இங்கிலாந்தில் மே மாதம் 30ஆம் தேதி உலக கோப்பை தொடர் துவங்க இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு, இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் நாடுகள் 15 பேர் கொண்ட அணியை தொடர்ந்து அறிவித்துக் கொண்டு வருகின்றனர். அவ்வாறு, கடந்த வாரம் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் உலக கோப்பை தொடருக்கான அணிகளை அறிவித்திருந்தன. அந்த வகையில் இன்று உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை குல்பாதின் நயிப் வழிநடத்த உள்ளார். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த ஆல்ரவுண்டர்களான ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோரும் 15 பேர் கொண்ட உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன்னர், ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய ஆஸ்கர் ஆப்கான் அணியில் ஒரு வீரராக தொடர்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்ற வீரர்களான ரிஸ்ட் ஸ்பின்னர் ஜாகிர் கான், வேகப்பந்து வீச்சாளர்களான சபூர் ஜாத்ரன், ஃபரீத் அகமது மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜாவித் அகமதி ஆகிய நால்வர் இந்த உலக கோப்பை தொடரில் இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தான் அணியின் தேர்வுக்குழு கடந்த ஆறு மாத காலமாக வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் ஃபிட்னஸை கருத்திற்கொண்டு இந்த 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்த நீண்டகால தொடரின் அங்கம் வகிக்கும் விக்கெட் கீப்பரான முகமது ஷேசாத்திற்கு மாற்று விக்கெட் கீப்பராக இளம் வீரர் இகிராம் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அணிக்கு மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஹமித் ஹாசன் திரும்பியுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தேர்வுக்குழுத் தலைவர் தவ்லத் கான் கூறியுள்ளார்.
அமித் ஹாசன் இனிவரும் பயிற்சி ஆட்டங்களில் தனது ஃபார்மை தொடர்வார் எனவும் தவ்லத் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்தார். மேலும், அதே ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி20 தொடரிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி ஜூன் ஒன்றாம் தேதி பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி வருமாறு,
குல்பாதின் நயிப் (கேப்டன்) , அகமது ஷேசாத் (விக்கெட் கீப்பர்), நூர் அலி, ஹஸ்ரத்துல்லாஹ் ஜாஜை, ரஹ்மத் ஷா, அஸ்கர் அஃப்கன், ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிடி, நஜிபுல்லாஹ் ஜாட்ரன், சமியுல்லாஹ் ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், டௌலத் ஜாட்ரன், அஃப்டாப் ஆலம், ஹமித் ஹாசன் மற்றும் முஜீப் உர் ரஹ்மான்.