சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரை அனைத்து அணிகளிலுமே தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் விளையாடி வருகின்றனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாடுகின்ற வீரர்களே கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் என அழைக்கப் படுகின்றனர். அவ்வாறு சிறப்பாக விளையாடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10,000+ ரன்களையும், 500+ விக்கெட்டுகளையும், வீழ்த்திய சிறந்த ஆல்ரவுண்டர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) ஜேக்கியூஸ் காலிஸ்
ரன்கள் – 25,534
விக்கெட்டுகள் – 577
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த ஜேக்கியூஸ் காலிஸ். இவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணியில் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்தார். இவர் மொத்தம் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 13289 ரன்களை குவித்துள்ளார். அதில் 45 சதமும், 58 அரை சதங்களும் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளிலும் தலை சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். மொத்தம் 328 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 11579 ரன்களை குவித்துள்ளார். அதில் 17 சதங்களையும், 86 அரை சதங்களையும் விளாசியுள்ளார். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் முன்னணி வீரராக வலம் வந்தார். இவர் இதுவரை மொத்தம் 519 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் அவர் 577 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#2) ஷாஹித் அப்ரிடி
ரன்கள் - 11196
விக்கெட்டுகள் – 541
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் அணியை சேர்ந்த அதிரடி வீரரான ஷாஹித் அப்ரிடி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிக்ஸர் அடிப்பதில் பெயர் போனவர். இவர் பாகிஸ்தான் அணியில் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வந்தார். பாகிஸ்தான் அணியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்றால் அது இவர்தான். இவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 476 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஆனால் இவர் வெறும் 11 சதங்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடித்துள்ளார். 524 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், மொத்தம் 541 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#3) ஷகிப் அல் ஹசன்
ரன்கள் – 10855
விக்கெட்டுகள் – 540
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் வங்கதேச அணியை சேர்ந்த ஷகிப் அல் ஹசன். தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேச அணி ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர்தான். அனைத்து போட்டிகளிலுமே சராசரியான ரன்களை அடித்து கொடுத்து வருகிறார். வங்கதேச அணியை பொறுத்தவரை பேட்டிங்கிலும் மற்றும் பந்து வீச்சிலும் தலைசிறந்த முன்னணி வீரர் இவர்தான். இவர் டெஸ்ட் போட்டிகளில் 3807 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 5577 ரன்களையும், டி20 போட்டிகளில் 1471 ரன்களை குவித்துள்ளார்.
ஆனால் இவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த எண்ணிக்கையில் தான் சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் வெறும் 5 சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களையும் அடித்துள்ளார். இவர் இதுவரை மொத்தம் 322 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, அதில் 540 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவரது சிறப்பான பந்துவீச்சு, 36 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.