விராட் கோலி தன்னை ஒரு சிறந்த இந்திய கேப்டன் என்பதை நிரூபிக்க வேண்டிய தருணமாகும். சிலர் விராட் கோலியின் கேப்டன்ஷீப் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விராட் கோலி ஒரு கேப்டனுக்கான முழு திறமையை கொண்டுள்ளார். இவர் ஒரு கேப்டனுக்கு உண்டான புதுமையான ஆளுமை திறன், உடனடி முடிவுகள், சக வீரர்களுக்கு சரியாக ஆதரவளித்தல் போன்ற தலைமைப் பண்பை கொண்டுள்ளார்.
விராட் தனது டெஸ்ட் கேப்டன்ஷீப்பை சரியாக நிருபித்துள்ளார். 2015ற்குப் பிறகு இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு டெஸ்ட் தொடர்களில் குறைந்தது ஒரு வெற்றிகளையாவது பெற்று விடுகிறார். இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து நீண்ட காலமாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அத்துடன் விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று பெரும் மைல்கல்லை அடைந்து சாதனை படைத்துள்ளது.
ஜனவரி 2017 அன்று மகேந்திர சிங் தோனி ஒருநாள்/டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதை கண்டு பெரும்பாலானோர் அதிர்ச்சியடைந்தனர். தோனி மோசமான தோல்விகளினால் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகவில்லை. 2016ல் பலவிதமான தொடர்களில் தோனியின் தலைமையில் வென்றுள்ளது இந்திய அணி. இருப்பினும் விராட் கோலியின் கேப்டன்ஷீப் 3 வகையான கிரிக்கெட்டிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கூட தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியிருக்கலாம்.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி பல தொடர்களில் வென்றுள்ளது. 2017 சேம்பியன் டிராபியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியதற்கு விராட் கோலியின் தவறான முடிவுகளே காரணம் என பல விமர்சனங்கள் எழுந்தன. 2018ல் நடந்த நிதாஷா டிராபி மற்றும் ஆசியக் கோப்பையில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது. 2019 உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி தனது சொந்த மண்ணில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மோதி முதல் இரு போட்டிகளில் மட்டுமே வென்றது. இதனால் விராட் கோலி கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.
தோனி தேர்வு செய்து கட்டமைத்து வைத்திருந்த அணியை விராட் கோலி கலைத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஆதரவு அளிக்கிறார் என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தோனி களத்தில் எடுக்கும் முடிவு சரியாக அமைந்து விடுகிறது. விராட் கோலி அதற்கான புகழை மட்டும் பெற்று கொள்கிறார் என்று அதிக நகைப்பிற்கு உள்ளாக்கப்பட்டார் விராட் கோலி. ஆனால் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பையில் விராட் கோலியின் முடிவுகள் மட்டுமே வலம் வந்து இந்திய அணிக்கு சரியாகவும் அமைந்து வருகிறது.
2017ல் இலங்கைக்கு இந்திய அணி ஒருநாள்/டி20 தொடர்களில் பங்கேற்க செல்வதற்கு முன்பாக விராட் கோலி கூறியதாவது, இந்திய கேப்டனாக சில போட்டிகளில் நான் தோல்வியடைந்தை குளித்து கவலை பட மாட்டேன், 2019 உலகக்கோப்பைக்கு ஒரு சிறந்த இந்திய அணியை தேடி கண்டுபிடிப்பேன் எனக் கூறினார். தோனி கேப்டனாக இருந்த போது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு, யுஜ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவை இந்திய அணிக்கு கொண்டு வந்தார். இவர் முடிவு சரியாக அமைந்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை அளித்தனர். துணைக்கண்டத்தில் மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்தியா தலைநிமிர்ந்து நடக்க உதவினர்.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்த ஒரே இந்திய கேப்டன் விராட் கோலி ஆவார். இவர் தொடர்ந்து இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரிட் பூம்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு அதிக ஆதரவு அளித்து வந்தார். இதன் மூலம் 2018ல் டெஸ்ட் வரலாற்றில் இந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் பல சாதனைகளை முறியடித்து சாதனை படைத்தனர்.
விராட் கோலி டெஸ்ட் அணியில் கட்டமைத்த வேகப்பந்து வீச்சு மூலம் 2019 உலகக்கோப்பை தொடருக்கு டெஸ்ட் அணியிலிருந்து இரு வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்து வர முடிந்தது.
கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஆரம்பத்தில் சொதப்பிய காரணத்திற்காகவும் விராட் கோலி நகைப்பிற்கு உள்ளானார். அத்துடன் 2018ல் மகேந்திர சிங் தோனி அணியிலிருந்து ஒரு தொடர் ஓய்வு அளிக்கப்பட்டதற்கும் விராட் கோலி கடுமையாக விமர்சனத்திற்கு ஆளானார். மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் கிரிக்கெடிலிருந்து சஸ்பென்ட் செய்யபோட்ட போது விராட் கோலி கடும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் 2019ன் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என இரு தொடர்களையும் கைப்பற்றிய காரணத்தால் விராட் கோலி ரசிகர்களின் நினைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
2018ல் நடந்த நிதாஷா டிராபியில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய விஜய் சங்கரை இந்திய அணியில் மீண்டும் சிறந்த ஆட்டத்திறனுடன் இடம்பெற்றார். கோலி அவரை நியூசிலாந்து தொடரில் சரியான பேட்டிங் மற்றும் பௌலிங் வரிசையில் களமிறக்கினார். விஜய் சங்கர் இதனை சரியாக பயன்படுத்தி கொண்டு தன்னை நிறுபித்தார்.
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது விராட் கோலியை அதிகம் புகழ்ந்து வருகிறது. இதற்கு காரணம் அவர் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்த சரியான இந்திய அணி மற்றும் மாற்று ஆட்டக்காரர்கள். உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக இரு வீரர்கள் விலகியிருந்தாலும் அதற்கு தகுந்த மாற்று ஆட்டக்காரர்ளை இந்தியா தற்போது கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வல்லுநர்களின் தற்போதைய கணிப்புப்படி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறந்த ஆட்டத்திறனை கொண்டு விளங்குகிறது. மகேந்திர சிங் தோனி, லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் மீண்டும் தங்களது இயல்பான ஆட்டத்திற்கு திரும்ப ஒரு கேப்டனாக விராட் கோலி பெரிதும் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒரு அணியை உடனடியாக மேம்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். விராட் கோலி இந்திய வீரர்களின் நெருக்கடி காலங்களில் துனை நின்று அவர்களுக்கு ஆதரவளித்து மீண்டும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெரிதும் உதவியுள்ளார். இந்திய அணியில் அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகின்றனர். இதற்கான புகழ் விராட் கோலியை சேரும் என்பதை நாம் மறந்திட கூடாது.