சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்றாலே அன்று முதல், இன்று வரை இந்திய அணி தலைசிறந்த அணியாகத் தான் திகழ்கிறது. அதற்கு காரணம் நம் இந்திய அணியில் விளையாடும் பல திறமையான வீரர்கள் தான்.
விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற திறமை மிகுந்த வீரர்கள் தற்போது இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சச்சின், சேவாக், கங்குலி, போன்ற பல ஜாம்பவான்கள் நம் இந்திய அணியில் விளையாடி, தற்போது ஓய்வு பெற்றுள்ளனர். இது போன்ற பல திறமையான வீரர்களால் தான், இந்திய அணி இன்று வரை தலை சிறந்த அணியாக திகழ்கிறது. இவ்வாறு ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து, அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) சச்சின் டெண்டுல்கர்
ரன்கள் – 141 ( 128 )
விக்கெட்டுகள் – 4
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் கடவுள் என்று அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். சச்சின் என்றாலே அவருக்கென்று தனி பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்றாலே தனி மரியாதை இருப்பதற்கு முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர் தான். இந்திய அணியின் பல வெற்றிகளில், இவரது சிறப்பான விளையாட்டு என்பது முக்கிய பங்காக அமைந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதினர். இந்தப் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 128 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி பந்துவீச்சில் 9 ஓவர்களை வீசி, அதில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
#2) சவுரவ் கங்குலி
ரன்கள் – 130
விக்கெட்டுகள் – 4
நமது இந்திய அணியில் அதிரடிக்கு பெயர் போன முக்கிய வீரர்களில் சவுரவ் கங்குலியும் ஒருவர். எந்த பந்தையும், மைதானத்திற்கு வெளியே அனுப்ப கூடிய அளவிற்கு சிக்சர் அடிப்பார். தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடக் கூடிய திறமை படைத்தவர். இந்திய அணிக்கு பல போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதினர். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கங்குலி 130 ரன்கள் விளாசினார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடி, 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
#3) யுவராஜ் சிங்
ரன்கள் – 118
விக்கெட்டுகள் – 4
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், நமது இந்திய அணியில் அதிரடிக்கு பெயர் போன மற்றொரு முக்கியமான வீரர் யுவராஜ் சிங். 2013 ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இவர்தான். அந்த ஆண்டு உலக கோப்பை தொடரில், தொடர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இவர் இந்திய அணியில் விளையாடவில்லை.
விரைவில் பார்முக்கு திரும்பி இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதினர். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய யுவராஜ், 118 ரன்கள் விளாசினார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் 10 ஓவர்கள் வீசி அதில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.