இந்திய அணிக்கு தற்போது இங்கிலாந்தில் பொற்காலமாக அமைந்துள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய 7 போட்டிகளில் பங்கேற்று 1ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஆனால் 2011 உலகக்கோப்பை தொடரை வென்ற முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது போல் தெரியவில்லை.
அனுபவ பேட்ஸ்மேன் & விக்கெட் கீப்பர் 2019 உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தோனி 47 சராசரியுடன் 188 ரன்களை அடித்துள்ளார். ஆனால் இவரது 81 என்ற ஸ்ட்ரைக் ரேட் பலரது பார்வையை உயர்த்த காரணமாக இருந்தது. ஆட்டத்தில் இவரது வெளிப்பாடு மிகவும் மங்கிய நிலையில் காணப்படுகிறது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இவர் விளையாடிய மெதுவான ஆட்டத்தினால் கிரிக்கெட் வள்ளுநர்கள் புயல் போல் தங்களது எதிர்ப்புகளை வெளிபடுத்தியுள்ளனர்.
ஆனால் தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டனின் ஆட்டத்திறனில் குறை கூறுபவர்களின் வாயை அடைக்கும் வகையில், மகேந்திர சிங் தோனி ஆட்டத்தின் நுணுக்கத்தை கணித்து விளையாடுகிறார் என்று கூறியுள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய அணியிலிருந்து தோனியை நீக்குவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவரது அனுபவம் இந்திய அணிக்கு எப்பொழுதுமே கைகொடுக்கும். தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ள ஒரே கேள்வி - தோனியை எந்த பேட்டிங் வரிசையில் களமிறக்கினால் இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்பதுதான்.
ஜார்கன்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் எப்பொழுதுமே ஆரம்பத்தில் நிலைத்து விளையாட சில மணி துளிகள் எடுத்துக் கொள்வார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நன்றாக நிலைத்து நின்று விளையாடத் தொடங்கி விட்டால் கால்பந்தைப் போல் கிரிக்கெட் பந்தை மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் விளாசித் தள்ளுவார். ஆனால் தற்போது உலகக் கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி களமிறங்கும் இடத்தில் ஆரம்ப பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டும்.
இதன் காரணமாகவே அவர் சற்று நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி பலரால் நகைப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். தோனியை நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறக்கப்பட்டால் கண்டிப்பாக இந்த கேள்விகள் அனைத்திற்குமே விடை கிடைத்து விடும். இவர் நம்பர் 4ல் தோனியின் சராசரி 56 ஆகும். ஆனால் தற்போது சராசரி 50. அதேபோல் நம்பர் 4ல் ஸ்ட்ரைக் ரேட் 91 ஆனால் தற்போதைய ஸ்ட்ரைக் ரேட் 87 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி பேட்டிங்கில் அதிகம் நம்பியிருப்பது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைத்தான். நம்பர் 4ல் ஒரு அனுபவ பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு அவசியம். இங்கிலாந்திற்கு எதிரான கடந்த போட்டியில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கிய இளம் வீரர் ரிஷப் பண்ட் மொத்தமாக 6 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். உலகக்கோப்பைக்கு முன்பாக இவர் இங்கிலாந்தில் ஒரு போட்டியில் கூட விளையாடியது இல்லை.
மேலும் 15 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரிஷப் பண்ட், ஒரு முறை கூட இங்கிலாந்து மைதானத்தில் நடந்த டி20 போட்டிகளில் களமிறக்கப்படவில்லை. அதிரடி இடதுகை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் போதுமான அளவிற்கு அனுபவம் நிரம்பியவராக இல்லை.
இவர் அதிரடி பேட்ஸ்மேனாக இருப்பதால் கடைநிலை ஓவர்களில் தன்னை நிறுபிக்கும் வகையில் சிறப்பான பங்களிப்பை இந்தியாவிற்கு அளித்து தன்னை நிறுபிக்கலாம். ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் கடைசி சில ஓவர்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரன்களை உயர்த்தலாம்.
தோனி நம்பர் 6 அல்லது அதற்கு மேல் உள்ள பேட்டிங் வரிசையில் எங்கு இறக்கினாலும் அவரது அதிரடி வெளிபடுவது மிகவும் சந்தேகம் தான். இந்த பேட்டிங் வரிசையில் களமிறக்கப்பட்டதால் தோனியின் சராசரி 46ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 87ஆகுவும் குறைந்து காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரது ஸ்ட்ரைக் ரேட் மேலும் குறைந்து 81ஆக மாறியுள்ளது. அவரது இயல்பான பேட்டிங் மீண்டும் வெளிவரவேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக தோனியை நம்பர் 4ல் களமிறக்கப்பட வேண்டும்.
கடைசியாக மகேந்திர சிங் தோனி இவ்வாண்டின் தொடக்கத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது 3வது ஒருநாள் போட்டியில் 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
இவரது இயல்பான அதிரடி ஆட்டம் மறைந்துபோக காரணமாக இருந்தது இந்திய அணி இவரை கிட்டத்தட்ட கடைநிலையில் களமிறக்கப்படுவதனால் தான். தோனியின் கடந்த கால நம்பர் 4 பேட்டிங் புள்ளிவிவரங்கள் இவரது ஆட்டத்திறனை எடுத்துரைக்கின்றன. நம்பர் 5 பேட்டிங்கில் இவரது ஆட்டம் நன்றாக இருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட் அவ்வளவாக சிறப்பானதாக இல்லை. எனவே தோனியின் அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவரை நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறக்கப்பட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும்.