நேற்று மான்செஸ்டரில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதிய போட்டியில் இந்திய அணி 125 என்ற அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது 2019 உலகக் கோப்பையின் 34வது போட்டியாகும்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி எவ்வித மாற்றமின்றியும், மேற்கிந்தியத் தீவுகளில் ஈவன் லீவிஸீற்கு பதிலாக சுனில் ஆம்ரீஸும், ஆஸ்லி நர்ஸிற்கு பதிலாக ஃபேபியன் ஆலனும் களமிறக்கப்பட்டனர். ஆரம்பத்திலேயே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கேமர் ரோச் வீசிய பந்தில் ஷை ஹோப்-டம் கேட்ச் ஆனார். பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி இனைந்து பார்டனர்ஷீப் அமைத்து விளையாடினர். கே.எல்.ராகுல் 48 ரன்கள் இருந்த போது ஜேஸன் ஹோல்டர் வீசிய வேகத்தில் வீழ்ந்தார்,
பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் சொற்ப ரன்களில் வெளியேறினர். மகேந்திர சிங் தோனி விராட் கோலியுடன் கைகோர்த்து நிலையான ஆட்டத்தை இந்தியாவிற்கு அளித்தார். விராட் கோலி 72 ரன்களின் தன் விக்கெட்டை இழந்த பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயர்த்தினார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. கேமார் ரோச் 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர், காட்ரேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஷை ஹோப் ஆரம்பத்திலே முகமது ஷமியின் வேகத்தில் வீழ்த்தப்பட்டனர். பொறுப்பான ஆட்டத்தை மேற்கொள்வார்கள் என எண்ணிய ஹட்மைர், பிராத்வெய்ட், ஜேஸன் ஹோல்டர் அனைவரும் ஏமாற்றினர். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் 34.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 143 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் யுஜ்வேந்திர சகால் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் & ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
விரிவான ரன் விவரம்: இந்தியா 268/7 (50), ( விராட் கோலி 72, தோனி 56*, கேமார் ரோஜ் 3/36)
மேற்கிந்திய தீவுகள் 143/10 (34.2), ( சுனில் ஆம்ரீஸ் 31, நிக்கலஸ் பூரான் 28, முகமது ஷமி 4/16)
முடிவு: இந்தியா 125 ரன் வித்தியாசத்தில் வெற்றி
நாம் இங்கு இப்போட்டியில் நிகழ்ந்த சில புள்ளி விவரங்களைப் பற்றி காண்போம்:
அணிகளின் புள்ளி விவரங்கள்:
இந்தியா:
இந்திய அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. இதுவே உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ரன்களாகும். 2011 உலகக்கோப்பை தொடரில் சென்னையில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான குழு சுற்றில் இந்தியா 49.1 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதுவே இந்திய அணியின் ஓடிஐ வரலாற்றில் அந்நிய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
மேற்கிந்திய தீவுகள்
மேற்கிந்திய தீவுகள் இந்திய அணியிடம் 143 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதுவே இந்திய அணிக்கு எதிராக உலகக்கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது குறைவான ரன்களாகும். 1983 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ஓவர்கள் முடிவில் 140 ரன்களுக்கு மேற்கிந்திய தீவு ஆல்-அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
வீரர்களின் புள்ளிவிவரங்கள்
மேற்கிந்திய தீவுகள்
இப்போட்டி கிறிஸ் கெய்லின் 454வது சர்வதேச போட்டியாகும். இதன்மூலம் ஷீவ்நரீன் சந்தர்பாலின் 454 சர்வதேச போட்டிகளின் சாதனையை சமன் செய்துள்ளார். கிறிஸ் கெய்ல் இன்னும் 1 சர்வதேச போட்டியில் பங்கேற்றால் மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
இந்தியா
விராட் கோலி அதிவேகமாக 20,000 சர்வதேச ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 12 வது வீரராக இப்பட்டியலில் இனைந்துள்ளார். இவர் 417 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 20,036 ரன்களை விளாசியுள்ளார். மேற்கிந்திய தீவுகளின் பிரைன் லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் 453 இன்னிங்ஸில் 20,000 ரன்களை கடந்து இந்த சாதனையை நீண்ட நாட்கள் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
விராட் கோலி 94வது 50+ ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துள்ளார். இதன் மூலம் ராகுல் டிராவிட் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்வசம் வைத்திருந்த 94, 50+ சாதனையை சமன் செய்தார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்களை குவித்துள்ளார். இவர் 143 முறை 50+ ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி தொடர்ந்து 4வது 50+ ரன்களை உலகக்கோப்பையில் விளாசியதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து நான்கு 50+ விளாசிய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். 1992 உலகக்கோப்பை தொடரில் இந்திய கேப்டன் முகமது அசாரூதின் மூன்று 50+ ரன்களை விளாசியுள்ளார்.
விராட் கோலியின் 72 ரன்கள் மூலம், உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் 1992 உலகக்கோப்பை தொடரில் முகமது அசாரூதின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 61 ரன்கள் குவித்திருந்தார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 6.2 ஓவர்கள் வீசி 16 ரன்களை அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். உலகக்கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவின் சிறப்பான பௌலிங் இதுவாகும். இதற்கு முன் 1983 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோஹீந்தர் அமர்நாத் 7 ஓவர்கள் வீசி 12 ரன்கள் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவின் இரண்டாவது சிறந்த பௌலிங் இதுவாகும். இதற்கு முன் சஞ்சீவ் சர்மா 1988ல் சார்ஜாவில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 7 .3 ஓவர்கள் வீசி 26 ரன்களை அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அந்நிய மண்ணில் இந்திய அணியின் அடுத்தடுத்த 10வது வெற்றியாகும். இந்த சாதனையை செய்த முதல் இந்திய கேப்டன் விராட் கோலி என்ற சாதனையை படைத்துள்ளார்.