கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மாற்றங்களை சந்தித்துள்ளது. டி20 கிரிக்கெட் அதிக அளவு புகழ் பெற்ற பின்னர் குறிப்பிட்ட ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்கள் அதிக புகழைப் பெற்றுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு அறிமுகம் என்பது தேவையில்லை, ஏனெனில் உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தொடராக கடந்த நூற்றாண்டிலிருந்து தற்போது வரை விளங்குகிறது.
தற்போது உலகக் கோப்பை சீசன் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே நிகழ்ந்த பல திருப்பங்களை கண்டு ரசிகர்கள் பிரமித்து போய் உள்ளனர். இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராகும் அத்துடன் தங்களது முழு ஆட்டத்திறனை வெளிபடுத்த கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். நாம் இங்கு இவ்வருட உலகக்கோப்பை சீசனில் உருவாக்கப்பட்ட 3 சாதனைகளை பற்றி காண்போம்.
#3 உலகக்கோப்பையில் அதிக 150+ தனிநபர் ரன்கள் - டேவிட் வார்னர் (2)
கிரிக்கெட் வரலாற்றில் டேவிட் வார்னர் ஒரு அதிரடி சிறந்த தொடக்க ஆட்டக்காரராக வலம் வருகிறார். 2009ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டேவிட் வார்னர் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை ஆஸ்திரேலியாவின் வழக்கமான வீரராக வலம் வருகிறார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடைசெய்யப்பட்ட டேவிட் வார்னர் தற்போது தனது இயல்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தி மீண்டும் இவ்வுலகத்திற்கு தன்னை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அறிவித்துள்ளார்.
2019 உலகக்கோப்பை தொடரில் 26வது போட்டியில் டேவிட் வார்னர் தனது 16வது ஓடிஐ சதத்தையும், 166 ரன்களையும் குவித்தார். இந்த அதிரடி ஆட்டக்காரர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக முறை (இரு முறை) 150+ ரன்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார். இவர் 2015 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக 178 ரன்களை அடித்தார்.
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 6 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக 150ற்கும் மேலான ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
#2 ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் - இயான் மோர்கன் (17 சிக்ஸர்கள்)
2019 உலகக்கோப்பை தொடரில் 24வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியில் இயான் மோர்கன் சிறப்பான சதம் விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 396 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கள் 36 பந்துகளில் தனது அரைசதத்தை குவித்தார். 57 பந்துகள் முடிவில் சதம் விளாசினார். இதன் மூலம் ஜாஸ் பட்லரின் அதிவேக உலகக் கோப்பை சதத்தின் சாதனையை முறியடித்தார். பட்லர் 75 பந்துகளுக்கு சதம் விளாசினார்.
இந்த அதிரடி ஆட்டக்காரர் 208.45 என்ற பிரம்மிப்பூட்டும் ஸ்ட்ரைக் ரேட்டுடன் 71 பந்துகளில் 148 ரன்களை குவித்தார். மோர்கன் இப்போட்டியில் 17 சிக்ஸரை விளாசித் தள்ளினார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும்.
இதற்கு முன் ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், ரோகித் சர்மா ஆகியோர் 16 சிக்ஸர்களை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் விளாசியுள்ளனர்.