இந்திய அணி கடைசியாக உலக கோப்பையை வென்ற தொடர் என்றால், அது 2011ம் வருடம் நடைபெற்ற உலக கோப்பை தொடர் தான். அந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை கடுமையாக போராடி தான் உலக கோப்பையை வென்றது. அந்த உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி தான் உலக கோப்பை தொடரில் மிக விறுவிறுப்பான போட்டியாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் மிக சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக் மற்றும் சச்சின் முதலில் களம் இறங்கினர். எப்பவும் போல் அதிரடியை தொடங்கினார் சேவாக். அதிரடியாக 6 பவுண்டரிகளை விளாசிய சேவாக் 35 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கௌதம் கம்பீர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ரன்களை சேர்த்தனர். மிகவும் பொறுமையாக விளையாடிய கவுதம் கம்பீர் அரைசதம் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறினார்.
அதன் பின்பு வந்த யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடினார். அதிரடியாக 9 பவுண்டரிகளை விளாசிய இவர் அரைசதம் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறிவிட்டார். இறுதிவரை விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 120 ரன்கள் குவித்தார். மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் சச்சின் டெண்டுல்கரின் உதவியால் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 338 ரன்கள் குவித்தது.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்ட்ராஸ், தொடக்கத்திலிருந்தே அதிரடியை தொடங்கினார். அற்புதமாக விளையாடிய இவர் 158 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற வீரர்கள் அனைவரும் விரைவிலேயே தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறிது நேரம் பொறுமையாக விளையாடிய பெல் மட்டும் அரை சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் அவுட்டான விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 6 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாருக்கு ஓவர் கொடுப்பது என்று குழப்பம் வந்தது. அந்த சமயத்தில் கேப்டன் தோனி, முனாப் படேலுக்கு ஓவர் கொடுத்தார்.
கடைசி ஓவரை வீசிய இவரின் ஓவரில், முதல் 2 பந்துகளில் 3 ரன்கள் அடிக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் சிக்சர் அடிக்கபட்டது. திடீரென இந்த போட்டி இங்கிலாந்து அணி பக்கம் மாறியது. இறுதியில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தில் இங்கிலாந்து அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இறுதியில் இந்த போட்டி டையில் முடிந்தது. கடைசி பந்து வரை அனல் பறந்த இந்த போட்டி, உலக கோப்பை தொடரின் மிக விறுவிறுப்பான போட்டியாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.