உலககோப்பை தொடரானது நிறைவடைந்தது கிட்டத்தட்ட சில வாரங்களை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றினாலும் ரசிகர்களின் மனதளவில் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றது. இந்திய அணியை பொருத்தவரையில் லீக் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக ஆடி அசத்தியது. ஆனால் அரையிறுதியில் சொதப்பி வெளியேறியது. இந்திய வீரர்களைப் பொருத்தவரையில் பலரும் சிறப்பாக விளையாடி நம்மை கவர்ந்தனர். அவர்களின் ரேட்டிங் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
#தினேஷ் கார்த்திக் ( 1/10 )
இந்த உலககோப்பை அணியில் இவர் இடம் பெற்றதே பலருக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தோணிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இவர் செயல்படுவார் என கூறியே அணி நிர்வாகம் இவரை அணியில் சேர்த்தது. இவருக்கு முதல் 8 போட்டிகளில் அணியில் இடம் கிடைக்கவே இல்லை. கடைசியில் ஒருவழியாக கடைசி லீக் போட்டியில் வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இவருக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கடைசி கட்டத்தில் களமிறங்கிய இவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் நடைபெற்ற அரையிறுதியில் சிறப்பாக ஆடிய இவரின் ஆட்டம் நீஷம் பிடித்த அசாத்திய கேட்ச் ஆல் முடிவுக்கு வந்தது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இவர் பெரிய இன்னிங்ஸ்ல் எதுவும் ஆடவில்லை. எனவே இவருக்கு இந்த பட்டியலில் வெறும் ஒரு புள்ளிகள் மட்டுமே கிடைக்கிறது.
#கேதார் ஜாதவ் ( 2/10 )
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் நீங்காத இடம் பிடித்து வந்த கேதார் ஜாதவ் இந்த உலககோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் இவரது பந்துவீச்சு எடுபடவில்லை. பேட்டிங்கிலும் பெரிதாக இவர் விளையாடவில்லை. ஆரம்பத்தில் ஓரே ஓரு அரைசதம் மட்டும் விளாசினார். ஆனால் கடைசியில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இவரது மோசமான ஆட்டம் இவரை அணியை விட்டு நீக்குவதற்கு காரணமாக அமைந்தது. ஏதோ ஒரு அரைசதம் விளாசியதால் இவருக்கு இந்த பட்டியலில் 2 புள்ளிகள் வழங்கப்படுகிறது.
#விஜய் சங்கர் ( 3/10 )
பெரும் சர்ச்சைக்கு நடுவே அணியில் தேர்வு செய்யப்பட்டவர் தான் விஜய் சங்கர். பயிற்சி ஆட்டத்தில் இவர் சொதப்பியதால் இவருக்கு லீக் சுற்றின் ஆரம்ப போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஷிகர் தவான் காயம் காரணமாக விளகியதால் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. பேட்டிங்கிலும் இவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். பின் காயம் காரணமாக உலககோப்பை தொடரிலிருந்து விளகினார் இவர். இவருக்கு இந்த பட்டியலில் 3 புள்ளிகள் கிடைக்கிறது.
#குல்தீப் யாதவ் ( 4/10 )
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சொதப்பிய குல்தீப் யாதவ் உலககோப்பை தொடரில் மீண்டு வருவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இவருக்கு இந்த உலககோப்பை சாதகமாக அமையவில்லை லீக் போட்டிகளில் ஏழு போட்டிகளில் விளையாடிய இவர் வெறும் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதனால் அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
#ரிஷப் பந்த் ( 6/10 )
இளம் வீரரான இவர் ஷிகர் தவானுக்கு மாற்று வீரராகவே அணியில் இடம் பிடித்தார். கூடிய விரைவிலேயே இவருக்கு அணியில் நான்காம் இடத்தில் களமிறங்கும் வாய்ப்பும் கிடைத்தது. 4 போட்டிகளில் விளையாடிய இவர் 116 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 48 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அரையிறுதி போட்டியில் முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இவரின் நிலையான ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.
#புவனேஷ்வர் குமார் ( 7/10 )
இந்த உலககோப்பை தொடரில் ஆரம்ப போட்டிகளில் இவர் சிறப்பாக பந்துவீசினார். அதன் பின் காயம் காரணமாக சில போட்டிகளில் இவர் விளையாடவில்லை. இவரது இடத்தில் களமிறக்கப்பட்ட ஷமி சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். காயத்திலிருந்து மீண்ட இவர் அணியில் மீண்டும் விளையாடினார். ஆனால் பழையபடி பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இவர் சற்று தடுமாறினார். இருந்தாலும் இவர் விளையாடிய ஆறு போட்டிகளில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
#மகேந்திர சிங் தோனி ( 7/10 )
தோணிக்கு இந்த உலககோப்பை அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. இருந்தாலும் தான் களமிறங்கும் போட்டிகள் அனைத்திலும் தனது பங்கினை சிறப்பாக செய்து முடித்தார் இவர். இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடி இவர் 8 இன்னிங்ஸ்ல் இரண்டு அரைசதங்களுடன் 273 ரன்கள் குவித்தார். அரையிறுதிப் போட்டியில் இவரின் ரன் அவுட் ரசிகர்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.
