2019 உலகக்கோப்பை தொடரின் 40வது ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. மறுமுனையில் வங்கதேசம் இத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. பௌலர்களுக்கு சிறிது உதவாத இம்மைதானத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டனின் முடிவை நிருபிக்கும் வகையில் 180 ரன்கள் பார்டனர் ஷீப் செய்து விளையாடினர்.
ரோஹீத் சர்மா தனது 25வது சர்வதேச ஓடிஐ சதத்தை விளாசினார். அத்துடன் 2019 உலகக்கோப்பை தொடரில் 4வது சதத்தினை நிறைவு செய்தார். லோகேஷ் ராகுல் இவருக்கு ஆதரவளித்து 92 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். இருப்பினும் மிடில் ஓவரில் இந்திய பேட்டிங் மளுங்க, ரிஷப் பண்டின் 41 பந்துகளில் 48 ரன்களும், தோனியின் 33 பந்துகளில் 35 ரன்களும் இந்திய அணியின் இலக்கை 315ஆக உயர்த்தியது.
சேஸிங்கில் சிறப்பான இந்திய பந்துவீச்சை சமாளிக்க வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறி தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாஸ்பிரிட் பூம்ராவின் ஆரம்ப ஓவர்களை எதிர்கொள்ள மிகவும் தடுமாறினார்கள் வங்கதேச வீரர்கள். ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சை சற்று சமாளித்து வங்கதேசம் மீண்டெழுந்தபோது சரியான பேட்ஸ்மேன்கள் இல்லா காரணத்தால், இந்திய அணியின் வசம் வெற்றி வாய்ப்பு மாறியது.
சிறு கால இடைவெளியில் வங்கதேச நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறிய காரணத்தால் அந்த அணியால் மீள இயலவில்லை. ஷகிப் அல் ஹாசன் 72 பந்துகளில் 66 ரன்களை குவித்திருந்தாலும், 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஜாஸ்பிரிட் பூம்ரா 10 ஓவர்களை வீசி 55 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாம் இங்கு இப்போட்டியில் யாரும் அறிந்திராமல் நிகழ்த்தப்பட்ட சாதனைகளைப் பற்றி காண்போம்.
#1 இவ்வுலகக் கோப்பையில் பவர் பிளே ஓவரில் இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட்டது
பல்வேறு நகைப்பற்கு உள்ளாக்கப்பட்ட இந்திய அணியின் பவர்பிளே ரன்கள், தற்போது இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் மாற்றியமைத்து ஆரம்ப பந்திலிருந்தே அடித்து விளையாட ஆரம்பித்தனர். இரு தொடக்க ஆட்டக்காரர்களும் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டு முதல் பவர்பிளை ஓவர்களான முதல் 10 ஓவரில் 69 ரன்கள் குவித்தனர். இதுவே இவ்வருட உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அதிகபட்ச பவர்பிளே ரன்களாகும். இப்பவர்பிளேவில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசப்பட்டது.
#2 ஒரு உலகக்கோப்பை தொடரில் 500+ ரன்களை விளாசிய இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன்
ரோஹீத் சர்மா இவ்வுலகக்கோப்பை தொடரில் தனது சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி தொடர் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நான்கு சதங்களிலும் இவருக்கு பெரும் அதிர்ஷ்டம் இவருக்கு அமைந்துள்ளது. ஏனெனில் ஆரம்பத்திலேயே இவரது கேட்சை எதிரணி ஃபீல்டர்கள் தவறவிட்டுள்ளனர்.
2015 உலகக்கோப்பை தொடரில் குமார் சங்கக்காரா 4 சதங்களை விளாசியுள்ளார். இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு வீரரின் அதிகபட்ச சதங்களாகும். இந்த சாதனையை ரோஹீத் சர்மா சமன் செய்தார்.
அத்துடன் உலகக்கோப்பை தொடரில் 500+ ரன்களை அடித்த இரண்டாவது வீரர் ரோகித் சர்மா. இதற்கு முன் 1996ல் 523 ரன்களை சச்சின் டெண்டுல்கர் விளாசியுள்ளார். அத்துடன் 2003 உலகக்கோப்பை தொடரில் 673 ரன்களை சச்சின் குவித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா 544 ரன்களை உலகக்கோப்பை தொடரில் குவித்து அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.