தற்போதைய உலககோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியானது அரையிறுதிக்குள் எளிதாக நுழைந்து விட்டது. இதற்கு காரணம் ரோகித் சர்மாவின் அதிரடியான சதங்கள், பும்ராவின் சிறந்த பந்துவீச்சு மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் உதவியே. இருந்தாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை இன்றளவும் தீரவில்லை. இந்திய அணி அறிவிக்கப்படும் போது விஜய் சங்கர் தான் இந்திய அணிக்கு நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பயிற்சி ஆட்டத்தில் அவரின் சொதப்பல் மற்றும் கே எல் ராகுலின் சதம் ஆகியவை விஜய் ஷங்கரின் நான்காம் இடத்தை பறித்து விட்டது. முதல் சில போட்டிகளில் ராகுல் நான்காவது இடத்தில் களமிறக்கப்பட்டார். ஷிகர் தவான் காயம் காரணமாக அவர் உலககோப்பை தொடரிலிருந்து விலக ராகுல் அவரின் துவக்க வீரர் இடத்தை நிரப்பினார். எனவே நான்காம் இடம் வெற்றிடமானது. அந்த இடத்தை இந்திய அணி விஜய் சங்கருக்கு வாய்ப்பளித்தது. ஆனால் அவர் அதை சரியாக உபயோகிக்கவில்லை. அடுத்த போட்டியிலும் தனது திறமையை நிரூபிக்கத் தவறினார் அவர். எனவே அதன் பின் நடைபெற்ற போட்டியில் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்-யை களமிறக்க வைத்தது அணி நிர்வாகம். இவர் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அதிரடியாக ஆடி இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் அனுபவமில்லாத தனது ஆட்டத்தால் ஆட்டமிழந்தார். தற்போது கடைசியாக நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் கூட வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அனுபவமில்லாத இவர் அந்த இடத்திற்கு சரியானவர் இல்லை என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது. தற்போது இந்தியாவின் டாப் ஆர்டர் பலமாக இருப்பதால் இந்த பிரச்சினை பெரிதாக தெரியவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பும் போது இது பெரிய பிரச்சனையாக மாறும். இதனால் இந்திய அணி நிர்வாகம் உலககோப்பை தொடருக்கு பின்னர் இந்த இடத்திற்கு நிச்சம் பல புதுமுகச்களை களமிறக்கி பரிசோதிக்கும். சரி அது இருக்கட்டும் இந்த உலககோப்பை போட்டியில் சில வீரர்கள் எதற்காக அணியில் இருக்கின்றனர் என்ற சந்தேகம் வரும் அவர்கள் உலககோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் விளையாடுவார்களா என்பது நமக்கு தெரியாது. அந்த வகையில் உலககோப்பை தொடருக்கு பின் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ள இரண்டு வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#2) கேதார் ஜாதவ்
இவர் உலககோப்பை தொடருக்கு பின் கட்டாயம் இந்திய அணியில் இடம் பிடிக்க மாட்டார் என்பது ரசிகர்களின் கருத்து. கேதார் ஜாதவ் இந்திய அணியில் 2017 முதல் விளையாடி வருகிறார். இவர் எப்படி அணியில் இடம் பிடித்தார் என்பது ரசிகர்கள் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
பின் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தனது வித்தியாசமான பந்துவீச்சால் பல விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் ஆறாவது பந்துவீச்சாளராக உருவெடுத்தார். அதன் பின் போக போக இந்திய அணியில் இவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இருந்தாலும் இவரை இன்றளவும் அணியில் வைத்துள்ளது நிர்வாகம். தற்போதைய உலககோப்பை தொடரை பொறுத்தவரை ஒரேயொரு போட்டியில் மட்டும் அரை சதம் அடித்தார். அதன் பின் இவரது தாக்கம் இந்திய அணியில் சுத்தமாக இல்லை. இந்த தொடரில் இவரது பந்துவீச்சும் எடுபடவில்லை. கடைசியாக இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இவரின் படுமோசமான ஆட்டம் ரசிகர்கள் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். எனவே உலககோப்பை தொடருக்கு பின் இவரை அணி நிர்வாகம் கழட்டி விட்டு அந்த இடத்திற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சிக்கும்.
#1) தினேஷ் கார்த்திக்
இந்த பட்டியலில் இவரின் பெயர் இடம் பெற்றிருப்பது பலருக்கு ஆச்சர்யமளிக்கலாம். இந்திய அணிக்காக 15 ஆண்டுகளாக விளையாடும் இவர் இந்த வருடம் தான் தனது முதலாவது உலககோப்பை போட்டியிலேயே அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே இவர் ஒரு சில போட்டிகளில் சொதப்பினால் இவரை அடுத்த தொடரின் இந்திய அணியில் இடம் பெறமாட்டார். தற்போதைய உலககோப்பை தொடரில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கேதார் ஜாதவ்க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். அந்த போட்டியின் கடைசியில் களமிறங்கிய இவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அதேபோல் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இவருக்கு களமிறங்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஏன் அரையிறுதி போட்டியில் கூட இவர் விளையாடுவது சந்தேகம் தான். எனவே இவரை உலககோப்பை தொடருக்கு பின் இந்திய அணி கண்டிப்பாக கழட்டி விடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இது ஒன்றும் இவருக்கு புதிதல்ல. இதிலிருந்து மீண்டு வருவதும் இவருக்கு கடினமல்ல.