இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே மாறிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் சிறப்பாக விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில் சில வீரர்கள் இந்தியாவில் பிறந்தாலும் பிற காரணங்களால் வெளிநாடுகளில் குடியேறி அந்த நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் 10 நபர்களை இங்கு காணலாம்.
# 1) கோலின் கவுட்ரி
தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தவர் கோலிட் கவுட்ரி. இவரின் தந்தை ஊட்டியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சொந்தக்காரர். இந்நிலையில் இவர் தனது 5 வயதில் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பி வைத்தனர். பின் அந்த நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டியில் விளையாடிய முதல் வீரர் இவரே. தனது 100வது போட்டியில் சதமடித்த இவர் மொத்தம் 22 சதங்கள் விளாசியுள்ளார்.
டெஸ்ட் விளையாடும் ஆறு நாடுகளுடன் ஹோம் மற்றும் அந்நிய நாட்டு போட்டிகளில் சதம் விளாசிய முதல் வீரரும் இவர் தான். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் ஐசிசி யின் தலைவராக நியமிக்கப்நட்டார்.
# 2) டக்ளஸ் ஜார்டினே
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டக்ளஸ் ஜார்டினே மும்பையில் பிறந்தவர். 1932-33 ஆஷஸ் தொடரில் கேப்டனாக அணிக்கு கோப்பையை வென்றுத் தந்தவர் இவர். தனது 9 வயதிலேயே ஸ்காட்லாந்தில் குடியேறிய இவர் சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாடி வந்தார். இவர் தனது கேப்டன் திறமை பள்ளி போட்டிகளில் நிரூபித்தார். இவர் இங்கிலாந்து அணிக்காக22 போட்டிகள் விளையாடியுள்ளார்.
# 3) கே எஸ் ரஞ்சிட்சின்ஜி ( ரஞ்சி )
இவர் இந்தியாவில் கதியவார் என்ற ஊரில் பிறந்தவர். அந்த நூற்றாண்டின் சிறந்த வீரராக கருதப்பட்டவர் ரஞ்சி. பணக்கார வீட்டில் பிறந்த இவர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். தனது கல்லூரியில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். முதல் தர போட்டியில் சூசெக்ஷ் அணிக்காக அறிமுகமான போட்டியிலேயே 77, 150 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணியில் சேர்கப்பட்ட இவர் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அரைசதம் மற்றும் சதம் விளாசினார். இவரது வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலினால் அனைவராலும் கவரப்பட்டவர் ரஞ்சி. இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடும் முதல் இந்திய வீரர் இவரே. இவரின் நியபகமாக ரஞ்சி கோப்பையை இந்தியாவில் துவங்கியது பிசிசிஐ.
#4 )கேஎஸ் துலீப் சின்ஜீ ( துலீப் )
இவரும் இந்தியாவின் கதியவார் பகுதியில் பிறந்தவர். ரஞ்சி-யின் வழியை பின் தொடர்ந்தவர் துலீப். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் இங்கிலாந்து அணிக்காக 12 போட்டியில் விளையாடினார். இவரின் சராசரி 58 ஆகும். தனது ஓய்விற்கு பின் இந்தியாவில் பொதுத்துறையில் பணியாற்றினர். பிசிசிஐ இவரின் நியாபகமாக துலீப் கோப்பையை அறிமுகப்படுத்தியது.
#5 ) பாப் ஊல்மர்
கான்பூரில் பிறந்த பாப் ஊல்மர் தென்னாப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியவர். இழரின் தந்தை உத்திர பிரேதேச அணியின் கேப்டனாக விளையாடியவர். இவர் 1972 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார்.
#6 ) ராபின் ஜாக்மேன்
தற்போதைய கிரிக்கெட் கமெண்ட்ரியில் பேர்போனவர் ராபின் ஜாக்மேன். இவர் இந்தியாவின் சிம்லா நகரில் பிறந்தார். போரின் போது இவரது தந்தையின் காலில் காயமானதால் இவரது குடும்பம் இங்கிலாந்து நாட்டில் குடியேறினர். பின்னர் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாட துவங்கினார் ராபின் ஜாக்மேன். தென்னாப்ரிக்க பெண்ணை மணந்த இவர் தென்னாப்ரிக்க நாட்டிற்காகவும் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இவர் தனது 35 வயதில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
#7 ) ஆஸிப் இக்பால்
ஐதராபாத்-ல் பிறந்த இவர் பாகிஸ்தான் நாட்டிற்காக விளையாடியுள்ளார். 1943 -ல் பிறந்த இவர் ஐதராபாத் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வந்தார். இதன் பின் இவர் குடும்பம் பாகிஸ்தான் குடிபெயர்ந்த பின் பாகிஸ்தான் அணியில் விளையாடினார். 1975-ல் பாகிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பை விளையாடினார் இவர். பின் 90களில் நடுவராகவும் நியமிக்கப்பட்டார்.
#8 ) நாசீர் உசேன்
சென்னையில் பிறந்த நாசீர் உசேன் கிரிக்கெட்-ல் மிகவும் பெயர்போனவர். இவரது தந்தை ஒரு கிரிக்கெட் வீரர். அவர் பல போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியுள்ளார். 1975-ல் இங்கிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்த இவர் அந்நாட்டில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். 1990-ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் 1999-ல் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் மாறினார். இவரது திறமையால் அணியை சிறப்பாக வழிநடத்தினார். தற்போது முன்னணி வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
#9 ) ஹனீப் முகமது
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான ஹனீப் முகமது இந்தியாவின் ஜுனகாத் நகரில் பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். மூவரும் பாகிஸ்தான் அணிக்காகவே விளையாடினர். இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 337 ரன்கள் குவித்தார். அதுமட்டுமல்லாமல் முதல் தர போட்டிகளில் 499 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
#10) மஜீட் கான்
ஜகான்கிர் கான்-ன் மகனான இவர் இந்தியாவின் லூதியானா நகரில் பிறந்தவர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய ஆண்டு பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். லாகூர் அணிக்காக முதல் தர போட்டிகள் விளையாடிய இவர் 1964 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் முதல்நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதம் விளாசிய வீரர்களுள் இவரும் ஒருவர்.