இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. ஏறக்குறைய அந்த 15 பேரில் 11 வீரர்கள் தங்களது இடத்தை தக்க வைத்த நிலையில் மீதமுள்ள நான்கு பேரில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்பதில் ரசிகர்களில் பலருக்கு சற்று குழப்பமும் சந்தேகமும் எழுந்துள்ளது.
நன்கு அறிந்த அந்த 11 பேர் கொண்ட கொண்ட இந்திய அணி:
விராத் கோலி(கே), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சமி, ஜஸ்ப்ரீத் பூம்ரா. ஒரு மாற்று தொடக்க வீரர், ஒரு மாற்று விக்கெட் கீப்பர், நான்காம் இடத்திற்கு தகுதியான வீரர் மற்றும் இரண்டாவது ஆல்ரவுண்டர் என அந்த நான்கு இடங்களுக்கு ஆறு பேர் கொண்ட வீரர்கள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். அவ்வாறு அந்த மீதமுள்ள நான்கு இடத்திற்கு போட்டியிடும் 6 வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.கே.எல்.ராகுல்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்த ராகுல் சமீபகால சர்வதேச போட்டிகளில் சற்று தடுமாறினார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் 2019 ஐபிஎல் சீசனில் மூன்று அரை சதம், ஒரு சதம் உள்பட மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி 335 ரன்களை குவித்து, இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார். இதன் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள கே.எல்.ராகுல் ஒரு மாற்று விக்கெட் கீப்பராகவும் மாற்று தொடக்க பேட்ஸ்மேன் ஆகவும் களமிறங்கும் திறமை உள்ளதால் இந்திய அணியில் இவருக்கான வாய்ப்புகள் அதிகம்.
#2.அம்பத்தி ராயுடு:
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடர்களில் நான்காம் இடத்திற்கு ராயுடு களமிறக்கப்பட்டார்.ஆரம்பத்தில் நன்கு விளையாடிய ராயுடு, பின்னர் சோபிக்க தவறியதால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவதில் சற்று குழப்பம் நீடித்து வருகிறது. நியூசிலாந்து தொடரில் ஒரு போட்டியில் 90 ரன்களை அடித்து ஆட்டத்தை வெற்றி பெற செய்த பின்னர், அடுத்து வந்த போட்டிகளில் இவரது ஃபார்ம் கேள்விக்குறியானது. 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 47.06 என்ற சராசரியுடன் 1694 ரன்களை குவித்துள்ளார். இவர் அணியில் இணைவாரா என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
3.தினேஷ் கார்த்திக் :
தற்போதைய இந்திய அணிக்கு ஒரு சிறந்த ஃபினிஷராகவும் ஒரு அனுபவம் கொண்ட மாற்று விக்கெட் கீப்பராகவும் செயல்படக்கூடியவர் தினேஷ் கார்த்திக். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். இருந்தாலும், உலக கோப்பை தொடரில் இவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தி வரும் தினேஷ் கார்த்திக், தேர்வாளர்களை கவரும் வகையில் இதுவரையும் ஒரு போட்டியில் கூட மிகச்சிறந்த இன்னிங்க்ஸை அளித்தது இல்லை. இதனாலே, இவர் அணியில் இடம் பெறுவாரா என்பதும் தெரியவில்லை.
#4.ரிஷப் பண்ட்:
கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி அணியின் தேர்வாளர்கள் கவர்ந்துள்ளார், இளம் வீரர் ரிஷப் பண்ட். ஆனால், குறுகிய கால போட்டிகளில் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். தனது ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் திறன் பெற்றிருக்கும் இவரை அணியில் இணைத்தால் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும். ஏற்கனவே, இந்திய அணியில் இடம் பெற காத்திருக்கும் மாற்று விக்கெட் கீப்பர்கள் ஆன ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே போட்டி நிலவி வருவதால் அனுபவத்தின் அடிப்படையிலும் இவருக்கான வாய்ப்புகள் குறைவுதான்.
#5.விஜய் சங்கர்:
இந்திய அணியின் நான்காம் இடத்திற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுலுக்கு ஒரு போட்டியாளராக திகழ்ந்து வருகிறார், தமிழகத்தை சேர்ந்த விஜய். நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் 18/4 மற்றும் 75 /4 என்ற நிலையில் இருந்த இந்திய அணியை தனது பேட்டிங்கால் தூக்கி நிறுத்தினார். மேலும், பவுலிங்கிலும் தனது தாக்கத்தை அவ்வப்போது வெளிக்கொணர்ந்து வருகிறார். இங்கிலாந்தில் உள்ள ஆடுகள தன்மையை பொறுத்து அணியில் ஆறாவது பவுலராக இவர் செயல்படுவார். மேலும், இவரது பேட்டிங் ஆட்டத்திறன் இங்கிலாந்தில் சற்று எடுபடும் எனவும் எதிர்பார்க்கலாம். அணியின் ஒரு மாற்று ஆல்ரவுண்டராகும் இவர் செயல்பட கூடியதால் இவருக்கான வாய்ப்புகள் சற்று அதிகம்தான்.
#6.ரவிந்திர ஜடேஜா:
குறுகியகால போட்டிகளில் குல்தீப் மற்றும் சாஹலின் வருகைக்கு பின்னர், தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கருதிய நிலையில் ஆசிய கோப்பை தொடரில் மீண்டு வந்து அற்புதமாக செயல்பட்டு தற்போதைய இந்திய அணியின் ஒரு சிறந்த பீல்டராகவும் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராகவும் ஜொலிக்கும் திறமை இவரிடம் உள்ளது. மேலும், 2013 மற்றும் 2017 ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் தனது துல்லியமான பந்துவீச்சு தாக்குதலால் எதிரணி வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமல்லாது 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்களை கைப்பற்றி "தங்க பந்து" விருதையும் வென்றார். இதன் அடிப்படையிலேயே அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இவருக்கு பிரகாசமாகி உள்ளன உள்ளன.