சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் இடையேயான போட்டி இன்று சென்னையில் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இந்த இரு அணிகளும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளனர். ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி அட்டவணையில் 3-வது இடத்தில் உள்ளது.
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. சென்னை 12 போட்டிகளிலும், பஞ்சாப் எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரைச் சென்னை அணி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பஞ்சாப் அணி ஒரு முறை கூட வென்றதில்லை.
கடந்த ஆண்டு இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் சந்தித்தபோது இருவரும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றனர். சென்னை அணி கடந்த ஆண்டு தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. பஞ்சாப் அணி 7-வது இடத்தை பெற்றது.
சென்னை அணியில் சில விரிசல்கள் காணத் தொடங்கியுள்ளன. மேலும் தொடக்க வீரர்கள் சரியாக பங்களிக்கவில்லை.
# 1 அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2018-ஆம் ஆண்டு 16 போட்டிகளில் 602 ரன்கள், 43.00 சராசரி, ஸ்ட்ரைக் ரேட் 149.75 என சென்னை அணிக்கு முக்கிய வீரராக இருந்தார்.
ஆனால் இந்த ஆண்டு ராயுடு இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த தொடரில் நான்கு போட்டிகளில் 34 ரன்கள் மட்டுமே அவர் அடித்துள்ளார். முதல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக 28 ரன்கள் எடுத்தததே இந்த தொடரில் அவர் எடுத்த அதிக பட்ச ரன்கள். அடுத்த மூன்று போட்டிகளில் 5, 1, மற்றும் 0 என ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.
சிறந்த அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களிடம் நிறைய பங்களிப்பை எதிர்பார்க்கிறது சி.எஸ்.கே அணி. முரளி விஜய் மற்றும் சாம் பில்லிங்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் அணியில் இன்னும் எடுக்கப்படாத நிலையில் அணி நிர்வாகம் ராயுடு மீது அழுத்தம் கொடுப்பது நல்லது.
2 ஷேன் வாட்சன்
ஐபிஎல் வரலாற்றில் ஷேன் வாட்சன் மிகவும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சென்னை அணிக்காக விளையாடுவதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக வாட்சன் விளையாடினார்.
ஐ.பி.எல். தொடரில் 2018-ஆம் ஆண்டு 15 போட்டிகளில் 555 ரன்கள், 39.64 சராசரி,155.59 ஸ்ட்ரைக் ரேட் என சி.எஸ்.கே. அணிக்கு இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக வாட்சன் இருந்தார். சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இவர் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஆண்டு வாட்சனின் பேட்டிங் சிறப்பாக இல்லை. இதுவரை வாட்சன் நான்கு போட்டிகளில் 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டெல்லி அணிக்கு எதிராக 44 ரன்கள் எடுத்தது தான் இவரது அதிகபட்ச ரன்கள்.
வாட்சன் இந்த சீசனில் பந்துவீசாமல், பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை அணி வாட்சனிடம் இருந்து ஒரு சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். மீண்டும் அவர் தோல்வியடைந்தால் மாற்று வீரராக டூ பிளெஸ்ஸிஸ்க்கு ஒரு வாய்ப்பை வழங்கலாம்.
எழுத்து- அப்சல் கோழ்வீட்டில் ஹபீபுல்லா
மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்