.7 kmph
இவரது பவுலிங் ஸ்டைல் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜெஃப் தாம்சனின் பவுலிங் ஸ்டைல் போன்று இருக்கும். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 165 மற்றும் ஒரு நாள் போட்டியில் 60 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரது கரியரின் வேகமான பந்தை(157.7) 2003-இல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பதிவு செய்தார்.
#6 ஆண்டி ராபர்ட்ஸ் ( Andy Roberts ):
வேகமான பந்து : 159.5 kmph
வெஸ்ட் இண்டீஸின் புகழ் பெற்ற 70's பவுலிங் அட்டாக்கில் முக்கியமான ஒரு பவுலர் ராபர்ட்ஸ். தனது காலத்தின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களை வேகத்தால் மிகவும் அச்சுறுத்தியவர். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 202 மற்றும் ஒரு நாள் போட்டியில் 87 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரது கரியரின் வேகமான பந்தை(159.5) 1975-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எதிராக பதிவு செய்தார்.
#5 மிட்சல் ஸ்டார்க் ( Mitchell Starc ):
வேகமான பந்து : 160.4 kmph
தற்பொழுது விளையாடும் வீரர்களில் ஸ்டார்கிற்கு இணையான வேகத்தில் பவுலிங் செய்யும் பந்துவீச்சாளர்கள் மிகவும் குறைவு. அதிவேகத்தில் பந்தை சுவிங் செய்யும் திறமை கொண்டவர். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 191 மற்றும் ஒரு நாள் போட்டியில் 145 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இவரது கரியரின் வேகமான பந்தை(160.4) 2015-இல் நியூசிலாந்து எதிராக பதிவு செய்தார்.
#4 ஜெஃப் தாம்சன் ( Jeff Thomson ):
வேகமான பந்து : 160.6 kmph
டெனிஸ் லில்லீயுடன் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தாம்சன். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 200 மற்றும் ஒரு நாள் போட்டியில் 55 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரது கரியரின் வேகமான பந்தை (160.6) 1975-இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக எதிராக பதிவு செய்தார்.
#3 ஷான் டெய்ட் ( Shaun Tait ):
வேகமான பந்து : 161.1 kmph
தனது கிரிக்கெட் வாழ்க்கையை 2007-இல் தொடங்கிய டெய்ட், தனது அதிவேகப் பந்துவீச்சாள் உலகப் புகழ் பெற்றார். ஆனால் காயங்களின் காரணமாக 28 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 5 மற்றும் ஒரு நாள் போட்டியில் 62 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரது கரியரின் வேகமான பந்தை(161.1 kmph) இங்கிலாந்துக்கு எதிராக எதிராக பதிவு செய்தார்.
#2 ப்ரெட் லீ ( Brett Lee ):
வேகமான பந்து : 161.1 kmph
கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக பவுலிங் செய்த வீரர்களில், ப்ரெட் லீயின் சிறப்பம்சம் பல காயங்களை கடந்த அவரது நீண்ட நாள் கிரிக்கெட் பயணம். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 310 மற்றும் ஒரு நாள் போட்டியில் 380 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரது கரியரின் வேகமான பந்தை (161.1 kmph) 2005-இல் நியூசிலாந்துக்கு எதிராக பதிவு செய்தார்.
#1 சோயப் அக்தர்( Shoaib Akhtar ):
வேகமான பந்து : 161.3 kmph
"ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்று தனது அதிவேகப்பந்துவீச்சிற்காக கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் அக்தர். அவரது சராசரி பவுலிங் வேகம் 145-150 என்பது குறிப்படத்தக்கது. தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 178 மற்றும் ஒரு நாள் போட்டியில் 247 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரது கரியரின் வேகமான பந்தை (161.3 kmph) 2003 உலக கோப்பையில் பதிவு செய்தார்.
எழுத்து : ரிதப்ரதா பேனர்ஜீ
மொழியாக்கம் : அஜய்