2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையானது இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற 10 அணிகள் மோதவுள்ளன.
ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் ஹாங்காங் போன்ற அணிகள் உலகக்கோப்பை தகுதி சுற்றில் வெளியேறின. தற்பொழுது உலகக்கோப்பைக்கு தேர்வாகியுள்ள அனைத்து அணிகளும் உலக கோப்பையை வெல்ல தனது பலவீனங்களை சரி செய்து வருகிறது.
2019 ஆம் அண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையானது 12 ஆவது உலகக்கோப்பையாகும். இம்முறை கலந்துகொண்ட 10 அணிகளும் மிகவும் திறமை வாய்ந்த அணிகளாக இருப்பதால் அனல் பறக்கும் போட்டிகளுக்கு பஞ்சமிருக்காது.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் தடையினால் அந்த அணி பேட்டிங்கில் மிகவும் சொதப்பி வருகின்றன. தென் ஆப்ரிக்க அணியில் டிவில்லியர்ஸ் ஒய்வு பெற்றது அந்த அணிக்கு தாக்கத்தை எற்படுத்தியது.
ஒருசில அணிகள் முன்னனி வீரர்கள் இல்லாமல் தவித்தாலும், மற்ற அணிகள் தொடர்ந்து சிறந்து செயல்பட்டு வருகின்றன, இவற்றில் 2019 உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள 3 அணிகளை பற்றி பார்க்கலாம்.
#3 நியூசிலாந்து
நியூசிலாந்து அணி தனது நேர்மையான விளையாட்டின் மூலம் உலக அளவில் அதிக கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளனர். அதுமட்டுமின்றி தற்பொழுது நடந்து வரும் போட்டிகளில் வெற்றிகளை கண்டு வருகின்றன.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் நியூசிலாந்தின் மெக்குல்லம் அதிரடி ஆட்டம் மறக்க முடியாத ஒன்றாகும். அதனுடன் அவர் ஒய்வு பெற்ற பின்பு, வில்லியம்சன் வெற்றிகரமாக அணியை வழிநடத்தி வருகிறார்.
நியூசிலாந்து அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மென்களான டெய்லர், வில்லியம்சன் மற்றும் குப்டில் போன்ற வீரர்கள் இருப்பதால் எந்தவொரு கடுமையான சூழ்நிலைகளிலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார்கள் என நம்பலாம். அதுமட்டுமின்றி பவுலிங்கில் பௌல்ட் மற்றும் சௌதீ வேகம் எந்த அணியையும் சாய்க்கும் திறமை பெற்றவரகள். மேலும் முன்ரோ, சன்ட்னர் மற்றும் கிரான்ட்ஹோம் போன்ற வீரர்கள் அணிக்கு கூடுதல் பலம் சேர்கின்றனர்.
அனைத்து திறமையும் கொண்ட இந்த அணி பீல்டிங்கிலும் சளைத்தவர்கள் இல்லை, தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இந்த அணி 2019ஆம் ஆண்டு தனது உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க காத்திருக்கின்றன.
#2 இந்தியா
2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பையில் இந்திய அணி விராட் கோஹ்லி தலைமையில் பங்கேற்க்கவுள்ளது. இந்திய துணைகண்டத்தில் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்க பட்ட இந்திய அணி, தென் ஆப்ரிக்கவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
முந்தைய காலங்களில் வெளிநாடுகளில் இந்தியாவின் பந்துவீச்சு மோசமாகவே இருத்தது. பும்ரா, குல்தீப் மற்றும் சஹால் வருகைக்கு பின்பு பந்துவீச்சு மிகவும் வலுப்பெற்றன. மூவரும் இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்கள். இவர்களுடன் புவனேஸ்வர குமார், ஹார்திக் பாண்டியா, ஷமீ மற்றும் கலீல் இருப்பது அணிக்கு கூடுதல் பலம்.
பேட்டிங் என்பது எப்பொழுதும் இந்திய அணியின் பலமாகும். துவக்க வீரர்களாக களமிறங்கும் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் உலகின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராவர். அதுமட்டுமின்றி விராட் கோஹ்லி மற்றும் தோனி போன்றவர்கள் அணியில் இருப்பதால் மூன்றாவது முறை இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் என எதிர்பாக்கப்படுகிறது.
#1 இங்கிலாந்து
2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இங்கிலாந்து அணி அதன்பின்பு அதிரடி யுக்திகளை கையாண்டு உலகம் முழுவதும் வெற்றிகளை குவித்து வருகின்றது. இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவே சிறந்த அணியென அழைக்கப்படுகிறது.
குறிப்பாக சொந்த மண்ணில் வெற்றியை குவித்து வருகிறது . சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியை 5-0 என ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி வலுவான இந்திய அணியையும் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி சொந்த மண்ணில் வெல்ல முடியாத அணியாக வலம்வருகின்றது.
இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையானது ராய், ஹேல்ஸ், பேர்ஸ்டோ, ரூட், பட்லர் போன்ற திறமை வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது. சூழற்ப்பந்துவீச்சில் ரஷீத் மற்றும் மொயின் அலி இருப்பது கூடுதல் பலமாகும்.
இதுமட்டுமின்றி சிறந்த ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் அணியில் இருப்பவை போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டின் உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.