2019-திற்கான ஐபிஎல் திருவிழா இந்த வருட இறுதி முதலே தொடங்கிவிட்டது என்று சொல்லலாம் . நவம்பர் மாதத்தில் ஐபிஎல் அணிகள் இந்த வருட சீசனில் தங்கள் அணிகளில் தக்கவைக்கப்படும் வீரர்களின் விவரங்களையும் , வெளியேற்றப்படும் வீரர்களின் விவரங்களையும் வெளியிட்டது . அதன்படி ஐபிஎல் 2019ல் புதிய வீரர்களுக்கும் மற்றும் கடந்த வருடத்தில் விளையாடி அணிகளிலிருந்து கழட்டிவிடப்பட்ட வீரர்களுக்கும் வரும் டிசம்பர் 18ம் தேதி ஜெய்ப்பூரில் மாலை 3 மணியளவில் ஏலம் நடைபெறவுள்ளது .
புதிதாக பங்கேற்கும் வீரர்கள் பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும் . அதன்படி மொத்தமாக 1003 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர் . இதில் 232 வெளிநாட்டு வீரர்களும் அடங்கும் . இதனை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் வலைதளத்தில் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலியாக உள்ள 70 இடங்களுக்கு பதிவு செய்த 1003 பேரில் 200 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும், 800 பேர் உள்ளுர் கிரிக்கெட் வீரர்களும் , 4 பேர் அசோசியேட் அணி வீரர்களும் பதிவு செய்துள்ளனர் . 800 உள்ளுர் கிரிக்கெட் வீரர்களில் 746 வீரர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்கள்.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 9 இந்திய மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர் . அருணாசலப் பிரதேசம் , மணிப்பூர் , பீகார் , மேகாலயா , மிசோரம் , நாகலாந்து , புதுச்சேரி , உத்தரகாண்ட் , சிக்கிம் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல்- இல் பதிவு செய்துள்ளனர் . இதற்கு முழுமுதற் காரணம் ரஞ்சித் தொடர் மற்றும் விஜய் ஹசாரே தொடரே ஆகும். அத்துடன் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடத்தப்படும் பிரிமியர் லீக் தொடரின் மூலமாகவும் நிறைய வீரர்கள் கண்டெடுக்கப்படுகிறார்கள்.
ஐபிஎல் வாரியம், பதிவு செய்த அனைத்து வீரர்களிலிருந்து , 2019 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் விவரங்கள் அடங்கிய இறுதி பட்டியலை டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடும் .
ஐபிஎல் தொடர் 2019 இல் தனது 12 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது . இவ்வருட ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரிய மாறுதல் ஒன்று நடைபெற உள்ளது. என்னவென்றால் ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து 11வது சீசன் வரை ஏலம் விட்ட ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக ஏலம் விடுவதில் 30 வருட அனுபவம் வாய்ந்த ஹக் எட்மீடஸ் "கிறிஸ்டி" என்ற கம்பெனியிலிருந்து இவ்வருடம் ஏலம் விடுவார் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்த 232 வெளிநாட்டு வீரர்களின் நாடுகள் வாரியாக எண்ணிக்கை.
நாடு (வீரர்களின் எண்ணிக்கை)
ஆப்கானிஸ்தான் 27
ஆஸ்திரேலியா 35
வங்கதேசம் 10
ஹாங்காங் 1
அயர்லாந்து 1
இங்கிலாந்து 14
நெதர்லாந்து 1
நியூசிலாந்து 17
தென்னாப்பிரிக்கா 59
இலங்கை 28
அமெரிக்கா 1
மேற்கிந்தியத் தீவுகள் 33
ஜிம்பாப்வே 5