2019 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த மேட்ச் 39ல் நடந்த போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானத்தில் மோதின. அதிக ரன்கள் குவிக்கப்பட்ட இப்போட்டியில் இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் இழந்த இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது.
ரன் விவரம்: இலங்கை 338/6, 50 ஓவர்கள் (ஏவிஸ்கா பெர்ணான்டோ 104, குசல் பெரரா 64; ஜேஸன் ஹோல்டர் 2/59)
மேற்கிந்திய தீவுகள் 315/9, 50 ஓவர்கள் (நிக்கோலஸ் பூரான் 118, ஃபேபியன் ஆலன் 51, லாசித் மலிங்கா 3/55)
முடிவு: மிகவும் பரபரப்பாக சென்ற இப்போட்டியில் இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
நாம் இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனை புள்ளி விவரங்களை பற்றி காண்போம்.
அணி புள்ளிவிவரங்கள்
இலங்கை
1) இப்போட்டியில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களை குவித்தது. இதுவே ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கையின் அதிகபட்ச ரன்களாகும். 2016ல் நடந்த நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 330 ரன்களை இலங்கை குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இலங்கை உலகக்கோப்பை வரலாற்றில் குவிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ரன் இலக்கு இதுவாகும். இதற்கு முன் 398 மற்றும் 363 ஆகிய ரன் இலக்கை இலங்கை குவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள்
1) மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை குவித்தது. உலகக்கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளால் இரண்டாவது இன்னிங்ஸில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். 2007 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஸ்டே. ஜார்ஜ் மைதானத்தில் 289 ரன்கள் குவிக்கப்பட்டதே இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகளின் முந்தைய ரன்களாக இருந்தது. இதற்கிடையில் இலங்கைக்கு எதிராக 315 ரன்கள் குவிக்கப்பட்டது, உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் குவிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் 1987ல் கராச்சியில் நடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக 2வது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 360 ரன்கள் குவித்துள்ளது.
2) 2019 உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இது 6வது தோல்வியாகும். இந்த அணியின் உலகக்கோப்பை வரலாற்றில் இம்முறைதான் அதிக தோல்விகளை சந்தித்துள்ளது. இதற்கு முன் 2007 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் 5 தோல்விகளை சந்தித்து இருந்தது.
வீரர்களின் சாதனை புள்ளிவிவரங்கள்
மேற்கிந்திய தீவுகள்
மேற்கிந்திய சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தமாக 455 சர்வதேச போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக களமிறங்கியுள்ளார். இதற்கு முன்னர் 454 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்த ஷீவரின் சந்தர்பால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர், 100 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் மேற்கிந்தியத் தீவுகளின் ஓடிஐ கேப்டன் மற்றும் ஒட்டுமொத்தமாக 4வது ஓடிஐ கேப்டனாக வலம் வருகிறார். இவருக்கு முன் வாஸிம் அக்ரம்(பாகிஸ்தான்) 158 விக்கெட்டுகள், ஷான் பொல்லாக் (தென்னாப்பிரிக்கா, ஐசிசி ஆப்பிரிக்கா XI) 134 விக்கெட்டுகள், இம்ரான் கான் (பாகிஸ்தான்) 131 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் 3 இடங்களை வகிக்கின்றனர்.
உலகக்கோப்பையில் இளம் வயதில் சதம் குவித்த இரண்டாவது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரான். இவர் தனது முதல் உலகக்கோப்பை சதத்தினை 23 வயது 272 நாட்களில் குவித்துள்ளார். கிறிஸ் கெய்ல் தனது 23 வயது 164 நாட்களிலே உலகக்கோப்பையில் சதமடித்துள்ளார்.
நிக்கோலஸ் பூரான் விளாசிய 118 ரன்களின் மூலம் உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரரால் குவிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ரன் இதுவாகும். 1987ல் கராச்சியில் நடந்த போட்டியில் சர் விவ் ரிச்சர்ட்-ஸால் 181 ரன்கள் இலங்கைக்கு எதிராக குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பூரானின் 118 ரன்கள் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் தனிநபர் ஒருவரால் உலகக்கோப்பையில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன் கோர்டன் கிரினிட்ஜ் பிர்மிங்காம் மைதானத்தில் 1979ல் இந்தியாவிற்கு எதிராக இரண்டாம் இன்னிங்ஸில் 106 ரன்கள் குவித்ததே அதிக ரன்களாக இருந்தது.
இலங்கை
ஏவிஸ்கா பெர்னாட்டோ உலகக்கோப்பை வரலாற்றில் இளம் வயதில் சதம் விளாசிய 3வது வீரர் ஆவார். இப்போட்டியில் பெர்னாட்டோ தனது 21 வயது 87 நாட்களிலே சதம் விளாசியுள்ளார். அயர்லாந்து பால் ஸ்டிரில்லிங் (20 வயது 196 நாட்கள்), ரிக்கி பாண்டிங் (21 வயது 76 நாட்கள்) ஆகியோர் இளம் வயதிலேயே உலகக்கோப்பையில் சதம் விளாசி முதல் இரு இடங்களில் உள்ளனர். இதற்கிடையில் ஏவிஸ்கா பெர்னாட்டோ இளம் வயதில் சர்வதேச ஓடிஐ-யில் சதம் குவித்த 3வது இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தினேஷ் சண்டிமால் (20 வயது 199 நாட்கள்), உப்புல் தரங்கா (20 வயது 212 நாட்கள்) ஆகியோர் இளம் வயதில் சர்வதேச ஓடிஐ-யில் சதம் குவித்துள்ளனர்.
ஏவிஸ்கா பெர்னாட்டோவின் 104 ரன்களின் மூலம் உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதம் விளாசிய இரண்டாவது இலங்கை பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். 2007ல் சனத் ஜெயசூர்யா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதம் விளாசியுள்ளார்.
இப்போட்டி முடிவில் லாசித் மலிங்கா உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வாஸீம் அக்ரம் உலகக்கோப்பையில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாதனயை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியா க்ளென் மெக்ராத், இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆகயோர் உலகக்கோப்பையில் 71 மற்றும் 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்ததாக வாஸிம் அக்ரம் மற்றும் மலிங்கா 55 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் உள்ளனர்.