2019 புத்தாண்டுக்கு பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ஒருநாள் போட்டித் தொடர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சமீபத்தில் டெஸ்ட் தொடரை விளையாடி முடித்த தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இந்த ஒரு நாள் போட்டி தொடருக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும், பல அணிகளும் இந்த ஒருநாள் தொடர்களுக்கு அட்டவணையை தீட்டியவண்ணம் உள்ளனர். இந்த வருடம் இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அனைத்து அணியினரும் கோப்பையை வெல்லும் முனைப்பில் தங்களது அணியை தயாராக்கி வருகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பிரண்டன் மெக்கல்லம், மைக்கேல் கிளார்க், குமார் சங்ககாரா போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். அதுபோல, இந்த உலகக் கோப்பைத் தொடரோடு சர்வதேச போட்டிகளிலிருந்து லசித் மலிங்கா, ராஸ் டெய்லர், கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிர் போன்ற மூத்த வீரர்கள் தங்களது ஓய்வை அறிவிக்க போகிறார்கள்.
அவ்வாறு, இந்த உலகக் கோப்பைத் தொடரோடு ஓய்வுபெற விரும்பும் தலைசிறந்த மூன்று வீரர்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
#3 ஹசிம் அம்லா:
இந்தியாவில் உள்ள குஜராத்தில் பிறந்த ஹசிம் அம்லா, தென்னாப்பிரிக்கா அணிக்காக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சொந்த மண்ணிலும் சரி வெளிநாடுகளிலும் சரி ஈடு இணையற்ற பங்களிப்பை ஆற்றி வருகிறார். இதுவரை 169 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 7696 ரன்களைக் குவித்துள்ளார். இதில், 26 சதங்களும் 36 அரை சதங்களும் அடங்கும்.மேலும், இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2000, 3000, 4000, 5000, 6000, 7000 ரன்களை அதிவேகமாக கடந்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
2011 மற்றும் 2015-இல் நடந்த உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2015 உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் 159 குவித்தது, ஒரு போட்டியில் இவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். வயது மூப்பு காரணமாக அடுத்த 2023 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாததால் இந்த வருடம் நடைபெறப்போகும் உலக கோப்பை தொடரே இவரது கடைசி உலக கோப்பை தொடர் ஆகும்.
#2 டேல் ஸ்டெயின்:
இந்த தலைமுறையின் ஒரு ஆகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால், அது தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் தான். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷான் பொல்லாக்கின் சாதனையை முறியடித்தார். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியான காயங்களால் அணியில் இடம்பிடிக்காமல் தவித்து வந்தார், டேல் ஸ்டெயின்.ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பினார். மேலும் அந்த தொடரில் ஓரளவுக்கு சிறந்த பங்களிப்பையும் அளித்தார். 36 வயதான ஸ்டெயின், இந்த ஆண்டு நடைபெறப்போகும் உலக கோப்பை தொடரோடு சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று விடும் நோக்கத்தில் உள்ளார். இதுவரை 121 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள இவர், 192 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும், 6/39 என்பதே இவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.
#1 மகேந்திர சிங் தோனி:
ஐசிசியின் 3 வடிவிலான உலககோப்பை தொடர்களையும் வென்ற முதல் மற்றும் ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர், இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. மேலும், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தோனியின் பங்களிப்பு மற்றும் அவசியத்தை உணர்த்த இதுபோன்ற சாதனைகளே போதும்.இவர் இந்த வருடம் தனது நான்காவது உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளார். இதுபோன்ற நான்காவது உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது.
இதுவரை 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 10,279 ரன்கள் குவித்துள்ளார். உலகின் சிறந்த மனிதர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தோனி,கடந்த சில ஆண்டுகளாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மட்டுமே இறங்கி வருகிறார். இருப்பினும், இவரது அனுபவம் மற்றும் பங்களிப்பு இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் உந்துகோலாக இருக்கும். மேலும், அது ஆட்டத்தினை வெற்றிகரமாக முடிப்பதற்கும் உதவும். 37 வயதான தோனி அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாடுவது நிச்சயம் சந்தேகம்தான். எனவே இவருக்கும் இந்த உலகக் கோப்பைத் தொடர்தான் கடைசி தொடர் ஆகும்.