எந்தவொரு பேட்ஸ்மேனும் களத்தில் தான் பேட்டிங் செய்ய வரும்போது தனது அணிக்காக ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே களமிறங்குகின்றனர். ஆனால் சிலர் துர்தஷ்டவசமாக ரன் எதும் எடுக்காமலே தனது விக்கெட்டினை பறிகொடுக்கின்றனர். டக் அவுட் ஆவதிலும் மிகவும் கொடுமையானது கோல்டன் டக் அவுட் ஆவது, அதாவது களமிறங்கிய முதல் பந்திலேயே தனது விக்கெட்டினை பறிகொடுப்பது. இந்த டக் அவுட் மூன்று வகையாக அழைக்கப்படுகிறது. டைமண்ட் டக், கோல்டன் டக் மற்றும் சில்வர் டக். களமிறங்கிய முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுப்பது கோல்டன் டக் மற்றும் இரண்டாவது பந்தில் விக்கெட்டினை பறிகொடுப்பது சில்வர் டக் ஆகும். இதில் மிகவும் அரிதான டக் அவுட் எதுவெனில் அது டைமண்ட் டக் ஆகும். டைமண்ட் டக் என்பது பேட்ஸ்மேன் களமிறங்கி ஒரு பந்தை கூட எதிர் கொள்ளாமல் தனது விக்கெட்டினை பறிகொடுப்பது. இந்த வகை டக் அவுட் பேட்ஸ்மேன் நான்-ஸ்ட்ரைக்கர் முனையிலிருந்து ரன் அவுட் ஆவதினால் ஏற்படுகிறது. இவ்வாறு ஒரு வீரர் பல வழிகளில் டக் அவுட் ஆகிறார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகமாக டக் அவுட் ஆன 3 வீரர்களை இங்கு காண்போம்.
#3 மகிலா ஜெயவர்த்தனே மற்றும் வாசிம் அக்ரம் – 28 டக் அவுட்
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிலா ஜெயவர்த்தனே மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் இருவரும் இந்த வரிசையில் மூன்றாம் இடம் வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சுமார் 28 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். ஜெயவர்த்தனே இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். இவர் இலங்கை அணிக்காக 418 இன்னிங்ஸ்ல் 12,000-க்கும் மேற்ப்பட்ட ரன்கள் குவித்தவர். இவரது சராசரி 33.38 ஆகும். இவர் 418 இன்னிங்ஸ்ல் 28 முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான வாசிம் அக்ரம் 3700 ரன்கள் குவித்துள்ளார். இவரது சராசரி 16.52 மற்றும் அதிகபட்ச ரன் 86. இவர் 280 ஆட்டங்களில் 28 முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
#2 சாயித் அப்ரிடி – 30 டக் அவுட்
பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் ஆல்ரவுண்டரான சாயித் அப்ரிடி இந்த வரிசையில் 30 டக் அவுட்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அறிமுக போட்டியிலேயே 37 பந்துகளில் சதமடித்த சாதனைக்கும் சொந்தக்காரர் இவரே. இவர் ஒருநாள் போட்டிகளில் 8,000-க்கும் மேற்ப்பட்ட ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 23.56 ஆகும் . இவரது அதிகபட்ச ரன் 124. இவர் 369 போட்டிகளில் 30 மூறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
#1 சனத் ஜெயசூர்யா – 34 டக் அவுட்
இலங்கை அணியின் அதிரடி துவக்க வீரரான சனத் ஜெயசூர்யா இந்த வரிசையில் முதலிடம் வகிக்கிறார். இலங்கை அணிக்காக பல ஆட்டங்கள் விளையாடி உள்ள இவர் 13,000-க்கும் மேற்ப்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 28 சதங்கள் விளாசியுள்ளார். இவர் 433 ஆட்டங்களில் 34 முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
இந்த வரிசையில் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் கிரிஷ் கெயில் மற்றும் லசித் மலிங்கா இருவரும் 24 டக் அவுட்களுடன் 5- வது இடத்தில் உள்ளனர்.