பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் செய்வது என்பது தனி கலை தான். சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் ரன்களை அடிப்பது போன்று, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் அடிக்க முடியாது. ஏனெனில் டெஸ்ட் போட்டி என்பது ஐந்து நாட்கள் நடைபெறும். எனவே நீண்ட நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அந்த சூழ்நிலையில் அதிரடியாக விளையாட நினைத்தால் அவுட்டாகி வெளியேற வேண்டியது தான். ஆனால் இவற்றையும் தாண்டி டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் பல பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதிலும் ஒருசில பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ஒரே நாளில் 280+ ரன்களை குவித்துள்ளனர். அந்த பேட்ஸ்மேன்களை பற்றி இங்கு காண்போம்.
#1) டொனால்ட் பிராட்மேன் ( 309 ரன்கள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சாதனை நாயகன் மற்றும் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பிராட்மேன். குறைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய ஒரே வீரர் இவர்தான். இவர் வெறும் 52 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். அதில் இவர் 29 சதங்கள் விளாசியுள்ளார். அது மட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக சராசரி வைத்துள்ள ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர் தான். டெஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 99.94 ஆகும். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதினர். இந்த டெஸ்ட் போட்டியில் பிராட்மேன் ஒரே நாளில் 309 ரன்கள் விளாசினார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#2) வாலி ஹம்மொண்ட் ( 295 ரன்கள் )
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியை சேர்ந்த வாலி ஹம்மொண்ட். 1933 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதினர். இந்த டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹம்மொண்ட், ஒரே நாளில் 295 ரன்கள் விளாசினார். இவர் மொத்தம் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 7249 ரன்களை அடித்துள்ளார். அதில் 22 சதங்களும், 24 அரை சதங்களும் அடங்கும். இவரும் இங்கிலாந்து அணிக்காக ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கூட விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#3) வீரேந்தர் சேவாக் ( 284 ரன்கள் )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக். இவர் களத்தில் வந்தவுடன் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாட கூடிய திறமை படைத்தவர். இவர் தனது அதிரடியின் மூலம் பல ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கூட அதிரடியாகத்தான் விளையாடுவார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மற்றும் இலங்கை அணிகள் மோதினர். இந்த டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய சேவாக், ஒரே நாளில் 284 ரன்களை விளாசினார். இவர் மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 8586 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.