சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்ற இவர் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 (T20) தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
முன்னாள் தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான ஏபி டி’வில்லியர்ஸ் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபில் தொடர் பற்றி கூறியுள்ளார், தனது அணியான ஆர்சிபி (RCB) வீரர்கள் மற்றும் விராட் கோஹ்லியை சந்திக்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
சில மாதங்களுக்கு முன்பு தனது சர்வதேச ஒய்வை அறிவித்த டி’வில்லியர்ஸ் உலகம் முழுவதும் பல்வேறு டி20 தொடர்களில் பங்கேற்று வந்தாலும் ஐபில் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
RCB அணி கடந்த இரண்டு வருடங்களாக சொதப்பி வந்தாலும் அடுத்த வருடம், ஐபில் 12 ஆம் சீசனில் சிறப்பாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார். RCB அணி 2017ஆம் வருடம் 8ஆம் இடமும் 2018ஆம் ஆண்டு 6 ஆவது இடமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
"ஐபில் உலகில் மிகப்பெரிய T20 தொடராக உள்ளது, மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் உள்ள விராட் கோலி மற்றும் மீதமுள்ள குழு உறுப்பினர்களுடன் மீண்டும் சேர காத்திருக்கிறேன், 2018 ஆம் ஆண்டின் ஏமாற்றங்களை அழிக்க நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம்" என ஈஸ்பிஎன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"ஐபிலில் RCB வெற்றியை பெறும் திறன் கொண்டவை என அனைவருக்கும் தெரியும், ஆனால் இதுவரை நாங்கள் எல்லோருக்கும் அந்தளவுக்கு திறனைக் காட்ட இயலவில்லை, இருப்பினும் 2019 ஆம் ஆண்டில் நாங்கள் முழு திறனையும் வெளிபடுத்தி போட்டித்தன்மையுடன் இருப்போம் என நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.
இதுவரை RCB அணியின் சிறந்த தொடரானது 2009 மற்றும் 2016 ஆகும். இறுதிப்போட்டி வரை முன்னேறிய RCB 2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணிக்கு எதிராகவும் 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் இழந்தன.
டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும் போட்டி எங்கே நடைபெறும் என்பதை பொறுத்தே கோப்பை வெல்லும் வாய்ப்பும் அமையும். ஐபில் போட்டி நடைபெறும் தருணங்களில் இந்தியாவில் பொது தேர்தல் நடைபெறவிருப்பதால் 2019ஆம் ஆண்டின் ஐபில் தொடரானது வெளிநாடுகளில் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது போல் தென் ஆப்ரிக்க அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவும் வாய்ப்புள்ளது.
இவற்றை பற்றி டி வில்லியர்ஸ் கூறியதாவது : "அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களின் நிலையற்ற தன்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக, இந்தியாவில் ஐபில் அடுத்த ஆண்டு நடைபெறுமா என்பது சந்தேகமே. இருப்பினும், ஐபில் எப்பொழுதும் இந்தியாவில் நடக்கும், அற்புதமான ரசிகர்களின் கூட்டங்களை ஸ்டேடியங்களில் காணலாம், ஆகையால் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
"ஐபிஎல் போட்டிகளை 2009ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா நடத்தியது, அடுத்த ஆண்டு இந்தியாவில் போட்டியை நடத்த முடியாவிட்டால், அந்த போட்டிகள் தென்னாப்பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படலாம் என்று வதந்திகள் உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், PSLக்கு பின்பு மைதானப்பணியாளர்கள் சிறந்த முறையில் மைதானங்களை சீர்படுத்த வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம்."
2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் காரணமாக வழக்கத்திற்கு மாறாக இம்முறை ஐபில் போட்டிகள் விரைவாக தொடங்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.