உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே 29ம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்குகின்றன. உலகக் கோப்பையில் விளையாடும் அணிகள் 15 பேர் கொண்ட தங்கள் அணியை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் ஏப்ரல் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அணிகளை அந்தந்த நாடுகள் தற்போது அறிவித்து வருகின்றன. இந்தியா தனது உலககோப்பையில் விளையாடும் தங்கள் அணியை இன்று அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஆளாக நியூசிலாந்து அணி உலக கோப்பையில் விளையாடும் தங்கள் அணியை அறிவித்தது. தற்போது இரண்டாவது அணியாக நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பையில் விளையாடும் தங்கள் அணியின் விபரத்தை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் லீக் போட்டியில் ஜூன் ஒன்றாம் தேதி பிரிஸ்டாலில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட அந்த அணிக்கு ஆரோன் பின்ச் தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்ட வீரர்களான ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வார்னரும் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தனர்.
பேட்ஸ்மேன்கள் ஆக உஸ்மான் கவாஜா, ஆரோன் பின்ச்,ஸ்டீவ் ஸ்மித்,டேவிட்வார்னர் ஷான் மார்ஷ் ஆகியோரும் ஆல்ரவுண்டர்களாக கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரும் வேக பந்துவீச்சாளர்களாக மிச்செல் ஸ்டார்க் ,பேட் கம்மின்ஸ், ஜய் ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல், ஜேசன் பெஹ்ரன்டர்ஃப் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்களாக ஆடம் ஜாம்பா மற்றும் நாதன் லயன் ஆகியோரும் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரியும் சேர்க்கப்பட்டுள்ளனர். அணியில் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்பும் ஜோஷ் ஹேசில்வுட்டும் இடம் பெறாமல் போனது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது.
சமீபத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் அசத்திய ஆஷ்டன் டர்னருக்கும் உலககோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தனது உலககோப்பை ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜாவுக்கு இடமளிக்கவில்லை. ஆனால் அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்த உலககோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் கடைசியாக நடந்த இரண்டு தொடர்களிலும் நன்றாக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஷ் ஹேசில்வுட் பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் ஆகியோரை அணியில் சேர்த்திருந்தால் அணி இன்னும் பலமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இருந்தபோதிலும் இந்த அணி கோப்பையை வெல்லும் அளவுக்கு தகுதி படைத்ததாக விளங்குகிறது. உலககோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி பின்வருமாறு :
ஆரோன் பின்ச் (C), உஸ்மான் கவாஜா, கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரே (WK), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர் நைல், மிச்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜய் ரிச்சர்ட்சன், நாதன் லயன், ஆடம் ஜாம்பா, ஜேசன் பெஹ்ரன்டர்ஃப்