டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிக நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் வீசப்படும் பந்துகளை, பேட்ஸ்மேன்கள் தங்களது பேட்டை கொண்டு விரைவில் அடிக்க மாட்டார்கள். அதிகமாக விக்கெட் கீப்பரின் கைகளுக்குத்தான் செல்லும்.
எனவே பந்துகள் விரைவில் சேதம் அடையாது. சேதம் குறைவாக இருந்தால், பந்துகள் அனைத்தும் அதிகமாக ஸ்விங் ஆகும். ஸ்விங் ஆகும் பந்துகளை எதிர்கொண்டு களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவது என்பது சற்று கடினம் தான். அதிக நுணுக்கங்கள் இருந்தால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ரன்களை அடிக்க முடியும். இந்த கடினமான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, 13,000+ ரன்களை குவித்த வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) சச்சின் டெண்டுல்கர் ( 15921 ரன்கள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர். இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் இவர்தான். இவர் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில், சிறந்ததொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக வலம் வந்தார். இவர் மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 15921 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 51 சதங்களையும் விளாசியுள்ளார்.
#2) ரிக்கி பாண்டிங் ( 13378 ரன்கள் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலிய அணி என்றாலே முதலில் ஞாபகத்தில் வருபவர் ரிக்கி பாண்டிங் தான். அந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் மொத்தம் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 13,378 ரன்களை குவித்துள்ளார். இதில் 41 சதங்களும், 62 அரை சதங்களும் அடங்கும்.
#3) ஜேக்யூஸ் காலிஸ் ( 13289 ரன்கள் )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜேக்யூஸ் காலிஸ். இவர் தென் ஆப்பிரிக்க அணியில் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகவும் வலம் வந்தார். இவர் மொத்தம் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில்13,289 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 45 சதங்களையும், 58 அரை சதங்களையும் விளாசியுள்ளார்.
#4) ராகுல் டிராவிட் ( 13288 ரன்கள் )
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராகுல் டிராவிட். டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடக் கூடிய திறமை படைத்தவர். அதனால் தான் “தடுப்புச்சுவர்” என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 13,288 ரன்களை குவித்துள்ளார். அதில் 36 சதங்களும், 63 அரை சதங்களும் அடங்கும்.