இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் 44 நாட்களே உள்ள நிலையில் நிலையில், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வாளர்கள் குழு நேற்று இந்திய அணியை அறிவித்தது. மேலும், இந்தக் குழு ஐபிஎல்லின் செயல்பாடுகளை பொறுத்து அணி தேர்வு செய்யப்படவில்லை என விளக்கம் தெரிவித்தது. அவர்கள் தெரிவித்த இந்த விளக்கத்தை உரைக்கும் வகையில், 2019 ஐபிஎல்லில் இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத தினேஷ் கார்த்திக், உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.
கடந்த 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில் அணியை தோனி வழிநடத்தினார். இம்முறை முதன்முதலாக விராட் கோலி வழி நடத்த உள்ளார். இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கான தகுதியான அணிகளில் இந்திய அணியும் ஒன்று. இம்முறை உலகக் கோப்பை தொடரை வென்றால் மூன்றாவது முறையாக இந்திய அணி பட்டத்தை வெல்லும். ஆகவே, கடந்த இரு உலகக் கோப்பை தொடர்கள் உட்பட இந்த ஆண்டு உலக கோப்பை தொடரிலும் இடம்பெற்ற இந்திய அணியை பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.
#1.உலக கோப்பை தொடர் 2019 :
2019-ம் ஆண்டு அணியின் இரு தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருடன் இணைந்து மாற்று தொடக்க வீரராக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒன் டவுனில் விராட் கோலி மற்றும் மிடில் ஆர்டரில் விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் கலக்க உள்ளனர். அணி நிர்வாகம் விரும்பினால், கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரிலும் களமிறக்கப்படலாம் என தேர்வாளர்கள் கூறினர். பெரிதும் எதிர்பார்த்த நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெற்றுள்ளார். அம்பத்தி ராயுடு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். பேட்டிங் ஆல்ரவுண்டர்களாக பாண்டியா மற்றும் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். பகுதிநேர வேகப்பந்து வீச்சாளராக விஜய் சங்கர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் சாஹலுடன் இணைந்து ரவிந்திர ஜடேஜா மாற்று சுழற்பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். ஜஸ்பிரிட் பும்ரா புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது சமி என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இணைந்து உள்ளனர்.
2019 உலகக் கோப்பை தொடருக்கான அணி வருமாறு:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்) , கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் முகமது சமி.
#2.உலக கோப்பை தொடர் 2015 :
2015 இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இரு தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் மட்டுமல்லாது ஒரு மாற்று தொடக்க வீரராக ரஹானே தேர்வு செய்யப்பட்டார். மிடில் ஆர்டரில் தோனி, ரஹானே மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெற்றனர். இந்த இந்திய அணியில் எந்த ஒரு மாற்று விக்கெட் கீப்பரும் இடம்பெறவில்லை. மேலும், அணியில் ஒரே ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டரான ஸ்டூவர்ட் பின்னி இடம் பெற்றார். பவுலிங் ஆல்ரவுண்டர்களாக அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகிய மூவர் இடம் பெற்றனர். வேகப்பந்துவீச்சில் உமேஷ் யாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் தேர்வாகினர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டி வரை இந்திய அணியின் பவுலிங் நன்றாகவே இருந்தது.
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, யுஏஇ, மேற்கு இந்திய தீவுகள், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று காலிறுதியில் வங்கதேச அணியை தோற்கடித்தது, இந்திய அணி. ஆனால், அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. அந்த தொடரில் ஷிகர் தவான் 8 போட்டிகளில் விளையாடி 412 ரன்களை குவித்து இந்திய அணியில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். பவுலிங்கில் 18 விக்கெட்களை கைப்பற்றி உமேஷ் யாதவ் இந்தியாவின் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
2015 உலகக் கோப்பை தொடருக்கான அணி வருமாறு:
எம்.எஸ்.தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரகானே, சுரேஷ் ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி, அக்சர் பட்டேல், ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி மொகித் சர்மா மற்றும் அம்பத்தி ராயுடு.
#3.உலகக் கோப்பை தொடர் 2011 :
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தொடக்க வீரர்களான சேவாக்கும் சச்சினும் இடம் பெற்றனர். இதில் எந்த ஒரு மாற்று தொடக்க வீரரும் இடம்பெறவில்லை. இளம் வீரரான விராட் கோலி, கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி மற்றும் யூசுப் பதான் ஆகியோரைக் கொண்ட வலிமையான மிடில் ஆர்டர் இடம்பெற்றது. யூசுப் பதான் மற்றும் யுவராஜ் என ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டவரும் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரும் இடம்பெற்றனர். இரு பவுலிங் ஆல்ரவுண்டர்களான அஸ்வினும் பியூஸ் சாவ்லாவும் இடம் பெற்றனர். இது மட்டுமல்லாது வேகப்பந்துவீச்சில் ஆசிஸ் நெஹரா, முனாஃப் படேல், ஜாகீர்கான், ஸ்ரீகாந்த் மற்றும் சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் ஆகியோரும் அணிக்கு தேர்வாகினர். கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை போலவே இந்த உலகக் கோப்பை தொடரிலும் எந்த ஒரு மாற்று விக்கெட் கீப்பரும் இடம்பெறவில்லை.
2011 உலகக் கோப்பை தொடருக்கான் அணி வருமாறு:
எம்.எஸ்.தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன்அஸ்வின், பியூஸ் சாவ்லா, ஜாகிர் கான், பிரவீன்குமார், ஆசிஸ் நெஹரா, முனாஃப் படேல் மற்றும் ஸ்ரீசாந்த்.