இந்திய கிரிக்கெட் வாரியம் 2019 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளின் அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி மார்ச் 23 அன்று லீக் போட்டிகள் தொடங்கி மே 5 அன்று முடிவடைகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளன.
ஆரம்பத்தில் பிசிசிஐ முதல் இரண்டு வாரங்களுக்கான அதாவது மார்ச் 23 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும் போட்டிக்கான அட்டவனையை மட்டுமே வெளியிட்டது. ஒவ்வொரு அணியும் தனது சொந்த மண்ணில் 7 போட்டிகளில் பங்குபெறுவது என்பது ஐபிஎல் விதிகளில் ஒன்றாகும்.
தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னை சிதம்பரம் ஆடுகளத்தில் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. லீக் போட்டிகள் மே-5 அன்று முடிவடைகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கான இடம் மற்றும் அட்டவனை ஏதும் வெளியிடப்படவில்லை.
2019 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை அடங்கிய கோப்பை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் போட்டி அட்டவணையில் மாற்றம் ஏற்படலாம். 2009 மற்றும் 2014 ஆகிய இரு சீசனும் தேர்தலினால் தென்னாப்பிரிக்கா (2009) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும்(2014) முழு தொடரும் நடந்தது. இவ்வருடம் மட்டுமே தேர்தலின் போதும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் ஐபிஎல் போட்டிகள் எங்கு நடந்தாலும் இந்திய ரசிகர்களின் ஆதரவு மட்டும் சிறிது கூட குறையாது. தங்களது விருப்பமான அணியை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ரசிகர்கள் சென்று விடுவர்.
2019 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கும் வீரர்களை வாங்கியுள்ளது. இவ்வருட ஐபிஎல் தொடர் எதிர்வரவிருக்கும் 2019 உலகக் கோப்பைக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக ஒவ்வொரு வீரர்களுக்கும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஐபிஎல் அணிகள் தங்களை மேம்படுத்த தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில சில மாற்றங்களும் ஒவ்வொரு அணிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியில் காயம் காரணமாக விலகியுள்ள கமலேஷ் நாகர் கோட்டி மற்றும் சிவம் மாவி ஆகியோருக்கு பதிலாக கே.சி.கரியப்பா மற்றும் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் பங்குபெற முடியாத டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் அவரவர் அணிகளுக்கு இந்த சீசனில் திரும்பியுள்ளனர். இந்த ஐபிஎல் தொடரை சரியாக பயன்படுத்திக் கொண்டு மீண்டும் சர்வதேச அணியில் இருவரும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வார போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மட்டும் அந்தந்த ஐபிஎல் அணிகளால் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் இந்திய ரசிகர்களும் 2019 ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகின்றனர். ஐபிஎல் தொடருக்கு பிறகு 2019 ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.