2019 உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது. நிச்சயம் இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன தான் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக திகழும் இங்கிலாந்து மைதானங்கள் பந்துவீச்சாளர்களின் பங்களிப்புக்கும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 700 ரன்கள் சராசரியாக குவிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சில இன்னிங்சில் 400 ரன்களை கூட தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இது உலக கோப்பை தொடரில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.மிச்செல் ஸ்டார்க்:
2015 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை வீழ்த்தி 5வது முறையாக பட்டம் வெல்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர், மிச்செல் ஸ்டார்க். மேலும், இவரே அந்த தொடரில் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் .இவர் அந்த தொடரில் 22 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், அணியில் இடம்பெற்றுள்ள பேட் கம்மின்ஸ், நாதன் கவுல்டர் நிலே ஆகியோருடன் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பக்கபலமாக விளங்குவார் என எதிர்பார்க்கலாம். இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த பிறகு இவர் நீண்ட நாள் ஓய்வில் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு காயங்களையும் உடற்தகுதி பிரச்சனைகளையும் சமாளித்து வந்தார். அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் இம்முறை தனது பங்களிப்பினை அளிக்க தயாராகியுள்ளார்.
#2.பும்ரா:
ஜஸ்பிரீட் பும்ராவை சமீபத்தில் குறுகிய கால போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த வீரர் என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். சந்தேகத்திற்கிடமின்றி, 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக இவர் விளங்குவார். விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இவர் கூடுதல் பக்கபலமாக அமையவுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளின் கூட 19 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பாடுபட்டார். 2016 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் இவர், 85 ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளார். குறிப்பாக, ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை சிறப்பாக வீசி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குவார்.
#1.ரபாடா:
தென்னாபிரிக்காவின் இளம் வேகப்புயல் ஆன ரபாடா, சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நெருக்கடி நிலைகளை உணர்ந்து விக்கெட்களை கைப்பற்றும் இவர், உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார். மேலும், இவர் தனது முதலாவது ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்று 12 போட்டிகளில் விளையாடினார். அவற்றில் 25 விக்கெட்களை குவித்து தொடரின் அதிக விக்கெட்களைக் குவித்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். எனவே, தென் ஆப்பிரிக்கா அணி முதன் முறையாக உலக கோப்பையை வெல்வதற்கு இவரின் பங்களிப்பு நிச்சயம் உண்டு.