உலகக் கோப்பை தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், கோப்பை ட்ரஃபால்கர் சதுக்கம் சென்றடைந்தது

கோப்பையுடன் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கேப்டன் கிளைவ் லாய்ட் 
கோப்பையுடன் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கேப்டன் கிளைவ் லாய்ட் 

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி உலகக்கோப்பை தொடங்க இன்னும் 100 நாட்களே மீதம் உள்ளது. மற்ற காலங்களில் கிரிக்கெட் பார்க்காதவர்கள் கூட உலகக்கோப்பையில் என்ன நடக்கிறது என்று ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்வர். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் இதற்கு ரசிகர்கள் உண்டு. வரும் உலகக்கோப்பை இங்கிலாந்து மண்ணில் நடக்க உள்ள நிலையில், கோப்பை லண்டன் ட்ரஃபால்கர் சதுக்கம் சென்றடைந்துள்ளது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இந்த முறை சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஏற்கனவே தரவரிசை பட்டியலில் முதல் இடம் வகிக்கும் இங்கிலாந்து, இந்த முறை நிச்சியம் கோப்பை வெல்லும் என்று பலரால் கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியை மே மாதம் 30ம் நாள் சந்திக்கிறது. இதுவரை 11 முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஒரு முறை கூட கோப்பை வெல்லாத இங்கிலாந்து, இம்முறை எப்படியாவது வென்றிட வேண்டும் என்று துடிப்பாக உள்ளது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது இந்தியா. சொந்த மண் ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த இரண்டு முறை இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வென்றுள்ளது. இந்த இரண்டு முறையும் இந்திய அணி இறுதி போட்டிவரை சென்றதால், நிச்சியம் இங்கிலாந்து அணிக்கு பெரிய ஆபத்தாக இந்திய அணி இருக்கும்.

செவ்வாய் கிழமை அன்று கோப்பையுடன் முன்னாள் மற்றும் இந்நாள் இங்கிலாந்து வீரர்கள் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் குக், ஸ்வான், ஆண்டர்சன் போன்ற ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர். இவருடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிடும் பங்குபெற்றார். இவர் 1975ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர். மேற்கிந்திய தீவுகள் அணி அப்போதைய இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் சதம் விளாசிய கிளைவ் லாய்ட், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதல் முறையாக கோப்பை பெற்று தந்தார். புகைப்பட கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட லாய்ட் கூறுகையில், "உலகக்கோப்பை தொடங்க இன்னும் 100 நாட்களே மீதம் உள்ளது. அனைவரையும் போல நானும் ஆரவமாக உள்ளேன். மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை சிறப்பாக விளையாடி கோப்பை வெல்லும் என நம்பிக்கை உள்ளது". இவ்வாறு அவர் கூறினார்.

மே மாதம் தொடங்க உள்ள இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளது. ஒவ்வொரு அணியை மற்றொரு அணியை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும். ரவுண்டு ராபின் முறையில் நடக்க உள்ள இத்தொடரில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி, அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறும். கோப்பைக்கான இறுதிப்போட்டி இங்கிலாந்தின் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை மாதம் 14ம் தேதி நடக்கவுள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil