2019 உலகக்கோப்பை தொடரானது ஜீலை 14 அன்றுடன் முடிவடைந்தது. 7 வாரங்கள் நடந்த இத்தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் முடிவடைந்தது. இங்கிலாந்து தனது முதல் உலகக்கோப்பையை வென்றுள்ளது. நியூசிலாந்து மீண்டும் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி சமனில் முடிந்த காரணத்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த காரணத்தால், இரு அணிகளும் விளாசிய பவுண்டரிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இங்கிலாந்திற்கு வெற்றி வழங்கப்பட்டது.
இவ்வருட உலகக்கோப்பை தொடர் முடிவில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிபடுத்தி பல புதிய சாதனைகளை கிரிக்கெட் வீரர்கள் படைத்துள்ளனர். அத்துடன் தங்களது அற்புதமான ஆட்டத்தால் பல புதிய மைல்கல்களை உருவாக்கியும் உள்ளனர்.
நாம் இங்கு 2019 உலகக்கோப்பை தொடரில் சாதனை புரிந்த மற்றும் தொடரின் புள்ளி விவரப் பட்டியலை பற்றி காண்போம்.
அதிக ரன்கள்
ரோகித் சர்மா 9 போட்டிகளில் 81 சராசரியுடன் 648 ரன்களை குவித்துள்ளார். இதில் 67 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கும். இவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் 10 போட்டிகளில் 647 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஷகிப் அல் ஹாசன் 8 போட்டிகளில் 606 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
அதிக விக்கெட்டுகள்
ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 10 போட்டிகளில் பங்கேற்று ஸ்டார்க் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி 2019 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் இரண்டு 3 விக்கெட்டுகளும், இரு 5 விக்கெட்டுகளும் அடங்கும்.
தொடர் ஆட்டநாயகன்
2019 உலகக்கோப்பை தொடர் ஆட்டநாயகன் விருதினை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்-ற்கு வழங்கப்பட்டது. இவர் மொத்தமாக 548 ரன்களை இவ்வுலகக்கோப்பை சீசனில் குவித்துள்ளார். அத்துடன் கேன் வில்லியம்சன் அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்தை அருமையாக வழிநடத்தினார்.
அதிக தனிநபர் ரன்கள்
ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வங்கதேசத்திற்கு எதிரான தகுதிச் சுற்றில் 166 ரன்களை தனி ஒருவராக விளாசினார். இதுவே 2019 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் தனிநபர் ஒருவரது அதிகபட்ச ரன்களாகும். இம்மைல்கல்லை அடைய 144 பந்துகளையே இவர் எடுத்துக் கொண்டார். இதில் 14 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்கும். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 153 ரன்களை விளாசி இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
சிறந்த பேட்டிங் சராசரி
வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் 8 போட்டிகளில் 86.57 பேட்டிங் சராசரியுடன் முதல் இடத்தையும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 10 போட்டிகளில் 82.57 பேட்டிங் சராசரியுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 9 போட்டிகளில் 81 பேட்டிங் சராசரியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
சிறந்த பௌலிங் சராசரி
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 13.79 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் இளம் வீரர் ஷாஹீன்ஷா அப்ரிடி 5 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி 14.62 சராசரியுடன் 2வது இடத்தில் உள்ளார்.
அதிக சிக்ஸர்கள்
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் மொத்தமாக 2019 உலகக்கோப்பை தொடரில் 22 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதுவே இவ்வருட உலகக்கோப்பையில் தனிநபர் ஒருவரது அதிகபட்ச சிக்ஸர்களாகும். அத்துடன் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக மட்டும் 17 சிக்ஸர்களை விளாசிய இவர், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் தனிநபர் ஒருவரது அதிகபட்ச சிக்ஸர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
அதிக பவுண்டரிகள்
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 9 போட்டிகளில் 67 பவுண்டரிகளை விளாசி 2019 உலகக்கோப்பை தொடரில் அதிக பவுண்டரியை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ இவரது இந்த சாதனையை 11 போட்டிகளில் பங்கேற்று சமன் செய்துள்ளார்.
தனிநபர் ஒருவரது அதிக சதங்கள்
ரோகித் சர்மா 2019 உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசி ஒரு புதிய மைல்கல்லை படைத்துள்ளார். இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் தனிநபர் ஒருவரது அதிகபட்ச சதங்களாகும். 2015 உலகக்கோப்பை தொடரில் குமார் சங்கக்காரா 4 சதங்களை ஒரு தொடரில் விளாசியிருந்தார். அந்த சாதனையை முறியடித்துள்ளார் ரோகித் சர்மா. இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 2019 உலகக்கோப்பை தொடரில் 3 சதங்களை விளாசியுள்ளார்.
தனிநபர் ஒருவரது அதிக அரைசதங்கள்
ஷகிப் அல் ஹாசன் 2019 உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 5 அரைசதங்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த மைல்கல்லை பென் ஸ்டோக்ஸ் 11 போட்டிகளில், விராட் கோலி 9 போட்டிகளிலும் எட்டியுள்ளனர்.