ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒரு முண்ணணி அணியாக திகழும். ஆனால் அனைத்து முறையும் ஏதாவது ஓரிடத்தில் தவறு செய்து வெளியேறி விடும். 8 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்கா 4 முறை அரையிறுதியிலும், 2 முறை காலிறுதியிலும் வெளியேறியுள்ளது.
தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை வரலாற்றில் குழு சுற்றில் ஒரு முறை வெளியேறியுள்ளது. தற்போது 2019 உலகக்கோப்பையுடன் சேர்த்தால் இரண்டாவது முறையாகும். மற்றொரு முறை டக் வொர்த் லிவிஸ் விதிப்படி இலங்கை மண்ணில் நடந்த 2003 உலகக் கோப்பையில் வெளியேறியுள்ளது.
அனைத்து முறையுமே தென்னாப்பிரிக்கா நெருக்கடியை சந்தித்துள்ளது. உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் தென்னாப்பிரிக்கா வெளியேறி வருவதால் "ஷோக்கர்" என்ற பெயர் அந்த அணிக்கு உண்டு. இருப்பினும் தற்போது அந்த பெயரே நீடிக்கும் விதமாக தகுதிச் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா விளையாடியுள்ள 7 போட்டிகளில் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானிற்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்காவின் மோசமான ஆட்டத்திறன் 2019ல் வெளிப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரு போட்டிகள் தென்னாப்பிரிக்காவிற்கு மீதமுள்ளது. இந்த அணி இரு போட்டிகளிலும் ஆறுதல் வெற்றிக்காவது போராட வாய்ப்புள்ளது.
உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக சிறந்த ஆட்டத்திறன் கொண்ட வீரர்களையும், சரியான பேட்டிங் & பௌலிங் கொண்ட அணியாகவும் கொண்ட அணி எவ்வாறு இப்படி மாறியது ? அதற்கான காரணங்கள் இங்கே!
#1 காயங்கள்
தென்னாப்பிரிக்க அணி ஆரம்பத்தில் ஒரு வலிமையான வீரர்களை கொண்டு திகழ்ந்தது. ஆச்சரியமிளிக்கும் விதமாக இடம்பெற்ற ஆன்ரிஜ் நோர்ட்ஜே ரூல்ட் அவுட் ஆனார். கிறிஸ் மோரிஸ் மாற்று வீரராக இடம்பெற்றார்.
டேல் ஸ்டேய்ன் 10 வருடங்களுக்கு மேலாக தென்னாப்பிரிக்கா அணியில் சிறந்த பங்களிப்பை அளித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக பல காய இன்னல்களை சந்தித்து தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றார். இருப்பினும் அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்திற்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறவில்லை. பின்னர் மூன்றாவது போட்டியில் உலகக்கோப்பை தொடர் முழுவதிலிருந்தும் வெளியேறினார்.
லுங்கி நிகிடி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். இதனால் சில போட்டிகளிலிருந்து விலகினார். தென்னாப்பிரிக்கா இந்தியாவிற்கு எதிராக மோதும் போது தனது முதல் தர வேகப்பந்து வீச்சாளரை இழந்தது. இதனால் சில முக்கிய போட்டிகளில் காகிஸோ ரபாடாவிற்கு பந்துவீச்சில் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் தொடர் தோல்விகளை சந்தித்தது.
#2 மழுங்கிய வேகப்பந்து வீச்சு
தென்னாப்பிரிக்காவின் மிக வலிமையான வேகப்பந்து வீச்சு உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் மொத்தமாக 30 விக்கெட்டுகளை மட்டுமே தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்துள்ளனர். கிறிஸ் மோரிஸ் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து 25 சராசரியுடன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிரடி பந்துவீச்சை வெளிபடுத்திய காகிஸோ ரபாடா உலகக்கோப்பையில் அந்த ஆட்டத்திறனை வெளிபடுத்த தவறவிட்டார்.
ஆன்டில் பெலுக்வாயோ ஒரு சுமாரன பங்களிப்பையும், லுங்கி நிகிடி அதிக ரன்களை தனது பௌலிங்கில் அளித்து சில விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால் யாருமே கேப்டனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை. உதாரணத்திற்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணியில் உள்ள மிட்செல் ஸ்டார்க் & ஜாஸ்பிரிட் பூம்ராவின் பந்து வீச்சை போல் வேறு எவரது பந்துவீச்சும் அமையவில்லை.
வேகப்பந்து வீச்சின் பலவீனத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் எளிதாக ரன்களை குவிக்கும் வகையில் அமைந்தது. விக்கெட் வீழ்த்தும் திறன் வேகப்பந்து வீச்சாளர்களிடம் குறைந்ததால் அந்த அணியால் திட்டமிட்ட ஆட்டத்தை வெளிபடுத்த இயலவில்லை.