#யுஸ்வேந்திர சகால் ( 7/10 )
சகாலுக்கு இந்த உலககோப்பை பெரிய அளவில் அமையவில்லை. முதல் போட்டியில் நான்கு விக்கெட்டுகளுடன் துவங்கிய இவர் அதன் பின் தடுமாறியே வந்தார். அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இவரது பந்துவீச்சு எடுபடவே இல்லை. ஆனாலும் அதன் பின் வந்த போட்டிகளில் ஒருசில விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தத்தில் எட்டு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
#ஹார்திக் பாண்டியா ( 8/10 )
இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஹார்திக் பாண்டியா. இந்த உலககோப்பை தொடரை பொருத்தவரையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என தனது ஆல்ரவுண்டர் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார் இவர். 9 இன்னிங்ஸ்ல் 226 ரன்கள் குவித்துள்ளார் இவர். இவரின் ஸ்ரைக்ரேட் 112. 43. பந்துவீச்சிலும் முக்கிய வீரர்களே விக்கெட் வீழ்த்த தடுமாறும் போது இவர் தனது பந்துவீச்சினால் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பந்துவீச்சில் இவர் மொத்தம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஒட்டுமொத்தத்தில் இந்த உலககோப்பை இவருக்கு சிறப்பானதாக அமைந்தது.
# முகமது ஷமி ( 8.5/10 )
இவருக்கு இந்த உலககோப்பை தொடரின் பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விளையாடாதததால் அவருக்கு பதில் ஷமிக்கு வாய்ப்பு கிடைத்து. அதன் பின் இந்திய அணியில் களமிறங்கிய இவர் வெறும் 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை அள்ளி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இருந்தாலும் இவருக்கு அரையிறுதி போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
#விராத்கோலி ( 8.5/10 )
இந்த உலககோப்பை தொடரானது இந்திய அணியின் கேப்டன் விராத்கோலிக்கு சிறப்பானதாகவே அமைந்துள்ளது. முதல் போட்டியில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த அவர் அடுத்து வந்த ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து அரைசதங்கள் அடித்து அசத்தினார். மொத்தம் விளையாடிய 9 இன்னிங்ஸ்ல் 443 ரன்கள் குவித்தார். அரையிறுதியில் சொதப்பியது மட்டுமே இவரிடம் குறையாக கூறமுடியும்.
#ரவீந்திர ஜடேஜா ( 9/10 )
இந்தாண்டு உலககோப்பை தொடரில் இந்திய ரசிகர்கள் அனைவரின் மனதையும் வென்ற ஒரே வீரர் ரவீந்திர ஜடேஜா தான். முதல் எட்டு லீக் போட்டிகளில் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவே இல்லை. இருந்தாலும் ஒருசில பேட்டிகளில் பீல்டிங்-ல் மாற்று வீரராக களமிறங்கி தனது திறமையை வெளிப்படுத்தினார். இறுதியில் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. அதில் சிறப்பாக பந்து வீசி அரையிறுதி போட்டிக்கு தன் இடத்தை நிரந்தரமாக்கினார். அரையிறுதி போட்டியில் இவரின் ஆட்டத்தை பற்றி சொல்ல வேண்டும் என அவசியம் இல்லை. அதைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் மட்டும் அன்று இல்லை என்றால் இந்தியா படுமோசமாக தோல்வியடைந்திருக்கும்.
#ஜாஸ்பிரித் பும்ரா ( 9.5/10 )
பும்ராவுக்கு இதுதான் முதல் உலககோப்பை. இதிலேயே தனது சிறப்பான பந்துவீச்சினால் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தார். இந்த தொடரில் ஒன்பது போட்டிகளில் விளையாடிய இவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்தார் இவர். ஐசிசி வெளியிட்ட உலககோப்பை கனவு அணியிலும் இவர் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
#ரோகித் சர்மா ( 10/10 )
இந்த பட்டியலில் இவர் தான் முதலிடம் பிடிப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இதில் பல சாதனைகளை படைத்தார் இவர். ஐந்து சதங்கள் அதிலும் ஒரு ஹாட்ரிக் சதம் என அசத்தினார் இவர். ஒன்பது போட்டிகளில் விளையாடிய இவர் 648 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தார். அரையிறுதி போட்டியில் இவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தது மட்டுமே ரசிகர்களை கலங்க வைத்தது.