கடந்த சனிக்கிழமையன்று சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இந்தியா மிகவும் தடுமாறி வென்றது. ஒரு சிறந்த இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் தன்னால் முடிந்த வரை கடும் நெருக்கடியை அளித்தது. இருப்பினும் இந்திய அணி தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் அந்த அணியை வீழ்த்தி தற்போது வரை ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாத அணியாக வலம் வருகிறது.
தற்போது இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டெஃபோர்ட் மைதானத்தில் வரும் வியாழனன்று எதிர்கொள்ள உள்ளது. கரேபியன் அணி(மேற்கிந்தியத் தீவுகள்) இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. எனவே அரையிறுதிக்கு தகுதி பெற மேற்கிந்தியத் தீவுகளுக்கு இப்போட்டி ஒரு வாழ்வா-சாவா ஆட்டம் போன்றதாகும்
மறுமுனையில் இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று இதுவரை தோல்வியை தழுவாத அணியாக புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானிற்கு எதிரான மோசமான இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் பதிலளித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
எதிர்வரும் இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் இம்மூன்று வீரர்களுக்கு எதிராகவும் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும்.
#3 ஷீம்ரன் ஹேட்மயர்
ஷீம்ரன் ஹேட்மயர் 2018ல் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் உலகக் கிரிக்கெட்டில் தன்னை அறிவித்துக் கொண்டார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஹேட்மயர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் இத்தொடரில் 51.2 சராசரியுடனும், 140 என்ற அபூர்வமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 259 ரன்களை குவித்து அனைவரையும் தனது அதிரடி ஆட்டத்தினால் பயமுறுத்தினார்
ஹேட்மயர் ஒரு சிறந்த இளம் கிரிக்கெட் வீரர். இவர் 2016ல் நடந்த 19வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டனாக இருந்து பின்னர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் கால் பதித்ததிலிருந்து தனது பெரும் பங்களிப்பை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அளித்து வருகிறார். 22 வயதான இளம் ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் ஹேட்மைர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவராவார். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் சமவிகிதத்தில் எதிர்கொள்ளும் திறமை கொண்டவர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகப்பெரிய சிக்ஸர்களை விளாசும் திறன் கொண்ட ஹேட்மைர் பௌலர்களுக்கு மிகவும் மோசமான கிரிக்கெட் வீரர். குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக பெரும் அதிரடி மன்னனாக உள்ளார். இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகிய இருவருக்கு எதிராகவும் அதிரடி பேட்டிங்கை இதற்கு முன் வெளிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.