ஐபிஎல் 2019: தங்களது அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கும் 3 பிபிஎல் வீரர்கள் 

Ben Cutting
Ben Cutting

ஆஸ்திரேலியாவின் டி20 தொடரான பிக் பாஷ் லீக் முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை வரும் மார்ச் மாதம் 23ஆம் நாள் தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் மீது திரும்பியுள்ளது.

பிபிஎல் போட்டிகளில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். இந்த வீரர்கள் தங்களது பிபிஎல் ஃபார்மை ஐபிஎல் போட்டிகளிலும் தொடரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றில் தங்களது அணிக்கு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கும் 3 பிபிஎல் வீரர்களை பற்றி பார்க்கலாம்.

#3 பென் கட்டிங்

பிரிஸ்பேன் ஹிட்ஸ் அணிக்காக விளையாடி வரும் பென் கட்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். பிரிஸ்பேன் ஹிட்ஸ் அணி அரையிறுதி வரை முன்னேற முடியவில்லை எனினும் கட்டிங் சில போட்டிகளை ஹிட்ஸ் அணிக்கு வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தில் நடைபெற்ற பிபிஎல் தொடரில் கட்டிங் 249 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் இரண்டு அரை சதங்களும் உள்ளடங்கும். இதுமட்டுமின்றி, பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். பிரிஸ்பேன் ஹிட்ஸ் அணிக்கான கடைசி லீக் போட்டியில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, இந்நிலையில் பென் கட்டிங் 30 பந்துகளில் 87 ரன்கள் ரன்களை விளாசினார். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹிட்ஸ் அணி 10 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இதுவரை 18 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 220 ரன்கள் குவித்துள்ளார், இவரது சராசரி 24.44 ஆகும். 16 போட்டிகளில் பந்துவீசிய இவர் 9 விக்கெட்டுகளை மட்டுமே சாய்த்துள்ளார், சராசரி 44.67 ஆகும். 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் பென் கட்டிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தலாம்.

#2 ரஷித் கான்

Rashid Khan
Rashid Khan

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் பிபிஎல் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். உலகில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராவார் ரஷித் கான். இந்த வருடம் நடைபெற்ற பிபிஎல் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக பங்கேற்ற 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார், சராசரி 18.11 ஆகும். இந்த வருடம், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள பந்துவீச்சாளர் இவரே.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர் இதுவரை 31 போட்டிகளில் பங்கேற்றுள்ளார், 38 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள இவரது சராசரி 21.47 ஆகும்.

இவர் பந்துவீச்சு மட்டுமின்றி கடைசிக்கட்ட நேரங்களில் பேட்டிங்கிலும் ரன்களை சேர்ப்பதில் வல்லவர். இந்த வருடத்தின் பிபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்படலாம்.

#1 மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்

Marcus Stoinis
Marcus Stoinis

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்பொழுது உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் 13 போட்டிகளில் பங்கேற்ற இவர் 533 ரன்களை குவித்தார், இவற்றில் 4 அரைசதங்கள் உள்ளடங்கும். சராசரி 53.30 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 130.64 மற்றும் அதிகபட்சம் 81. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார் ஸ்டாய்னிஸ்.

பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்திய இவர் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சராசரி 16.14 ஆகும்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ள இவர் தனது பிபிஎல் ஆட்டத்தின் ஃபார்மை ஐபிஎல் போட்டிகளிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Fambeat Tamil