2019 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த மேட்ச் 40ல் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதின. இதில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் இந்த இலக்கை அடைய முடியாமல் 48 ஓவர்களில் 286 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இந்த வெற்றி மூலம் இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. மறுமுனையில் வங்கதேசம் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
ரன் விவரம்: இந்தியா 314/9 (50 ஓவர்கள்), (ரோகித் சர்மா 104, லோகேஷ் ராகுல் 77; முஷ்டபிசுர் ரகுமான் - 5/59)
வங்கதேசம் 286/10 (48 ஓவர்கள்), (ஷகிப் அல் ஹாசன் 66, முகமது ஷைஃப்புதீன் 51*, ஜாஸ்பிரிட் பூம்ரா- 4/55)
முடிவு: இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
நாம் இங்கு இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனை புள்ளிவிவரங்களைப் பற்றி காண்போம்.
அணியின் புள்ளிவிவரங்கள்
இந்தியா
இந்திய அணி இப்போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது. இதுவே உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். 2011 உலகக்கோப்பையில் தாக்காவில் நடந்த போட்டியில் இந்தியா 370 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக உள்ளது. அத்துடன் இரு அணிகளுக்கும் சொந்தமில்லா மைதானத்தில் இந்த ரன்களே அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் 2015ல் மெல்போர்னில் நடந்த போட்டியில் இந்தியா 302 ரன்கள் குவித்ததே அதிக ரன்களாக இருந்தது.
வங்கதேசம்
வங்கதேசம் இப்போட்டியில் 48 ஓவர்களில் 286 ரன்களை குவித்தது. தனது சொந்த மண்ணிற்கு வெளியே இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தின் அணியின் அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன் 2008ல் கராச்சியில் நடந்த போட்டியில் வங்கதேசம் 283 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. அத்துடன் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தின் அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
வீரர்களின் புள்ளிவிவரங்கள்
வங்கதேசம்
1) மஸ்ரஃப் மொர்டாஷா (214 போட்டிகள்), முஷீஃபிகுர் ரஹீம் (212 போட்டிகள்), ஷகிப் அல் ஹாசன் (205 போட்டிகள்) இந்த வரிசையில் 200 சர்வதேச ஓடிஐ போட்டிகளில் பங்கேற்ற வங்கதேச வீரர்கள் பட்டியலில் தமீம் இக்பால் 4வதாக இனைந்தார். இப்போட்டி தமீம் இக்பாலின் 200வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.
2) தமீம் இக்பால் 1018 சர்வதேச ரன்களை இந்தியாவிற்கு எதிராக குவித்துள்ளார். இதற்கு முன் முஷீஃபிகுர் ரஹீம் (1130 ரன்கள்) இந்தியாவிற்கு எதிராக 1000+ சர்வதேச ரன்களை அடித்திருந்தார்.
3) தற்போது நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை தொடரில் ஷகிப் அல் ஹாசன் 542 ரன்களையும், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் 500+ ரன்கள் மற்றும் 10+ விக்கெட்டுகளை ஒரே தொடரில் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 500+ ரன்களை குவித்த முதல் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹாசன்.
4) வங்கதேச இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஷ்டபிசுர் ரகுமானின் பௌலிங் 10-1-59-5 ஆகும். உலகக்கோப்பை வரலாற்றில் வங்கதேச வீரரின் இரண்டாவது சிறந்த பௌலிங் இதுவாகும். ஷகிப் அல் ஹாசன் இதே உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக 10-1-29-5 எடுத்திருந்தார். இதுவே உலகக்கோப்பையில் வங்கதேச வீரரின் சிறந்த பௌலிங் ஆகும்.
5) முஷ்டபிசுர் ரகுமான் இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 4வது முறையாக தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அப்துல் ரஷாக்கிற்கு பின்னர் இரண்டாவது வங்கதேச வீரராக முஷ்டபிசுர் ரகுமான் ஒருநாள் போட்டிகளில் 4 முறை தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மற்றொரு 5 விக்கெட்டுகளை ஒரு போட்டியில் இவர் வீழ்த்தினால் ஒரு புதிய சாதனையை வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் படைப்பார்.
6) இந்தியாவிற்கு எதிராக இதுவரை 3 முறை தலா 5 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார். அஹீப் ஜவாத் (பாகிஸ்தான்), பிரெட் லீ (ஆஸ்திரேலியா), இவர்களுக்குப் பிறகு முஷ்டபிசுர் ரகுமான் மூன்றாவது வீரராக ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக தலா 5 விக்கெட்டுகளை குறைந்தது 3 முறை வீழ்த்தியுள்ளார்.