சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. களத்தில் நீண்ட நேரம் நிலைத்து விளையாட வேண்டும் என்பதால், அதிக திறமையும், உடல் வலிமையும் பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது சற்று கடினம் தான். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பல திறமையான வீரர்கள், நமது இந்திய அணியில் உள்ளனர். அதிலும் முக்கியமாக சில வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ராகுல் டிராவிட்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய டெஸ்ட் அணியின் “தடுப்புச் சுவர்” என்று அழைக்கப்பட்டு வரும் ராகுல் டிராவிட். இவரை கிரிக்கெட் ரசிகர்கள் “தடுப்புச் சுவர்” என்று அழைப்பதற்கான காரணம் என்னவென்றால், இவர் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவார். விரைவில் அடித்து விளையாட பேட்டை உயர்த்த மாட்டார். அரை சதம் அடிப்பதற்கு கூட 100 – க்கும் மேலான பந்துகளை எடுத்துக் கொள்வார். எதிர் அணியின் பந்து வீச்சாளர்கள் இவரது விக்கெட்டை எடுக்க திணறுவார்கள். அந்த அளவிற்கு மிக நுணுக்கமாக விளையாடக் கூடிய திறமை படைத்தவர் ராகுல் டிராவிட்.
1999 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே இவர் சதம் அடித்துள்ளார். முதல் இன்னிங்சில் 190 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 103 ரன்களும் விளாசினார். அதுமட்டுமின்றி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் விளாசியுள்ளார். முதல் இன்னிங்சில் 110 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 135 ரன்களும் அடித்துள்ளார்.
#2) விராட் கோலி

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து கொண்டே வருகிறார் விராட் கோலி. அதுவும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக மாறிய பிறகு, சாதனை மேல் சாதனைகளை குவித்து வருகிறார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
டி – 20 போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் 50 - க்கும் மேலான சராசரியை வைத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்துள்ளார். முதல் இன்னிங்சில் 115 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) அஜின்கே ரஹானே

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், தற்போது நமது இந்திய டெஸ்ட் அணியின், துணை கேப்டனான அஜின்கே ரஹானே. நமது இந்திய டெஸ்ட் அணி, மிடில் ஆர்டரில் வலுவான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர்தான். டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை செய்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஹானே, முதல் இன்னிங்சில் 127 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்களும் அடித்தார்.